தேவையே புத்தாக்கத்தின் (invention) தாய் என்று கூறப்படுவது உண்டு. கண்டுபிடிப்பை (discovery) அதன் தந்தை என்று கூறலாம். மின்சாரம் பற்றி டெஸ்லா கண்டறிந்தனவற்றைப் படித்திராவிட்டால் எடிசனால் மின்விளக்கை உருவாக்கியிருக்க முடியாது. அதேபோல் சில புத்தாக்கங்கள் (எ.கா. தொலைநோக்கி, நுண்ணோக்கி) இல்லாமல் இருந்திருந்தால் நம்மால் பெரிய சில கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்க முடியாது. எனவே கண்டுபிடிப்பையும், புத்தாக்கத்தையும் தனித்தனியே வேறுபடுத்திப் பார்ப்பது பொருளற்றது. மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பலர் இந்த உண்மையை அங்கீகரித்தனர். ஒவ்வோராண்டும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும்போது நாம் இதைத்தான் பார்க்கிறோம்: ஓர் உள்ளார்ந்த ஆர்வத்தால் உந்தப்பட்டு அறிவியல் பயணத்தைத் தொடங்கும் விஞ்ஞானிகள் சில கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்கள். அவற்றில் சில கண்டுபிடிப்புகள் புதிய கருவிகள் உருவாகக் காரணமாக இருக்கும்; சில கண்டுபிடிப்புகள் புதிய கருவிகளால் விளைந்தவையாக இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தத்தில் அவை உலகை மாற்றியமைத்து விடும். அவ்வாறு உலகை மாற்றியமைத்த ஒரு சில கருவிகள் கண்டறியப்பட்ட கதையை இப்போது பார்க்கலாம்.

வானியல்:

galileoஇதுவரை உலகம் கண்ட விஞ்ஞானிகளிலேயே தலைசிறந்தவர் என்று கூறத் தகுதியுடையவர் கலீலியோ கலிலி. ஒரு கருதுகோளை மெய்ப்பிக்க பரிசோதனை முறையை நாடிய முதல் அறிவியல் அறிஞர் அவராகவே இருக்க முடியும். அவரது சாதனைகளில் பலவற்றை நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். இரு பொருட்களை உயரமான பகுதியிலிருந்து கீழே போட்டால், நிறை அதிகம் கொண்ட பொருள், நிறை குறைந்த பொருளைக் காட்டிலும் வேகமாகத் தரையை அடையும் என்ற அரிஸ்டாட்டிலின் கூற்றை ஏற்க மறுத்து அதைத் தனது பரிசோதனையின் மூலம் நிரூபித்தும் காட்டினார் அவர். மேலும் மிகச்சிறந்த திசைகாட்டியை உருவாக்கியது உள்ளிட்ட பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

இரு தங்கைகள், ஒரு தம்பியுடன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த கலீலியோவுக்கு கடைசி வரை பணத்தின் தேவை இருந்து கொண்டே இருந்தது. கலை, ஓவியம் என்று சுற்றித் திரிந்த அவரது தம்பி, குடும்பத்துக்கு எந்த வகையிலும் உதவியாக இல்லை. இதனால் குடும்ப பாரம் முழுவதும் கலீலியோவின் தலையிலேயே விழுந்தது. மேலும் தங்கைகளின் திருமணத்தை மிகுந்த பொருட்செலவில் நடத்த வேண்டியிருந்தது. (அதிகமான வரதட்சணையும் அளிக்க வேண்டியிருந்தது). நல்லவேளையாக, அவர் சில நல்ல நண்பர்களைக் கொண்டிருந்தார். அவர்களின் உதவியால் வெனிஸ் நகரில் இருந்த படூவா பல்கலைக்கழகத்தில் கலீலியோவுக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. அங்கு வடிவியல், கணிதம் மற்றும் வானியலைக் கற்பித்த அவருக்கு ஓரளவு நல்ல ஊதியம் கிடைத்தது. இருப்பினும்; அவரது அனைத்துத் தேவைகளையும் அது நிறைவு செய்யவில்லை. எனவே தனது ஒவ்வொரு அறிவியல் ஆய்வின்போதும் ஏதாவதொரு புதிய கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது இத்தாலியின் பணக்காரக் குடியரசாக வெனிஸ் இருந்தது. எனவே, அரசின் தேவைக்கு புதிய கருவிகளை அளித்தால் பொருளீட்ட முடியும் என்ற எண்ணம் அவரது மனதில் இருந்தது. இவ்வாறு, இலக்கைக் குறி தவறாமல் தாக்க வேட்டைக்காரர்களுக்கு உதவும் வகையில் அற்புதமான குறிமுள்ளை உருவாக்கினார் கலீலியோ. ஆனால் அது மிக எளிய கருவியாக இருந்ததால், அதைக் கண்ட பலரும் தாங்களாகவே அதுபோன்ற ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். இதனால் கலீலியோவால் எதிர்பார்த்த அளவு பொருளீட்ட முடியவில்லை. அக்காலத்தில், சிறந்த ஆடிகளை (lens) உருவாக்குவதில் டச்சுக்காரர்கள் வல்லவர்களாக இருந்தனர். பொருட்களை உருப்பெருக்கிக் காட்டும் சில புதுமையான கருவிகளை அத்தகைய ஆடிகளைக் கொண்டு அவர்கள் வடிவமைத்திருப்பது கலீலியோவின் காதுக்கும் எட்டியது. இதுபோன்ற ஆடிகள் வெனிஸ் நாட்டின் வணிகக் கப்பல்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று அவர் கருதினார். எனவே, தானும் உடனடியாக அதுகுறித்த பரிசோதனைகளில் இறங்கிவிட்டார். டச்சுக்காரர்களை விடச் சிறந்த ஒரு ஆடியை உருவாக்கி அதனை வெனிஸ் நகர நீதிபதிக்குக் (Doge) கொடுப்பது அவரது எண்ணமாக இருந்தது.

ஒருநாள் டச்சு கைவினைஞர் ஒருவர் சிறந்த ஒரு ஆடியுடன் வெனிஸ் நகருக்கு வருவதாகவும், அதனை நீதிபதிக்குப் பரிசளிக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் கலீலியோ அறிந்தார். இதனால் வருத்தம் கொண்ட அவர், அதிவேகமாக ஒரே நாளில் ஒரு தொலைநோக்கியை வடிவமைத்தார் (அதன் டச்சு மாதிரியை அவர் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) டச்சு தொலைநோக்கி பொருட்களை மூன்று மடங்கு மட்டுமே உருப்பெருக்கிக் காட்டியது என்பதையோ, குவி ஆடிகளை மட்டுமே பயன்படுத்தியிருந்ததால் அதில் தோன்றிய பிம்பம் தலைகீழாகத் தெரிந்தது என்பதையோ அவர் அறிந்திருக்கவில்லை.

கலீலியோவின் தொலைநோக்கியில் ஒரு குழி ஆடியும், ஒரு குவி ஆடியும் பயன்படுத்தப்பட்டிருந்தன. இது பிம்பத்தை தலைகீழாக அல்லாமல், நேராகக் காட்டியது. மேலும் அவரது கருவி டச்சுக்காரருடையதை விட 4 மடங்கு அதிக உருப்பெருக்குத் திறன் கொண்டதாக இருந்தது! இறுதியில் கலீலியோ வென்றார். வெனிஸ் பல்கலை.யில் அவர் பெற்ற ஊதியமும் இருமடங்காக உயர்த்தப்பட்டது.

