ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1

சபரிமலைக்குப் போவது என்று தீர்மானித்தவுடன், ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருந்தேன். பகுத்தறிவு பேசி, கூட வரும் ‘சாமிகள்’ கடுப்பாகி, நடுவழியில் நம்மை இறக்கிவிட்டு விடக்கூடாது. ஒரு பத்திரிக்கையாளனின் வேலையாக, அவர்கள் போகும் இடங்களுக்கும் எல்லாம் போவது, நடப்பவற்றை எல்லாம் கூர்ந்து கவனிப்பது, எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பகுத்தறிவாளனின் பார்வையில் எழுதுவது – இதில் தீர்மானமாக இருந்தேன். அப்படித்தான் ‘தேங்காய் உரசும்’ நிகழ்ச்சியை தவறவிடக் கூடாது என்று அருப்புக்கோட்டை கிளம்பினேன். காலையிலிருந்து கார் ஓட்டிக் கொண்டே இருப்பதால், உடம்பு முழுவதும் அசதியாக இருந்தது. இருந்தாலும் ஆர்வம் என்னை விடவில்லை.

எங்களது கிராமத்திலிருந்து அருப்புக்கோட்டைக்கு செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒரு வழி, சாத்தூர், விருதுநகர் வழியாக செல்வது; இன்னொரு வழி, கோவில்பட்டி, எட்டையபுரம் வழியாக செல்வது. இரண்டுக்கும் தூரம் அதிக வித்தியாசமில்லை. சாத்தூர் வழியாக செல்லும் பாதை நன்றாக இருக்கும் என்று சரவணன் சொன்னதால், அதே வழியைத் தேர்ந்தெடுத்தோம்.

சென்னை போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டி நொந்து போனவர்களுக்கு, ஊர்ப் பக்கம் ஓட்டுவது அவ்வளவு இலகுவாக இருக்கும். சாலையில் யாருமே இல்லாததுபோலத்தான் இருக்கும். பதற்றமில்லாமல் ஓட்டலாம்.

அருப்புக்கோட்டை போய்ச் சேர்ந்தபோது இரவு 8.30 மணி இருக்கலாம். நேரே இரவி மாமா வீட்டிற்குப் போனோம். மாமா ஒரு சவாரிக்காக மதுரை ஏர்போர்ட் போயிருந்தார். மலேசியாவில் வேலை பார்த்தவர், இப்போது ஊர் திரும்பி, சொந்தமாக டிராவல்ஸ் நடத்துகிறார். மாமா மலேசியாவில் வேலை பார்த்தபோது, அவரது மனைவி, குழந்தைகள் எங்களது கிராமத்தில்தான் இருந்தனர். அதனால் அவர்கள் அனைவருடனும் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு.

Saravanan and Ravi

(வீட்டில் பூஜை செய்யும் சரவணன் மற்றும் இரவி மாமா)

உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா என்று தெரியவில்லை. எந்த வயதில் ஊரிலிருந்து கிளம்பி வந்தேனோ, அந்த வயதில் நான் பார்த்த மனிதர்கள் அப்படியே எனது எண்ணத்தில் பதிந்திருப்பதும், இப்போது அவர்களைப் பார்க்கும்போது அதே வயதிலேயே அவர்களது தோற்றத்தை எதிர்பார்ப்பதும் நடக்கும். இரவி மாமாவின் பையன் இரண்டாவதோ, மூன்றாவதோ படித்துக் கொண்டிருப்பான், பெண்குழந்தை PreKG போய்க்   கொண்டிருப்பாள் என்ற எண்ணத்தோடேயே வீட்டிற்குள் நுழைந்தேன். பையன் இப்போது பொறியியல் கல்லூரியில் படிக்கிறான்; பெண் மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறாள். சட்டென அதிர்ச்சியாகி, ‘நாம் பார்த்து 15 ஆண்டுகளுக்கு முன்பு’ என்று உண்மை பொட்டில் அறைய, நிதானத்துக்கு வந்தேன். பல ஆண்டுகளுக்கு முன் ஊரில் சந்தித்தவர்களை இப்போது எங்கேயாவது பார்த்தால், இடையே இத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன என்பதும், இருவருக்கும் வயது கூடிவிட்டது என்பதும் உடனடியாக எனது நினைவுக்கு வருவதே இல்லை.