இதன்பிறகு கலீலியோவின் கவனம் விண்மீன்களை நோக்கிச் சென்றது. அதற்கு முன்பே கெப்ளரின் கோள்கள் குறித்த ஆய்வுகளை அறிந்திருந்த அவர், கோபர்நிகஸின் சூரிய மையக் கோட்பாட்டிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஒருநாள் தனது தொலைநோக்கியால் அவர் வியாழன் கோளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதனை இரு நிலவுகள் சுற்றி வருவதை அறிந்தார்.

இது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகும். அதுவரை புவி நிலையானது என்றும், அதைத்தான் கோள்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன என்றும் நம்பப்பட்டு வந்தது. அப்போது வலிமையாக இருந்த கிறித்தவ தேவாலயங்களும், மதகுருக்களும் இக்கருத்தையே வலியுறுத்தி வந்தனர். ஆனால் கலீலியோ இது தவறு என்றார். வியாழன் கோளை இரு நிலவுகள் சுற்றி வருவது உண்மை; அதேபோல், வியாழனும் ஏதோ ஒன்றைச் சுற்றி வருவது உண்மை. எனவே நமது புவியும் நிலையானதாக இருக்க முடியாது; அதுவும் ஒரு வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டுதான் இருக்கும் என கலீலியோ கூறினார்.

கோபர்நிகஸின் சூரிய மையக் கோட்பாட்டை ஆய்வு செய்த சிலர், அவரது கருதுகோள் உண்மையாக இருக்க வேண்டுமானால் வெள்ளிக் கோளானது நிலவைப் போன்ற நிலைகளைக் (Phases)கொண்டிருக்க வேண்டும் என்றனர். கலீலியோவின் தொலைநோக்கி அதுவும் உண்மை என்று காட்டியது!

தொலைநோக்கியைக் கொண்டு கலீலியோ மேற்கொண்ட இந்தக் கண்டுபிடிப்புகள் பேரண்டம் குறித்த மனித குலத்தின் அறிவை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்று விட்டன. அதேவேளையில் இக்கண்டுபிடிப்புகளால் கத்தோலிக்க தேவாலயத்தின் வெறுப்புக்கு ஆளாகி பல்வேறு பிரச்சனைகளையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் முதல் நவீன அறிவியல் நூலாகக் கருதப்படும் கலீலியோவின் ‘Two New Sciences’ என்ற புத்தகம் மேற்கு ஐரோப்பாவில் ஒரு பெரும் புரட்சியையே நிகழ்த்தியது. ஆனால் இத்தாலியில் அந்த நூலை வெளியிட தேவாலயம் தடைவிதித்தது. இவ்வாறு, மறுமலர்ச்சியின் பிறப்பிடமான இத்தாலியிலேயே அறிவின் பரவலுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், அறிவியல் புரட்சிக்கு தலைமை ஏற்றுச் செயல்பட்டிருக்க வேண்டிய அந்த நாடு பல்லாண்டு காலம் பின்தங்கியே இருந்தது.

வெப்ப இயக்கவியல்

மேற்கூறிய சம்பவங்கள் நடந்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு உலகைப் புரட்டிப் போட்ட வேறொரு கருவியை மற்றொரு நபர் கண்டறிந்தார். அவரது பெயர் ஜேம்ஸ் வாட். ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு கொல்லரின் மகனாகப் பிறந்த அவர், தச்சு வேலைகளிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார்; பொறியியல் வல்லுநராக வேண்டும் என்று விரும்பினார்.

வணிகத்தை அறிந்து கொள்ள சில காலம் லண்டனில் தங்கி பல இடங்களில் பயிற்சி பெற்றார். பின்னர் சொந்தமாகத் தொழில் துவங்கும் எண்ணத்துடன் கிளாஸ்கோ திரும்பிய வாட் அம்முயற்சியில் வெற்றியடையவில்லை. ஏனெனில் அங்கு வணிகம் ஒரு சில குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில், சில நண்பர்களின் உதவியால் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அவருக்குப் பணி கிடைத்தது. வாட்டின் புதுமையான திறன்களை அறிந்த பல்கலைக்கழகம் அவருக்காகவே ‘கணிதப் பொருள் வடிவமைப்பாளர்’ என்ற பணியிடத்தை உருவாக்கி அவரை அமர்த்தியது. இதனால் எவ்வித இடர்ப்பாடுகளும் இன்றி சுதந்திரமாகத் தனது பணியில் வாட் மூழ்கினார்.

அது நீராவியை வெற்றிகொள்வதில் பலர் முனைந்திருந்த நேரம். நியூகோமென் என்பவர் இத்தகைய முயற்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து சிறிய பாய்லர் ஒன்றை வடிவமைத்திருந்தார். அதனை சுரங்கங்களில் பயன்படுத்தி நீரை வெளியேற்ற முடியும். ஆனால் அதேபோன்ற பெரிய அளவிலான பாய்லரைச் செய்தபோது, அதற்கு அதிக நீர் தேவைப்பட்டது. மேலும் ஒரு சில நிமிடங்களில் தனது பணியையும் நிறுத்திக் கொண்டது. இயற்பியலிலும், கணிதத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த ஜேம்ஸ் வாட் இந்த பாய்லரைக் கண்டபோது அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. நீராவியை அது வெப்பமடையும் அதே உருளையில் குளிரவிடாமல், குளிர்விக்க தனிக் கலனை பயன்படுத்தினால், அக்கருவியின் திறனை மேம்படுத்த முடியும் என்று அவர் கருதினார். அதற்காக ஒரு தனி குளிர்விப்பானை (condenser) அவர் பயன்படுத்தினார். வெற்றி கிடைத்தது.

இருப்பினும் ஜேம்ஸ் வாட்டின் இக்கருவி சுரங்கத்திலிருந்து வெளியே வர சில நாட்கள் ஆனது. இதனை வேறு சில செயல்களுக்கும் பயன்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்தவர் ஜேம்ஸ் போல்டன் என்பவர். தொழிலதிபரான இவர் சில நண்பர்கள் மூலம் வாட்டுக்கு அறிமுகமானார். இருவரும் இணைந்து உருவாக்கியது போல்டன்-வாட் இயந்திரம் (Engine) எனப்பட்டது.

இதன்பிறகு இருவரும் இணைந்து நீராவியைப் பயன்படுத்தி சக்கரங்களைச் சுழல வைக்கும் ஒரு அமைப்பை உருவாக்கினர். இந்த இயந்திரத்தை முதன்முதலில் பயன்படுத்தியது ஒரு மர அறுவை ஆலையாகும். இதற்காக ஒரு வினோதமான ஆட்குறைப்பு நடவடிக்கை ஆலை நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஆம். புதிய இயந்திரத்தின் வரவால் முன்பு இயந்திரமாகச் சுழன்று அப்பணியைச் செய்து வந்த 12 குதிரைகள் பணியை இழந்தன! ‘குதிரைத் திறன்’ என்ற சொல் உருவானது இதன் காரணமாகத்தான். (உருவாக்கியவர் நமது நாயகன் ஜேம்ஸ் வாட்!) இதன்பிறகு ரயில்வே, ஆலைகள் என அனைத்தும் நீராவியைப் பயன்படுத்த ஆரம்பித்தன. அதன் விளைவாகத் தோன்றிய தொழிற்புரட்சி உலகையே மாற்றியமைத்தது.

மரபியல்:

கேரி முல்லிஸ், ஜேம்ஸ் வாட்டைப் போலவே புதுமையான பொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். சிறு வயதிலேயே வேதியியல் பரிசோதனைகளில் ஈடுபட்டு பொழுதைக் கழித்தவர். இதன்பின்னர் மரபியலில் ஆர்வம் கொண்டு டி.என்.ஏ. குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். டி-ஆக்ஸி ரிபோ நியூக்ளிக் அமிலம் என்பதன் சுருக்கமான டி.என்.ஏ. இரட்டைச் சுருள் வடிவம் கொண்ட மரபுப் பொருள் என்பது நமக்குத் தெரியும். அதில் உள்ள அமில மூலக்கூறுகள் குறிப்பிட்ட இணை மூலக்கூறுகளுடன் மட்டுமே இணைந்திருக்கும். இவ்வாறு ஒரு இழையானது மற்றொரு இழையுடன் இணை மூலக்கூறுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.

சிறிய டி.என்.ஏ. துண்டுகள் சிலவற்றை அவர் ஆய்வு செய்தபோது, அவை நீளமான இரட்டை இழைகளுடன் எதிரெதிர் முனைகளில் இணைசேர்வதைப் பார்த்தார். இது டி.என்.ஏ. மூலக்கூறுகளுக்கு மட்டுமே உள்ள தனித்த பண்பாகும். அதன்பின் மேலும் சில டி.என்.ஏ. துண்டுகளையும், புரத மூலக்கூறையும் அதனுடன் சேர்த்த முல்லிஸ், இந்த சிறிய டி.என்.ஏ. மூலக்கூறுகளைப் பெருகச் செய்து நகல் டி.என்.ஏவை உருவாக்க முடியும் என்று கண்டறிந்தார். இதன் விளைவாக பாலிமரேஸ் தொடர் வினைகள், டி.என்.ஏ.வை கச்சிதமாக நகலெடுக்க உதவும் டி.என்.ஏ. ஜெராக்ஸ் மெஷின் ஆகியவற்றை முல்லிஸ் உருவாக்கினார். 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த புத்தாக்கமாக இக்கண்டுபிடிப்புகள் கருதப்படுகின்றன. குளோனிங் மற்றும் மரபுப் பொறியியல் ஆகிய துறைகளிலும், புதிய ஜீன்களைக் கண்டறிவதிலும் இவை பெரும் பங்கை ஆற்றுகின்றன. மேலும் தடயவியல் முதல் தொல்லியல் வரை அனைத்துத் துறைகளிலும் இவற்றின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது.

மனித வாழ்க்கையை மாற்றியமைத்த கண்டுபிடிப்புகளும், புத்தாக்கங்களும் அதற்கேற்ற சூழல் நிலவிய பகுதிகளிலேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. புதுமையை வரவேற்று, திறமைக்கு மதிப்பளித்து, ஆர்வத்துக்கு அணை போடாமல் ஊக்கப்படுத்தி, அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்கின்ற சமுதாயங்கள்தான் இதுவரை இத்தகைய கண்டுபிடிப்புகளைச் சாத்தியமாக்கியுள்ளன. இனி வரும் காலங்களில் நிகழும் கண்டுபிடிப்புகளையும் அதேபோன்ற அறிவார்ந்த சமுதாயங்கள்தான் சாத்தியமாக்கும்.

(சுனில் லக்ஷ்மண், பெங்களுரில் இயங்கி வரும் ஸ்டெம் செல் பயாலஜி அண்டு ரீஜெனரேட்டிவ் மெடிசன் நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். செல்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்த ஆய்வில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இக்கட்டுரை முதன்முதலாக thewire.in இணைய இதழில் வெளியானது.)

தமிழில்: நந்தா

Pin It

thamil desam jan 2014அண்மையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்வதற்காக விண்ணில் ஏவிய ‘மங்கல்யான’ விண்கலம் குறித்து ஊடகங்களில் பரவலாகச் செய்திகள் வந்தன. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் விண்வெளி ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வட அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், விண்ணில் நடக்கும் மாற்றங்களையும், புதிய கிரகங்களின் அசைவுகள் ஒவ்வொன்றையும் துல்லிய மாகக் கணித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்தியாவின் மங்கல்யானைப் போலவே அண்மை யில், ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், சற்றொப்ப 100 கோடி விண்மீன்களை புகைப்படம் எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கையா (GAIA) என்கிற அதிநவீன செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது.இதற்கான செலவு சற்றொப்ப 100 கோடிடாலர்கள் ஆகும்.

புவியைவிட்டு சற்றொப்ப 15 இலட்சம் மைல்களுக்கு அப்பால் சென்று நிலைகொள்ளும் இந்த செயற்கைக் கோள், அங்கிருந்து பல விண்மீன்களை படமெடுத்து பூமிக்கு அனுப்பும். இந்த செயற்கைக் கோளின் மூலம் மட்டும் சற்றொப்ப 50 ஆயிரம் கோள்கள் குறித்த தகவல்களைத் திரட்ட முடியும் என ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நம்பிக் கைத் தெரிவித்துள்ளது.

சீனாவும் தன் பங்கிற்கு, சந்திரனை ஆய்வு செய்ய ஆளில்லா விண்கலத்தை முதன் முறையாக விண்ணில் ஏவியுள்ளது. விண்வெளியில், ரசியா ஏற்கெனவே அமைத்துள்ள மீர் விண்வெளி நிலையத்தைப்போலவே, தமக்கும் ஒரு நிரந்தரமான விண்வெளி நிலையம் வேண்டும் என்ற சீனாவின் உந்துதலே இந்த புதிய விண்கலத்தை ஏவியதற்கு காரணம் என சீன அறிவி யலாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே பூமியில் நடை பெற்றுக் கொண்டுள்ள நாடு பிடிக்கும் அதிகாரப் போட்டி, விண்வெளியிலும் நடந்து கொண்டுள்ளது. அதன் விளைவாக, ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய புதிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்தி வருவது ஆராக்கியமானதே எனினும், அவ் ஆராய்ச்சிகளின் பின்னணியில் முதலாளிகளின் தீரா இலாப வெறியே முன்னிற்கிறது.

உலகெங்கும் முன்னணி முதலாளிய நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இது போன்ற விண் வெளி ஆராய்ச்சிகள், “நாம் வாழுகின்ற இப்புவியைத் தாண்டி, உயிரினங்கள் வசிப்பதற்கு வசதியான வேறொரு கிரகம் இப்பால் வெளிக்கு அப்பால் உள்ளதா?’’- என்ற ஒற்றைக் கேள்விக்கு விடை காணவே பெரும்பாலும் நிகழ்த்தப் படுவதாக நாம் நினைத்துக் கொண் டுள்ளோம். அது ஒரு முக்கியமான கேள்வியே! இருப்பினும், இன் னொரு முக்கியமானக் கேள்வியும் இவ் ஆராய்ச்சிகளுக்கு பின் உள்ளது.