நான் ஆறு அல்லது ஏழு படித்துக் கொண்டிருந்தபோது, எனது கிராமத்தில் பக்கத்து வீட்டில் கௌரி என்ற குட்டிப் பெண் இருந்தாள். மிகவும் சுட்டி. பத்துமாதக் குழந்தையாக இருந்ததில் இருந்தே மிகவும் அழகாகப் பேசுவாள் (கிராமத்துக் குழந்தைகள் நிறைய மனிதர்களைப் பார்ப்பதால் சீக்கிரமாகவே பேசிவிடும்). பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் இருப்பாள். அவளோடு விளையாடுவதில் பொழுது போவதே தெரியாது. அவளை சில ஆண்டுகளுக்கு முன் பார்த்தபோது, கல்லூரிக்குப் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னாள். என்னால் நம்பவே முடியவில்லை. கௌரி சின்னப் பெண் அல்லவா, அதற்குள் கல்லூரி எப்படி போனாள் என்பது அதிர்ச்சியாகவே இருந்தது. எனக்கு வயதானதைவிட, அவளுக்கு வயதானதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அப்படித்தான் இரவி மாமாவின் குழந்தைகளைப் பார்த்தபோதும் இருந்தது. குழந்தைகள் குழந்தைகளாகவே எப்போதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அவர்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன். உடம்பில் ஒரு அதிர்வு இருந்து கொண்டே இருந்தது. காலையில் இருந்து கார் ஓட்டியதால், காருக்குள் இருக்கும் அதிர்வு, உடம்பிலும் தொற்றிக் கொண்டது. கொஞ்சம் தூங்கினால்தான் இந்த அதிர்வு சரியாகும்.

மாமா அரைமணி நேரத்தில் வந்துவிட்டார். குளித்துவிட்டு, மாமாவும், சரவணனும் பூஜை செய்தார்கள். பின்பு சிவன் கோயிலுக்கு தேங்காய் உரசக் கிளம்பினோம்.

முன்னால் சென்று கொண்டிருந்த வண்டியில் ஓட்டுனர் இருக்கை பக்கமாக சிகரெட் புகை வந்தது. பார்த்தால், அதில் அய்யப்ப சாமி ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். 

“சாமி சிகரெட் பிடிக்கலாமா?” என்று சரவணனிடம் கேட்டேன்.

“மனசு சுத்தமாக இருந்தால் போதும், சிகரெட் பிடிக்கலாம் என்று ஒரு சாமி சொன்னார்”

“அப்போ, அதே மனசு சுத்தத்தோடு ஒரு பீர் அடிக்கலாமா?”

அது பிடாது என்று சரவணன் சொல்லிவிட்டான். வித்தியாசமான விதிமுறையாக இருக்கிறதே!

கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். இரவு ஒன்பதரை மணிக்கும் கோயில் சுறுசுறுப்பாக இருந்தது. நிறைய அய்யப்ப சாமிகள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் தேங்காய்கள் குவிக்கப்பட்டிருந்தன. பத்து, இருபது பேர் அதை உரசிக் கொண்டிருந்தார்கள். தேங்காய் உரசுவது ஏன் என்று குரு சாமி எங்கள் இருவரையும் அழைத்து விளக்கினார்.

“மலைக்குச் செல்லும்போது இருமுடி கட்டிச் செல்வார்கள். அந்த இருமுடியில் அய்யப்பனுக்கு நைவேத்தியம் செய்ய நெய் எடுத்துச் செல்ல வேண்டும். தேங்காயின் ஒரு கண்ணில் ஓட்டை போட்டு, இளநீரைக் கொட்டிவிட்டு, அதில் காய்ச்சிய பசு நெய் ஊற்றி அடைத்துவிட வேண்டும். இதுதான் நெய்த் தேங்காய். தேங்காய் என்பது நமது உடல். உடலில் ஓடும் உயிர் போன்ற இரத்தம்தான் நெய். உடலையும், உயிரையும் அய்யப்பனுக்குக் காணிக்கையாக்குகிறோம். அப்படி காணிக்கையாக்கும் உடலில் முடி இருந்தால் நன்றாக இருக்குமா? அதனால்தான் அதனை நீக்குகிறோம்” என்பதுபோல் குரு சாமி சொன்னார்.