நாம் வாழுகின்ற பூமியின் இன்றைய அவல நிலை நமக்கு நன்கு தெரியும். இயற்கை வளங்களை முதலாளிய நாடுகளும், நிறுவனங்களும் வரைமுறையற்றுச் சுரண்டிக் கொண்டுள்ளதன் விளைவாக, புவியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பனிப் பிரதேசங்கள் உருகுவதும், கடல் மட்டம் அதிகரிப்பதும், மழை - புயல் - நில நடுக்கம் உள்ளிட்ட கடும் இயற்கைச் சீற்றங்கள் இயல்பாகி வருவதும் என புவியின் நிலைமை படுமோச மாக உள்ளது. World Resources Institute என்ற பன்னாட்டு அமைப்பு, உலகின் 69 நாடுகள் கடுமையான தண்ணீர் சிக்கலில் இருப்பதாகவும், அந்த நாடுகளின் தண்ணீரில் கணிசமான அளவு தொழிற்சாலை உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

முதலாளியத்தின் விளைவால், புவியின் ஒட்டுமொத்த மனித குல மும், உயிரினங்களும் சந்திக்கும் பேரவலங்கள் இவை. இன்னொரு புறம், இந்த அவலங்கள் சூழலியலைக் காப்பதற்கான உலக தழுவியப் போராட்டங்களுக்கு மறைமுக அழைப்பை விடுத்துக் கொண்டுள்ளது. சூழலியல் குறித்த விழிப்புணர்வுக் கருத்துகள் உலகெங்கும் பரவிவருகிறது.

இந்நிலையில், பூமியின் இயற்கை வளங்களை இனியும் பழையபடி தீவிரமாகச் சுரண்ட முடியாது என்பதை உணர்ந்து கொண்ட முதலாளிய சக்திகள், தாம் சுரண்டு வதற்கு ஏதுவாக உள்ள இயற்கை வளங்கள், கனிமங்கள் ஆகியவை நிறைந்துள்ள புதிய கிரகங்கள் விண்வெளியில் உள்ளனவா என்பதை அறிவதற்காகவும் பல விண்வெளி ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

பூமிக்கு அப்பாற்பட்ட கோள்கள் மட்டுமின்றி, எரிகற்கள் ஆகிய வற்றிலும் கனிசமான அளவிற்கு டைடானியம், பிளாட்டினம், துத்த நாகம் உள்ளிட்ட பல்வேறு கனி மங்கள் காணப்படுகின்றன. 1997 ஆம் ஆண்டு வெறும் 1.6 கிலோ மீட்டர் சுற்று வட்டம் கொண்ட ஓர் எரிகல்லில், இரும்பு, நிக்கல், பிளாட்டினம் உள்ளிட்ட 20 ட்ரில்லியன் டாலர் அளவிற்கான கனிமங்கள் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். 12Psyche என்ற எரிகல்லில் மட்டும், உலகின் இன்றைய பயன்பட்டு அளவைக் கணக்கில் கொண்டால், பல மில்லியன் ஆண்டுகளுக்குத் தேவையான அளவிற்கான இரும்பு மற்றும் நிக்கல் கனிமங்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு வேளை அவ்வாறான கிரகங்களோ, வின்கற்களோ கண்டு பிடிக் கப்பட்டால், அதிலிருந்து கனிமங்கள், நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை பூமிக்குக் கொண்டு வருவது குறித்தும், வாய்ப்பிருந்தால் அங்கேயேக் குடியேறுவது குறித்தும் இந்த ஆய்வுகளை அவர்கள் முன் தள்ளி நடத்துகிறார்கள்.

இது போன்ற ஆராய்ச்சிகளின் விளைவாக, அமெரிக்காவின் அரி சோனா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், வைரத்தின் படிமங்களை அதிகமாகக் கொண்ட Planet 55 Cancri-eஎன்ற புதிய கிரகத்தைக் கண்டுபிடித் துள்ளனர். நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம், மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற 5 கிரகங்களைப் பட்டியலிட்டு, அதில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து வருகிறது.

மேலும், அமெரிக்காவின் ஹப் பில் விண்வெளித் தொலை நோக்கி, வியாழன் கிரகத்தைச் சுற்றி வரும் யுரோப்பா என்ற துணைக் கிரகத் தில், நீர் கசிவு இருப்பதை உறுதி செய்து படம் எடுத்துள்ளது. 2004ஆம்ஆண்டு வரை அமெரிக்கா மட்டும், சற்றொப்ப 50.8 பில்லியன் டாலர்கள் இது போன்ற ஆராய்ச்சி களுக்காக செலவிட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியை பெரிதும் அரசுகளே முன்னின்று செய்து வந்த நிலையில், அதில் பல முன்னேற்றங்கள் ஏற்படவே, 2004 ஆம் ஆண்டு - வட அமெரிக்க அதி பர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில், அதில் தனியார் பெரு முதலாளிய நிறுவனங்களும் ஈடுபடு வதற்கான வாய்ப்புகள் ஏற்படுதித்க கொடுக்கப் பட்டன. 2004ஆம் ஆண்டு Ciomposites என்ற தனியார் நிறுவனம், SpaceShipOne என்ற முதல் தனியார் விண் கலகத்தைக் கொண்டே, அமெரிக்க அரசின் நாசாவின் செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம், பெரும் பொருட் செலவிலான விண்கலங்களை தயாரிக்கும் பணியை தனியாரிடம் தாரை வார்த்தது அமெரிக்க அரசு.

இந்நிறுவனங்கள் விண்கலங்கள் தயாரிப்பதோடு நின்றுவிடவில்லை. விண்வெளிக்கு மனிதர்களை சுற் றுலா கொண்டு செல்வதற்கு விண் கலம் உருவாக்குதல், மனிதர்களை வேற்று கிரகத்தில் குடியமர்த்த விண்கலம் உருவாக்குதல் என இலாப நோக்கில் பல திட்டங்களி இந்நிறுவனங்கள் செய்யத் தொடங்கிவிட்டன.

இதற்கு முன்னோட்டமாக, 2001ஆம் ஆண்டு - Space Adventuresஎன்ற தனியார் நிறுவனம், அமெரிக்க அரசின் ஒப்புதலோடு, பெருந்தொகை அளித்த பணக்காரர் ஒருவரை விண்வெளியிலுள்ள, சர்வ தேச விண்வெளி நிலையத் திற்கு முதல் முறையாக சுற்றுலா வாக அழைத்துச் சென்றது. SpaceX என்ற தனியார் நிறுவனம், விண் வெளியில் உள்ள எந்த கிரகத்திற்கும் மனிதர் களைக் கொண்டு செல்வதற்கான அதிநவீன புதிய விண்வாகனங்களை தற்போது உருவாக்கி வருகின்றது.

Mars Oneஎன்ற நிறுவனம் 2024ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்து வதற்கான திட்டத்தை செயல்படுத்திக் கொண்டுள்ளது. கடந்த ஆகத்து 2013 - வரை சற்றோப்ப, அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் முன்னணி முதலாளிய நாடுகளைச் சேர்ந்த 2 இலட்சம் பேர் இதற்கு முன்பதிவு செய் துள்ளனர்.

எரிகற்களிலிருந்து கனிமங்களை எடுக்கும் முறைக்கு Carl Sagan, Steven J. Ostro உள்ளிட்ட விண்வெளி இயற்பியல் அறிஞர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின் றனர். எரிகற்களில் களம் அமைத்து கனிமங்களை எடுப்பதன் மூலம், அவற்றின் சுற்றுப்பாதையில் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் அது மற்ற எரிகற்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி பூமியின் மீது அவை மோதுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், இது போன்ற எச்சரிக்கைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் இதற் கானப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

அமெரிக்காவிற்கும் சோவியத் இரசியாவிற்கும் விண் வெளி ஆராய்ச்சி யில் கடும் போட்டிகள் ஏற்பட்டு வந்த 1967ஆம் ஆண்டு, Outer space treaty என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன் ஆகிய நாடுகள் முதலில் இதில் கையெழுத்திட்டன. தற்போது வரை 102 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. இவ் ஒப்பந்தத் தின்படி, விண்வெளியில் உள்ள எந்தவொரு கிரகத்தையும், எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாது என்று முடிவானது.

அன்றைய காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், நாடுகளைப் பற்றிய வரையறைகள் தான் உண்டே தவிர, தனியார் நிறுவனங்கள் குறித்த வரையறை ஏதுமில்லை. மேலும், எரிகற்களை பூமிக்குக் கொண்டு வந்து அதிலிருந்த கனிம வளங்களைப் பிரித்தெடுத்தால், அது யாருக்கு சொந்தம் என்பது குறித் தும் வரையறைகள் இல்லை. இத னைப் பயன்படுத்தியே பல தனியார் நிறுவனங்களும் விண்வெளிக் கிரகங்களையும், எரிகற்களையும் தமதாக்கிக் கொண்டு, அதிலுள்ள வளங்களை ஆராய்ந்து அதை பூமிக்குக் கொண்டு வரத் திட்டங் கள் தீட்டி வருகின்றன.

2010ஆம் ஆண்டு பூமிக்கு அப்பாலுள்ள கிரகங்களில் உள்ள இயற்கை வளங்களை சுரண்டி எடுப்பதையே நோக்கமாகக் கொண்டு Planetary Resourcesஎன்ற அமெரிக்க நிறுவனம் தொடங்கப் பட்டது. கூகிள், மைக்ரோசாப்ட், பேபால் என உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக உள்ளனர். Deep Space industriesஎன்ற நிறுவனம், 2016க்குள் எரிகற்களிலிருந்து கனிம மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வர விண்கலம் தயாரித்து வருகிறது.

விண்வெளியிலுள்ள வேற்றுக் கிரகங்களிலிருந்து வளங்களை “எடுத்துத் கொள்ளத்’’ தொடங்கி னால், பூமியிலில் இருந்து “எடுத்துத் கொள்ள”ப்பட்டு வரும் வளங்கள் பாதுகாக்கப்படும் என அந்நிறு வனம் அதற்கு விளக்கம் வேறு அளித்துள்ளது.

விண்வெளி கிரகம் ஒன்றிலி ருந்து இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டு வது குறித்து விளக்கிய “அவதார்” எனும் ஆங்கிலத் திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், 2012ஆம் ஆண்டு Planetary Resourcesநிறுவனத்தில் ஆராய்ச்சிக் குழுவின் ஆலோசகராக இணைந் தது வேடிக்கையான செய்தி.

அமெரிக்காவின் நாசா நிறுவனம், 2016ஆம் ஆண்டு செப்டம் பரில், OSIRIS-Rex என்ற விண்கலத்தின் மூலம், புவிக்கு அப்பால் சுற்றும் ஒர் விண்கல்லில் இருந்து கனிம வளங்களைக் கொண்டு வரும் சோதனைத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

நடத்தப்பட்டு வரும் இந்த விண்வெளி ஆய்வுகளின் மூலம் பெறப்படுகின்றப் பயனை ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் அளிக்கும் அளவிற்கு, முதலாளியம் இரக்க குணம் கொண்டதல்ல. எப்படியும், தனது இலாப நோக்கத் திற்குத்தான் இந்த ஆய்வுகளையும், இதனால் பெறும் வளங்களையும் முதலாளியம் பயன்படுத்தும் என்பது கண் கூடான உண்மை. ஒன்று மட்டும் நிச்சயம், முதலாளியத்தின் சுரண்டல், பூமியோடு நின்றுவிடப் போவதில்லை!

(தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியானது)

Pin It

குழந்தையின் அழுகை. முத்தச்சத்தம். ஐம்பத்தைந்து மொழிகளில் வாழ்த்து செய்தி. திமிங்கலம் கத்தும் ஓசை. இதனுடன் மொசார்ட் (Mozart) போன்றோரின் இசை.

தொலைக்காட்சியை வேகமாக மாற்றும்போது கேட்பது போல், மேலே சொல்லப்பட்ட சம்பந்தம் இல்லாத ஒலிகள் ஒன்றாக பதிவு செய்யப்படுகிறது. அதுவும் தங்கமுலாம் பூசிய கிராமபோன் ரெக்கார்ட் போன்ற தகடுகளில். யாருக்காக? அத்தனை விசேசமா அந்த நபர்?

1977-ல் அமெரிக்கா ஏவிய செயற்கை கோளான வாயேஜரில்தான் இந்தத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. பல்லாயிரம் வருடங்கள் கழித்து இந்த ஓசைகளை கேட்கப்போகும் நபர் கேவலமான தோற்றம் கொண்ட ஒரு வேற்றுகிரகவாசியாக இருப்பார் என்பது நம்பிக்கை. பூமி, மனிதகுலத்தின் தோற்றம்/வளர்ச்சி பற்றி, மேலும் தகட்டை எப்படி இயக்குவது போன்ற தகவல்களும் அதிலேயே உண்டு.

பெரும் பயணம்:

1970-களில் பெரும் பயணம் என்ற நாசாவின் திட்ட நோக்கம் சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதிகளை ஆராய்வது. எழுபதுகளின் பின் பகுதியில் யுரேனஸ், வியாழன், சனி, நெப்ட்யூன், ப்ளூட்டோ போன்ற கிரகங்கள் சீரான வரிசையில் அமையும் அரிய நிகழ்வு விண்வெளியில் நடந்தது (அஜீத்தும் விஜய்யும் சந்தித்துக்கொள்வதை போல் அரியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்). அந்த படிக்கட்டு போன்ற வரிசையை சரியாக உபயோகித்தால், உண்டிவில்லில் கல்லை வைத்து அடிப்பது போல் குறைந்த சக்தியில் செயற்கைகோளை எளிதில் மிக அப்பால் அனுப்பலாம். ஆனால் பணப்பற்றாக்குறையால் அந்த திட்டம் முழு வெற்றியடையவில்லை. ஆனால் அதன் பயனாக நமக்கு கிடைத்தது வாயேஜர் திட்டம், முந்திரி ஸ்வீட் வாங்க போய் பணமில்லாமல் பால் ஸ்வீட் வாங்கிய மாதிரி..