தேங்காயின் முடியைப் பிய்த்து எறிந்துவிட்டு, அதன்மீது ஒட்டிக் கொண்டு இருக்கும் நார்களை தரையில் உரசி நீக்க வேண்டும். மொட்டை அடித்த தலைபோல் தேங்காய் வழுவழு என்று இருக்க வேண்டும். அதுவரை தேங்காயை உரச வேண்டும். பெரும்பாலும் இந்த வேலை கன்னிசாமிகள் செய்ய வேண்டியதாகும். சபரிமலை செல்லும்வரை கன்னிசாமிகளுக்கு கூடுதல் வேலைகள் தரப்படுகின்றன. ஏறக்குறைய முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு நடைபெறும் ராகிங் போல என்று மற்ற சாமிகள் சொன்னார்கள். ஆனால் அநாவசியமாக எதுவும் செய்யச் சொல்வதில்லை. கூடுதல் வேலைகளும், கேலி, கிண்டல்களும் மட்டும்தான்.

தேங்காய் உரசும் சாமிகளுக்குப் பக்கத்தில் ஒரு காகிதத்தில் சேவு வைக்கப்பட்டிருந்தது. சேவு சாப்பிட்டுக் கொண்டே உரசிக் கொண்டிருந்தார்கள். நண்பனுக்கு உதவுவதற்காக நானும் உட்கார்ந்தேன்.

“குரு சாமி ரொம்பவும் விவரமானவர்; படிச்சவர். சபரிமலை போறதிலுள்ள ஒவ்வொரு காரியத்துக்கும் அவர்கிட்ட டீடெட்டயலா விளக்கங்கள் இருக்கும். தேங்காய் உரசுறது பத்தி எவ்வளவு அழகாக விளக்கினார், பார்த்தயா?” என்றான் சரவணன்.

“உண்மையில் அதுதான் காரணமாக இருக்கும்னு என்று நான் நம்பலை. நம்ம கிராமங்கள்லே கண்ணாடி பாட்டில்கள் எல்லாம் ரொம்ப லேட்டாத்தான் வந்துச்சி. நம்ம சின்னவயசுலே வீட்டிலே எல்லாமே மண்சட்டியிலேதான் வச்சிருப்பாங்க. அப்படி இருக்கும்போது 60, 70 வருசத்துக்கு முன்னாடி சபரிமலை போனவங்க, நெய்யை எதுலே கொண்டு போறதுன்னு யோசிச்சுருப்பாங்க… கல்லும், முள்ளுமா இருக்குற மலைப் பாதையிலே மண்சட்டியிலே கொண்டுபோனா, ஒரு வேளை சறுக்கி விழுந்தால், பானை உடைஞ்சி, நெய் கொட்டிரும். அய்யப்பனுக்கு உடைக்க எப்படியும் தேங்காய் கொண்டு போகனும். அதுலே ஓட்டை போட்டு, நெய் கொண்டுபோனா, தேங்காயும் கொண்டுபோன மாதிரி ஆச்சு… கொட்டாம நெய்யும் கொண்டு போன மாதிரி ஆச்சு. பிற்காலத்துலே, இதுக்கு உடலு, உயிரு கதையெல்லாம் சேர்ந்திருக்கும்” என்று பதில் சொன்னேன்.

குரு சாமியின் விசாலமான அறிவை மெச்சுவேன் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு நான் சொன்ன பதில் ஏற்றதாக இல்லை. ‘அவரைவிட நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?’ என்ற தொனியிலேயே அவன் பார்வை இருந்தது. நான் சேவுப் பக்கம் கவனத்தைத் திருப்பினேன்.

***

அருப்புக்கோட்டையில் மாணிக்கவாசகம் என்ற இடதுசாரித் தோழர் ஒருவர் இருக்கிறார். தமிழில் இலவச மென்பொருள் உருவாக்கத்திற்கும், அதன் பயன்பாட்டிற்கும் தன்னார்வமாக பங்கிழைப்பவர். கீற்றிற்கு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படும்போதெல்லாம், நான் தொந்தரவு செய்யும் நபர்களில் இவரும் ஒருவர். நீண்ட நாட்கள் நட்பில் இருந்தாலும், அவரை நேரில் சந்தித்தது இல்லை. அருப்புக்கோட்டை போகிறோம் என்றதும், தோழரை சந்திக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன்.

வண்டியில் வரும்போதே கைபேசியில் அழைத்து, அருப்புக்கோட்டை வருவதைச் சொன்னேன். “நிச்சயம் சந்திக்கலாம் தோழர்” என்று உற்சாகமாகச் சொன்னார். ஆனால் நாங்கள் கோயிலுக்கு வருவதற்கு இரவு ஒன்பதரை மணி ஆகிவிட்டது. “இரவு நேரத்தில் தோழரைத் தொந்தரவு செய்கிறோமோ” என்று சங்கடமாக இருந்தது. ஆனால் அவரை நேரில் சந்திக்கும் ஆவலும் இருந்தது. மறுபடியும் அழைத்தேன். அடுத்த 10 நிமிடத்தில் கோயில் பக்கம் வந்துவிட்டார்.