1977-ல் வாயேஜர் 1, 2 என்று சிறிய அளவு காரின் எடை கொண்ட இரட்டை விண்கலன்கள் முதலில் ஏவப்பட்டது வியாழன் மற்றும் சனியை ஆராய. அனுப்பிய வேலை முடிந்ததும் அப்படியே விட்டு விடாமல், 'இவனெல்லாம்  அப்படியே போக விட்றணும்' என்று அதற்கு மேலும் பயணிக்க விட்டு விட்டார்கள். சனி பார்வை பட்டால் ஆகாது என்று இங்கு ஒரு மூட நம்பிக்கை. வாயேஜர் இரட்டையர்கள் சனியையே பார்த்துவிட்டு அப்பால் கிளம்பியவர்கள்.

இந்த இரு கலன்களும் சேகரித்த, சேகரித்துக் கொண்டிருக்கும் தகவல்கள் இதுவரை ஏவப்பட்ட செயற்கை கோள்களிலேயே அதிக உபயோகமாக இருப்பவை. சனியின் வளையங்களை பற்றி, வியாழனுக்கும் (யுரேனஸ்/நெப்ட்யூன்-க்கும் கூட) வளையங்கள் உண்டு, யுரேனஸ்/நெப்ட்யூன் போன்ற கிரகங்களின் காற்றுவெளி, வியாழனின் துணை கிரகமான ஐயோ (Io)வில் எரிமலை உண்டு போன்ற என்னற்ற செய்திகளை நமக்காக கொடுத்தன இந்த கலன்கள். 1990 வாக்கில் வாயேஜர்1-ன் கேமராவை திருப்பி எடுக்கப்பட்ட சூரியக்குடும்ப புகைப்படம் மிகவும் பிரபலம். பூமி அதில் ஒரு நீலப்புள்ளி.

அது இருக்கட்டும். முப்பத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது என்ன வந்தது வாயேஜருக்கு? மனிதன் செய்த பொருட்களிலேயே அவனிடமிருந்து மிகத்தொலைவில் இருக்கும் பொருள் வாயேஜர் - நமது சூரிய குடும்பத்தின் எல்லையை தாண்டும் முதல் மனித சகவாசம் கொண்ட பொருள் அதுவே! சென்ற வருடம் அந்த எல்லையை தாண்டி, நட்சத்திரங்களுக்கிடையில் இருக்கும் வெளியில் தற்போது பயணித்துக்கொண்டு இருக்கிறது. ஹீரோயின் வீட்டை விட்டு ஓடி போய் கொஞ்சம் லேட்டாக கண்டுபிடித்து துரத்த ஆரம்பிப்பார்களே, அது மாதிரி எல்லையை தாண்டிவிட்டது என்று நமக்கு தெரிந்தது இப்போதுதான்.

தங்கத்தகடு:

முதலில் சொன்ன அந்த தகட்டை பற்றி பல ரசிக்கக்கூடிய தகவல்கள் உண்டு. பூமியை பற்றியும் மனிதர்களை பற்றியும் வேற்று ஜீவன்களுக்கு தெரிவிக்க முனையும் இந்த 'காலப்பெட்டி'யில் மனிதனின் தோற்றம்/வளர்ச்சி போன்றவற்றை விளக்கும் 115 படங்கள், இந்திய சங்கீதம் உட்பட பல நாட்டுக்கலைஞர்களின் இசைக்கோர்வைகள் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள் சொல்லப்பட்ட ஐம்பைத்தைந்து மொழிகளில் கன்னடம், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளும் உண்டு (தமிழ் இல்லை). அவைகளை இங்கு சென்று கேட்கலாம்: http://voyager.jpl.nasa.gov/spacecraft/greetings.html. அதே தகட்டில் இடம் பெற்றுள்ளார் பல்கேரிய நாட்டுப்புற பாடகர் வல்யா. அவர் நாட்டை சேர்ந்த பலரே அறியாத அவரின் குரல், பல்லாயிரம் வருடங்களாக அண்டத்தை சுற்றிக்கொண்டிருக்கும்!

இத்தகட்டை ஒருங்கிணைத்த குழுவின் தலைவர் உலகப்புகழ் பெற்ற அறிஞர் கார்ல் சாகன். இந்த கலன் நெடுந்தூரம் பயணிக்க நிறைய வாய்ப்புண்டு என்று பார்த்து பார்த்து தகவல்களை பதித்தவர். காசட்டில் பல படங்களில் இருந்து கலவையாக பிடித்த பாடல்கள் மட்டும் பதிவு செய்துகொண்டு திரிவோமே, அது மாதிரி (காசட்டா அப்படின்னா என்பார்களா லேட்டஸ்ட் தலைமுறை?).

அதன் உள்ளடக்கத்தை பலர் பாராட்டினாலும், 'இருக்கும் இடம் முதற்கொண்டு நம்மை பற்றி அத்தனை தகவல்களும் வேற்றுலகவாசிகள் தெரிந்து கொண்டால், நம்மை அழிப்பதற்கு நாமே அவர்களுக்கு திட்டம் போட்டு கொடுப்பதாகாதா?' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. வெளியாள் என்றாலே நம்மை அழிக்கத்தான் போகிறான் என்கிற மனித பயத்தில் இருந்து உருவாகும் எண்ணம் -பக்கத்து வீடு/ஊர், பக்கத்து நாட்டு மக்களை காரணமே இல்லாமல் எதிரியாக நினைக்கிறோமே? அது போல்.

கார்ல் சாகன் பதிலளிக்கிறார்:

"நாம் அன்றாடம் உபயோகிக்கும் தொலைக்காட்சி அலைகள் கொண்டு கூட நம் இருப்பிடத்தை எளிதில் கண்டுகொள்ளலாம்" (கொல்லலாம் இல்லை); "அப்படி வருபவர்களிடத்தில் நட்பாக இருக்க நாம்தான் கொஞ்சம் முயல்வோமே?" மேலும், "இந்த தகட்டை படிக்க 'அவர்கள்' கொஞ்சமேனும் முன்னேறியிருக்க வேண்டும். ஆனால் இந்த பாட்டிலை விண்வெளிக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் இப்புவியின் உயிர் பற்றிய மிக நம்பிக்கையான ஒரு செய்தி அறிவிக்கப்படுகிறது அல்லவா?"

பயண முடிவு?

இப்போது வாயேஜரின் கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. ஏன்? சுற்றுலா போய் விட்டு எப்போது நாம் போட்டோ பிடிப்பதை நிறுத்துவோம்? அதேதான். பேட்டரி பிரச்சினை. மினி ப்ளூட்டோனியம் ரியேக்டர்கள் மூலம் கிடைக்கும் சொற்ப சக்தியை கொண்டு தற்போது இயங்கும் வாயேஜர், இன்னும் 12 ஆண்டுகளில் சுத்தமாக சார்ஜ் இல்லாமல் போய்விடும். அதனால் முடிந்தளவு தேவை இல்லாத சாதனங்களை அணைத்து வைத்துவிடுகிறார்கள். சில அதுவாகவே செயலற்று போய் விட்டது; Cosmic Ray System போன்ற சாதனங்கள் பிரதிபலன் பாராமல் இன்னும் உழைக்கிறது. மின்சக்தி எல்லாம் தீர்ந்து போய் அதற்கும் மனிதனுக்கும் நடக்கும் கடைசி பரிவர்த்தனை 2025 வாக்கில் இருக்கும். அதற்கு பிறகு நாம் இருப்போமோ இல்லையோ, பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வருடங்களுக்கு வாயேஜர் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

நன்றி/ஆதாரம்: http://voyager.jpl.nasa.gov/

- பிரசன்னாகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

ஜாதி, மத, மொழி, நாடு என்ற பேதமின்றி, இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு தாய் மக்களே.

அந்தத் தாய் யாரென்று அறிந்தால் மிகவும் ஆச்சரியமும், பெருமையும் கொள்வீர்கள். அந்தத் தாய் 'நட்சத்திரம்' தான். நம்மில் பலர் நட்சத்திரம் (ஸ்டார்) ஆக வேண்டும் என்று கனவு கண்டிருப்பார்கள். அவர்களுக்கு, தாங்கள் நட்சத்திரத்தின் குழந்தைகள்தான் என்ற செய்தி பெருமையாகத்தானே இருக்கும்.

நாம் அனைவரும் எப்படி நட்சத்திரத்திலிருந்து வந்தோம் என்று விளக்கமாக பார்ப்போம்.

உயிர்கள் உருவாக பல தனிமங்கள் தேவை. மனிதர்களாகிய நமக்கு ரத்தம் சுத்தமாவதற்கு வேண்டிய ஆக்சிஜென், எலும்பின் உறுதிக்குத் தேவையான கால்சியம், ரத்தத்திற்கு வேண்டிய இரும்புச் சத்து, மற்றும் கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் என்று தனிமங்களும், கூடவே உப்பில் உள்ள சோடியம் மற்றும் பொட்டசியம், மக்னிசியம் போன்ற பல தனிமங்கள் தேவை. அவை இல்லை என்றால் உயிர் வாழ இயலாது என்பது அனைவர்க்கும் தெரியும்.

மேலும் தங்கம், வெள்ளி, அலுமினியம் போன்ற பல தனிமங்கள் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளன.
 
இந்தத் தனிமங்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி அறிவியலாளர்கள் ஓர் அட்டவணையை ஏற்படுத்தியுள்ளனர் (PERIODIC TABLE). இந்தத் தனிமங்களைப் பற்றி ஆராய்ந்து அதன் அமைப்பு, குணங்கள், பயன்கள் போன்றவற்றை அறிந்து, அவைகளைப் பயன்படுத்தி, நாம் வாழ்வை இனிதே நடத்த அறிவியலாளர்கள் வழி வகுத்திருக்கிறார்கள்.

மாரடைப்பு வந்தால் உயிருக்குப் போராடும் ஒருவருக்குத் தேவையான, ஆக்சிஜன் மற்றும் பல மருந்துகளைக் கொடுத்து, பாசக்கயிறைப் போட்டு இழுத்துக் கொண்டிருக்கும் எமனிடம் போராடி, அந்த பாசக்கயிறை அறுத்து, போய்க்கொண்டிருந்த உயிரை மீண்டும் கொண்டு வர உதவுவார் மருத்துவர்.

ஒவ்வொரு தனிமங்களின் குணங்களை வெகு நாள் ஆய்ந்து அறிந்த அறிவியலாளர்கள் பணி தான் அவர்களுக்கு உதவியாயிருக்கின்றது.

இந்த தனிமங்கள் எல்லாம் பூமியில் கிடைக்கின்றன. சரி பூமிக்கு இவை எப்படி வந்தன?

நட்சத்திரங்களில் தான் முதலில் இவை எல்லாம் உருவாகின என்று அறிவியலாளர்கள் சொல்லுகிறார்கள். ஏன் பூமியில் நாம் காணும் அனைத்துப் பொருட்களும் நட்சத்திரத்திலிருந்துதான் உருவாயின. நட்சத்திரத்திலிருந்து அவை பூமிக்கு எப்படி வந்தன?

நம் சூரியன் என்ற நட்சத்திரத்தில் இது போன்ற பொருட்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால் நம் சூரிய‌னில் உருவாகும் பொருட்கள் நமக்குக் கிடைக்காது. நம்முடைய சூரியனுடைய தாத்தாவாகிய முதல் தலைமுறை நட்சத்திரம் உருவாக்கியதை நாம் அனுபவிக்கிறோம். முன்றாம் தலைமுறையைச் சேர்ந்த நமது சூரியன் உருவாக்கும் பொருட்கள் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைக்கும், உயிர்களுக்குத்தான் உபயோகமாகும்.

எப்படி என்று பார்க்கலாமா?

சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, ஒரு பலூனைப் போல விரிவடைந்த இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இரண்டே இரண்டு தனிமங்கள் தான் இருந்தது. அவை ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்(சுமார் 75 சதவீதம் ஹைட்ரஜன், 25 சதவீதம் ஹீலியம்). வாயுக்களான இவை இரண்டுமல்லாமல் நாம் காணும் நட்சத்திரங்கள், கோள்கள் எதுவுமே, ஏன் எந்த தூசும் கூட பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இல்லை.

ஆச்சரியம் என்னவென்றால் அந்த இரண்டு தனிமங்கள் (வாயுக்கள்) தான் இப்போது நாம் காணும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், அதைச் சுற்றிவரும் கோள்களும், இந்த பூமியும், அதில் நாம் காணும் அனைத்துப் பொருட்களுமாக உருமாறின.

எப்படி?

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் தோன்றிய ஹைட்ரஜன் அணுக்களின் ஈர்ப்புவிசையினால் ஏற்பட்ட பிணைப்பினால் தான் பிரபஞ்சத்தின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகின. பல கோடி வெப்பத்தைக் கொண்ட இந்த நட்சத்திரத்தின் உள்ளே, அந்த வெப்பத்தினால் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்ற தனிமம் புதிதாக உருவாகியது. இந்த இணைப்பில் தோன்றும் ஆற்றல் தான் ஒளியாகிறது. நட்சத்திரங்களுக்குள்ளே தொடர்ந்து பல கோடி ஆண்டுகளாக இந்த இணைப்பு நடந்துகொண்டே இருக்கின்றது.

நட்சத்திரதிற்குள்ளே இரண்டு ஹைட்ரஜன் இணைந்து ஒரு ஹீலியம் அணு புதிதாக உருவாவதுபோல, கூடவே இன்னும் பல அணுச்சேர்க்கைகள் நடக்கின்றன. புதிதாக உண்டான இரண்டு ஹீலியம் அணுக்கள் இணைந்து 'பெரிலியம்' என்ற தனிமம் உண்டாகிறது. அதோடு நிற்காமல் ஒரு ஹீலியம் அணுவும் ஒரு பெரிலியம் அணுவும் சேர்ந்து உயிர்களுக்குத் தேவையான முக்கியமான தனிமம் 'கார்பன்' உருவாகிறது.

புதிதாக தோன்றிய அணுக்களின் இணைப்பு மேலும் தொடர்கிறது. இரண்டு பெரிலியம் அணுக்கள் இணைந்து நம் உயிரின் ஆதாரமான பிராணவாயு (OXYGEN) உருவாகிறது. இரண்டு கார்பன் அணுக்கள் இணைந்து ஒரு 'மெக்னீசியம்' அணு உருவாகிறது. இப்படி பற்பல அணுச்சேர்க்கைகள் நடந்து ஒன்று, இரண்டு என்று தனிமங்களை வரிசைப்படுத்திய அட்டவணையில் உள்ள 26 என்ற எண் கொண்ட இரும்பு வரை நட்சத்திரங்களுக்கு உள்ளே பெருமளவில் உற்பத்தியாகிறது.