கீற்றிற்கு அவர் செய்த உதவிகளுக்கு நேரில் நன்றி சொன்னேன். தமிழில் மென்பொருள் உருவாக்கம் தொடர்பான திட்டங்கள் குறித்து தோழர் விளக்கினார். இரவு நேரம் என்பதால் அதிக நேரம் பேச முடியவில்லை. இன்னொரு நாள் சந்திக்கலாம் என்று விடைபெற்றோம்.

***

உடலுக்கு மயிர் பிடுங்கும் வேலையில் சரவணன் மும்முரமாக இருந்தான். மார்கழி மாதக் குளிரிலும் அவனுக்கு வியர்த்திருந்தது. நிறைய தேங்காய் உரசி, குரு சாமியிடம் ‘வெரி குட்’ வாங்கும் முனைப்பில் இருந்தான். நானும் ஒரு தேங்காய் உரசிக் கொடுத்தேன்.

saravanan with cocunut

(உரசிய தேங்காயுடன் சரவணன்)

11.30 மணிக்கு அங்கிருந்து விடைபெற்று ஊருக்குக் கிளம்பினோம். முன்னதாக இரண்டு பேரின் பயணச் செலவுக்கான பணத்தை, குழு பொருளாளரிடம் கொடுத்தோம்.

***

முதலில் பொங்கலுக்கு அடுத்த நாள் சபரிமலைக்கு கிளம்புவதாக இருந்தது. பின்னர் அதை பொங்கல் அன்று மாற்றினார்கள்.

பொங்கலை சிறப்பிக்க ஓடைப்பட்டி கிராமத்திற்கு நானும், ஹேமாவும் சென்றோம். பொங்கல் விழா என்றால் கிராமத்தில் கொண்டாடுவதுதான் எனக்குப் பிடிக்கும். அங்கேதான் வீட்டின்முன்னே, சூரியன் உதிக்கும்வேளையில் பொங்கல் வைப்பார்கள். கோவில்பட்டி போன்ற சிறுநகரங்களில் கூட பொங்கலை வீட்டினுள்ளே கேஸ் அடுப்பில்தான் வைக்கிறார்கள்.

தென்பகுதி கிராமங்களில் பொங்கல் என்றால், அவ்வளவு உற்சாகமிருக்கும். காலை சாப்பாடிற்கே ஆறுவகை கூட்டுப் பொரியல்களுடன், சாம்பார், காரக் குழம்பு, ரசம் என்று வைப்பார்கள். சில வீடுகளில் ஒன்பது வகை பொரியல்கூட இருக்கும். கிராமங்களில் ஒரு வகை பொரியலுடன் சாப்பிடுவதே மற்ற நாட்களில் அதிசயமாக இருக்கும்போது, ஒரே நாளில் இத்தனை வகை பொரியல்கள் என்றால் கொண்டாட்டமாக இருக்காதா?

இந்த ஆண்டு ஓடைப்பட்டியிலும் அப்படித்தான் இருந்தது. காலை 7  மணிக்கெல்லாம் பொங்கல் வைத்து, 7 வகை கூட்டுப் பொரியல்களுடன் விருந்துச் சோறு சாப்பிட்டோம். ஆம், காலையிலேயே சோறுதான். (எனது 20 வயது வரைக்கும் வீட்டில் மூன்று வேளையும் சோறுதான். என்றாவது சில நாட்கள்தான் இட்லி, தோசை இருக்கும். காலையில் சோறு, குழம்பு ஆக்கினால், இரவு வரை அதுதான். சில நாட்களில் மட்டும் இரவு புதிதாக சோறு வடிப்பார்கள். காலையில் இட்லி, சட்னி, மதியம் சோறு, குழம்பு, இரவு தோசை, சட்னி என்று 3 வேளையும் விதவிதமாக சமைக்க, கிராமத்துப் பெண்களுக்கு நேரம் இருப்பதில்லை. சோறு, குழம்பு, தயிர் தொட்டுக்கொள்ள ஊறுகாய், மோர் மிளகாய் வத்தல் அல்லது சேவு – இவைதான் எப்போதுமான மெனு கார்ட். அதனால் பொங்கலன்று இத்தனை வகைகளுடன் சாப்பிடுவது கொண்டாட்டமாக இருக்கும்.)

சோற்றை ஒரு வெட்டு வெட்டிவிட்டு, கிறக்கமாக நாற்காலியில் சாய்ந்தபோது, சரவணனிடம் இருந்து அழைப்பு வந்தது.

அவன் விடியற்காலையில் நான்கு மணிக்கெல்லாம் சுப்பையாபுரத்திலிருந்து கிளம்பி, இருமுடி கட்ட அருப்புக்கோட்டை சென்றுவிட்டான்.

“மதியம் ஒரு மணிக்கு சபரிமலைக்கு கிளம்புகிறோம். 11 மணிக்கெல்லாம் அருப்புக்கோட்டை வந்துவிடு” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

‘என்னடா இது? என்னை நம்பி, மாமியார் வேறு 9 வகை கூட்டு, பொரியல் பண்ணியிருக்கிறார்கள். அதை மதியத்திற்கு காலி செய்யலாம் என்று நினைத்திருந்தால், அய்யப்பன் அதில் வேட்டு வைத்துவிட்டார். பொங்கல் அன்றைக்கு நிம்மதியாக சாப்பிடக்கூட விடமாட்டேன்கிறார்களே’ என்று நொந்தபடி கோவில்பட்டி கிளம்பினேன். அங்குதான் துணிமணிகள் இருக்கின்றன. அவற்றை மூட்டை கட்டி, கோவில்பட்டியிலிருந்து அருப்புக்கோட்டை செல்ல வேண்டும்.

***

என் மாமியார் பழுத்த ஆத்திகவாதி. அமாவாசை, பிரதோசம், கிருத்திகை என அத்தனையும் பார்ப்பவர். திங்கள்கிழமை பிள்ளையார் கோயில், செவ்வாய்க்கிழமை செண்பகவல்லியம்மன் கோயில் என தினசரி அட்டவணை போட்டு, கோயில்களுக்குப் போய் வருபவர். கடைசிப் பையனுக்கு மூன்றாண்டுகள் கல்யாணம் தள்ளிப் போனதில், இவர் பண்ணிய பூஜை, புனஸ்காரங்களையும், வேண்டுதல்களையும் தாங்க முடியாமல், கோவில்பட்டியில் குடியிருந்த பல தெய்வங்கள் அந்த ஊரைவிட்டே ஓடிவிட்டதாக கேள்விப்பட்டேன்.

நான் சபரிமலைக்குப் போவதில் அநியாயத்திற்கு சந்தோஷப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

“எல்லோருக்கும் சேர்த்து நல்லா அய்யப்பனிடம் வேண்டிக்கிட்டு வாங்க” என்று சொன்னார்.

“நாளை மறுநாள் அய்யப்பனைப் பார்த்துருவேன். அன்னைக்கு ராத்திரி வீட்டிலே காசு, பணம் கொட்டப் போவுது. மூணு, நாலு சாக்குப் பைகளைத் தயாரா வச்சிருந்து, எல்லாத்தையும் கட்டி பத்திரப்படுத்துங்க..” என்று பதில் சொல்லிவிட்டு, அருப்புக்கோட்டை கிளம்பினேன்.

***

கோவில்பட்டி – அருப்புக்கோட்டை பேருந்து பயணம் ஒரு மணி நேரம்தான். அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்கு என்னை அழைத்துச் செல்வதற்கு ஆள் அனுப்பியிருந்தான் சரவணன்.

கோயிலில் இருமுடி கட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது.

“இருமுடியில் என்ன இருக்கும்?” என்று சீனியர் சாமி ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்.

“இரண்டு அறைகள் (இரண்டு கட்டு) கொண்ட நீளமான பை ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். முன்கட்டில் பூஜை சாமான்களையும், பின்கட்டில் பயணத்தின்போது தேவையான அரிசி போன்ற உணவுப் பண்டங்களையும் கட்ட வேண்டும். இதுதான் இருமுடி. இறை, இரை ஆகிய இரண்டும் இணைந்ததே வாழ்க்கைப் பயணம் என்பதை உணர்த்துவதே இருமுடி.

நெய்த் தேங்காய், காணிப் பொன்னு, மஞ்சள்பொடி, அரிசி, நல்ல மிளகு போன்றவற்றை முன் கட்டில் கட்ட வேண்டும். இப்போது சபரிமலை செல்பவர்கள் உணவுப் பொருட்களைத் தனியே கொண்டு சென்றுவிடுவதால், பின்கட்டிலும் பூஜைப் பொருட்களையே வைத்துக் கொள்கிறார்கள். 18ம் படியில் உடைப்பதற்கான தேங்காய், கற்பூரம், ஊதுபத்தி, விபூதி போன்றவற்றை பின் கட்டில் நிரப்பிக் கொள்ள வேண்டும்.