நட்சத்திரங்களுக்குள் உள்ள சுமார் கோடி டிகிரி வெப்பத்தில் தான் இந்த அணுச்சேர்க்கைகள் நடக்க முடிந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் புதிய தனிமங்களை உண்டாக்கும் பணியில் மனிதன் இறங்கி சில தனிமங்களை உண்டாக்கி வெற்றியும் பெற்றுள்ளான். முன்னதாக பூமியில் உள்ள தனிமங்களிலிருந்து தான் அவை உருவாக்கப்பட்டன. சிறிய அளவில் தான் இவைகளை உண்டு பண்ண முடியும். பெருமளவில் பூமியில் கிடைப்பவை நட்சத்திரங்களில் உற்பத்தியானவை.

தனிமங்களின் அட்டவணையில் இரும்பிற்கு மேல் உள்ள தனிமங்களான தங்கம், வெள்ளி, யூரேனியம் போன்றவை உண்டாக, நட்சத்திரங்களில் உள்ள வெப்பத்தைக் காட்டிலும் அதிக வெப்பம் தேவை. அதனால் நட்சத்திரங்களுக்குள் தனிமங்கள் உற்பத்தி, மூடப்பட்ட தொழிற்சாலை போல நின்று விடுகிறது.

பிறகு எப்படி அவை உருவாகின?

அந்த முதல் தலைமுறை சூரியன் தன வாழ்நாட்கள் முடிந்தபின் அதிபயங்கரமாக வெடித்துச் சிதறும். பிரபஞ்சத்தில் அது மிக அற்புதமான காட்சியாகும். சூப்பர் நோவா என்று கூறுவார் இதனை. அப்படி வெடிக்கும் போது உண்டாகும் அதிபயங்கர வெப்பத்தில் இரும்பு அணுக்களும் அணுச்சேர்க்கையால் இணைந்து இரும்பிற்கு மேல் அணு எண் கொண்ட யூரேனியம், தங்கம், வெள்ளி போன்ற மற்றெல்லா தனிமங்களும் உண்டாகி, நட்சத்திரம் வெடிக்கும் போது, வாயுக்களாக பிரபஞ்சத்தில் தூக்கி எறியப்பட்டன. பல கோடி மைல்கள் பரந்து விரிந்து கிடக்கும், பார்க்க பரவசமூட்டும் இந்த வாயுக்கூட்டங்களை 'நேபுல்லா' என்றழைப்பர்.

இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டதில் நட்சத்திரத்தில் உருவான எல்லா தனிமங்களுடன், பிரபஞ்சத்தில் ஏற்கனவே உள்ள ஹைட்ரஜன் வாயுவும் கலந்திருக்கும்.

பிரசவ மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படும்போது எல்லோருக்கும் தெரியும், குழந்தைகள் பிறக்கப் போகின்றன என்று. அதே போல பிரபஞ்சத்தில் காணும் இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டங்களை காணும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு அந்த வாயுக்கூட்டத்தில் 'நட்சத்திரங்கள்' பிறக்கப் போகின்றன என்று தெரியும்

காரணம் , ஈர்ப்பு விசை தன் பணியை அங்கு துவக்கும். ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றை ஒன்று இழுத்து, வெப்பமும் அடர்த்தியும் அதிகமாகி, புதிய அடுத்த தலைமுறை நட்சத்திரம் (நமது சூரியனைப் போல) உருவாகும். நட்சத்திரத்தின் தோற்றம் ஒரு அதி பயங்கர வெடிப்புடனும், அதிர்வுடனும் நடக்கும். புதிதாக தோன்றிய நட்சத்திரத்தைச் சுற்றி, தூசுகளும், வாயுக்களும் வெடிப்பினால் எறியப்பட்டு அவைகள் அந்த நட்சத்திரத்தை சுற்ற ஆரம்பிக்கும். அவைகளும் ஈர்ப்பு விசையால் இணைந்து, முதலில் சிறு சிறு பாறைகளாக உருவாகி, அந்தப் பாறைகள் மேலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, அந்த நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கோள்களாக உருவாகும். அந்த தூசுகளிலும், வாயுக்களிலும் தான் எல்லா தனிமங்களும் உள்ளனவே. அதனால்தான் அந்தக் கோள்களில் ஒன்றான நமது பூமியிலும் அனைத்து தனிமங்களும் கிடைக்கின்றன.

சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் தவிர மற்ற பாறைகளிலும் (ASTEROID) இந்த தனிமங்கள் இருக்கும். ஏனென்றால் சூரியன் உருவாகும்போது உண்டான கோள்களைப்போல தோன்றியதுதான் அந்த பாறைகளும். நமது சூரிய குடும்பத்தைச் சுற்றிவரும் அந்தப் பாறைகளில் தங்கம் உட்பட பல தனிமங்கள் இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு கோள் கண்டுபிடிக்கப் பட்டது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிய அந்தக் கோள் முழுவதும் வைரங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஒருதடவை சென்று வந்தால், உலகத்தின் முதல் கோடீஸ்வரன் ஆகிவிடலாம். சிக்கல் என்னவென்றால் அந்த கோள் நாற்பது ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. எப்படியாவது முயற்சி செய்து அங்கே போய் சேர்ந்து விடலாம் என்று நினைப்போருக்கு ஒரு மோசமான தகவல் என்னவென்றால் அங்கு வெப்பம் சுமார் 4000 டிகிரி வரை உள்ளது என்பதுதான்.

பூமியில் உள்ள சத்துக்களை எடுத்து விளையும் பயிர்களைத் தின்று வளரும் மிருகங்களையும், அந்த மிருகங்களையும், பயிர்களையும் உண்டு வளரும் நாமும் அடிப்படையில் நட்சத்திரத்தில் இருந்து வந்தவர்கள் தான். இனி யாரவாது நம்மைப் பார்த்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டால், எந்த வித ஐயமுமின்றி 'நான் நட்சத்திரத்திலிருந்து வருகிறேன்' என்று கூறலாமல்லவா?

நட்சத்திரத்தின் உள்ளே உற்பத்தியான நாம் எல்லாம் அதன் பிள்ளைகள் அல்லவா? நாம் அனைவரும் ஒரு தாய் மக்களல்லவா? ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, புவியின் பல பகுதிகளுக்கு பரவிச் சென்ற மனிதம் ஒரு மாபெரும் குடும்பம் என்பதை இந்த அறிவியல் உண்மை மீண்டும் நிரூபிக்கின்றதல்லவா?

ஒரு தாய் மக்களிடையே, ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் கலவரங்களும், போர்களும் வேண்டுமா?

ஒருகாலத்தில் குகைகளில் கற்களை மட்டுமே ஆயுதமாய் உபயோகித்து வாழ்ந்த காட்டுமிராண்டிகளின் வாழ்க்கையைப் பார்த்து நாம் கேவலமாக இப்போது சிரிக்கின்றோம். அவர்கள் அறியாமல் செய்த தவறு அது. நாகரீகம் நன்கு வளர்ந்த இந்த காலத்தில் ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் சண்டையிடும் நம்மைப் பார்த்து நம் வருங்கால சந்ததியினர் 'படித்த முட்டாள்கள்' எனக் கூறி எள்ளி நகையாடுவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- ஜெயச்சந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It