சபரிமலைக்கு கிளம்புகிற நாளன்று இருமுடி கட்டுவார்கள். குரு சாமிதான் இருமுடி கட்டுவார். கன்னிமூல கணபதியை வணங்கிவிட்டு இருமுடி கட்டும் வேலை தொடங்கப்படும். பெரும்பாலும் கோயில் அல்லது குரு சாமியின் வீட்டில் இவ்வேலை நடைபெறும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பூஜை செய்து, இருமுடி கட்ட வேண்டும். முதலில் முன் கட்டும், அடுத்து பின் கட்டும் கட்ட வேண்டும். அடுத்து இரண்டையும் சேர்த்துக் கட்டி, அதன் மீது குரு தட்சணைக்கான வெற்றிலை வைக்க வேண்டும். ஒவ்வொரு சாமியும் குரு சாமிக்கு தட்சணைப் பணமும் கொடுப்பார்கள்.

இடுப்பிலும், தலையிலும் துண்டு கட்டி, அதன்மீது போர்வை வைத்து, சரண கோஷம் முழங்க சாமிகளின் தலையில் இருமுடியை குரு சாமி வைப்பார். அதன்பிறகு மூன்று முறை கோயிலைச் சுற்றி, திரும்பிப் பார்க்காமல் சபரிமலை பயணத்தைத் தொடங்க வேண்டும். வழியில் எங்கும் இருமுடியை கீழே இறக்கக் கூடாது. அப்படி இறக்குவதாக இருந்தால், குரு சாமி அல்லது மூத்த சாமிகள் கையால் இறக்கி, போர்வைமீதே வைக்க வேண்டும்; தரையில் வைக்கக்கூடாது. இப்போது எல்லோரும் கார் அல்லது வேன்களில் செல்வதால், இருமுடியை வண்டி வரைக்கும் கொண்டு வந்து, வண்டியில் போர்வை விரித்து வைத்து விடுகிறார்கள்.” என்று விளக்கமாகச் சொன்னார்.

நாங்கள் போன குழுவில் ஏறக்குறைய 80 சாமிகள் இருந்தார்கள். ஒவ்வொருவரையும் குரு சாமி அழைத்து, மேற்சொன்னவற்றை எல்லாம் செய்தார். ஒவ்வொருவருக்கும் குறைந்தது 10 அல்லது 15 நிமிடங்கள் ஆனது. அதிகாலை 4 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை இது நடந்தது.

பின்னர் பயணம் சிறக்க, அன்னதானம் வழங்கினார்கள். சாமிகளை வழியனுப்ப உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தார்கள். அன்னதானத்தில் பெரும்பாலும் அவர்கள்தான் சாப்பிட்டார்கள். என்னுடைய மதிய சாப்பாடும் அதில்தான் கழிந்தது. சரவணன் கன்னிசாமி என்பதால், அவனது உறவினர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை வந்திருந்தார்கள். எல்லோரும் அடுத்த ஆண்டு நான் மாலை அணிந்து, விரதமிருந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

மொத்தம் 4 வேன்கள். ஒவ்வொரு வேனிலும் யார், யார் செல்கிறார்கள் என்று பெயர்ப் பட்டியல் ஒட்டியிருந்தார்கள். ஒவ்வொரு வேனிற்கும் பொறுப்பாளர் ஒருவரை நியமித்திருந்தார்கள். பயணத்தின்போது சாப்பிடத் தேவையான உணவுப்பொருட்களையும், சமைப்பதற்கு இரண்டு சமையல்காரர்களையும் உடன் ஏற்றிக் கொண்டார்கள்.

உறவினர்கள், தங்களது சாமிகளின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு, பயணச் செலவுக்குப் பணம் கொடுத்தார்கள். பிற்பகல் 2.30 மணியளவில் வண்டிகள் முன்பு, குரு சாமி பூஜை செய்து, பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

வித்தியாசமான ஒரு பயண அனுபவம் காத்திருந்தது. முதல் நாள் பயணத்திலேயே அய்யப்பனின் பிரம்மச்சரியம் குறித்து அதிர்ச்சிகரமான ஒரு செய்தி எனக்குக் கிடைத்தது.

(தொடரும்)

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)