நம் தாயகம் பால்வழி மண்டலம்

 நிலவற்ற மேகமற்ற வானை மின்விளக்குகளின் தொந்தரவு இன்றி அண்ணாந்து பாருங்கள்... தெற்கில் இருந்து வடக்காக உச்சிவானில் லேசான மெல்லிய பால் மேகம் போல் மிதப்பது போன்ற ஒரு காட்சி விண்மீன்களின் ஊடே தெரியும். அதுதான் நம் சூரியக்குடும்பத்தின் தாய் வீடான பால்வழி மண்டலம். இதில் வைரத்தைக் கொட்டியது போல எக்கச்சக்கமான விண்மீன்கள் தெரியும். இங்கே 20 பில்லியன் விண்மீன் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவைகள் எல்லாம் ஏதோ அசையாமல் நிற்பது போலவும், அருகருகே உள்ளது போலவும் தோன்றுகிறது. அது உண்மையல்ல. அவைகளுக்கிடையே பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் இடைவெளி உண்டு. ஆனால் உண்மையில் விண்மீன்களுக்கிடையே சூன்ய வளியே காணப்படுகிறது. இரவில் நாம் பால்வழி மண்டலத்தின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டுதான் அதன் உட்புறத்தை பார்வையிடுவோம். எப்படி தெரியுமா, வீட்டின் வெளியே நின்று கொண்டு வீட்டிற்குள்ளே எட்டிப்பார்த்து தெரிந்துகொள்வது போன்றுதான்.

நிற்பதுவே நகர்வதுவே பறப்பதுவே

 உங்களுக்கு ஒரு விஷ‌யம் தெரியுமா? நம் சூரியக்குடும்பம் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நம் மைய நாயகனான பால்வழி மண்டலத்தை இதுவரை 20 சுற்றுகள் சுற்றியுள்ளது. பால்வழி மண்டலமாவது சும்மா இருக்கிறதா. அதுவும் ஓயாமல் நகர்ந்துகொண்டே சுற்றுகிறது. எப்படித்தெரியுமா? பிரம்மாண்டமான ராட்சச குடைராட்டினம்போல சுற்றி சுற்றி வருகிறது. அதன் வேகம் எவ்வளவு தெரியுமா? பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்திலும், சூரியன் வினாடிக்கு 250 கி.மீ. வேகத்திலும் பால்வழி மண்டலம் சூரியக்குடும்பத்துடன் சேர்ந்து வினாடிக்கு சுமார் 390 கி.மீ. வேகத்திலும் அண்டவெளியில் நகர்ந்து கொண்டே செல்கிறது. அப்போது பால்வழி மண்டலங்களுக்கிடையே உள்ள உள்ளூர் தொகுதிகள் (Local Groups) சுமார் நொடிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்கின்றன. நாம் நகரும் வேகத்தை கணக்கிட்டால் ஆடாமல், அசங்காமல், அலுங்காமல், குலுங்காமல் வினாடிக்கு 30+250+140(+ 250) + 60 சுமார் 480 கி.மீ. வேகத்தில் பிரபஞ்சவெளியில் நாம் பயணிக்கிறோம். நண்பா... என்ன ஆச்சரியமாக இருக்கிறதா... இதுதான் உண்மை.

சொகுசான பயணம்

 இந்த குடை ராட்டின பால்வழி மண்டலத்திற்குள் விண்மீன் தொகுதிகள், விண்மீன் குடும்பங்கள், நம் சூரியக்குடும்பம், அவற்றின் துணைக்கோள்கள் என எதுவுமே கீழே விழாமல் எப்படி... எப்படி.. இலாவகமாக சுழன்று.. சுழன்று.. பம்பரமாய் நடனமாடுகின்றன.. இந்த அண்டங்கள்.. யார் இவற்றை ஆட்டி வைப்பது.. வேறு யார், மைய அழுத்தமும், ஈர்ப்பு விசையும் தான். இடைவிடாத வேகமான பேரியக்கம் இது. நெடுஞ்சாலையில் ஒரு கார் 100 கி.மீ. வேகத்தை தாண்டினாலே என்னப்பா வேகம் என பிரமிக்கிறோம். ஆனால் நாம் அண்டராட்டினத்தில் ஒரு மோதல், ஓரு குலுக்கல், ஆட்டம் இன்றி பூமியில் உள்ள அனைவருமே. ஒரு மணி நேரத்தில் சுமார் 8,04,500 கி.மீ. தூரத்தை கடக்கிறோம் தெரியுமா..? எவ்வளவு சொகுசான பயணம் இது!!

எல்லையில்லா தொடர் பயணம்

 சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பால்வழி மண்டலம் தான் எல்லை எனக்கருதியிருந்தோம். பிரபஞ்சமையம் என்பது பூமிதான் என சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நம்பினர். ஆனால் இந்த பெரிய பால்வழி மண்டலமும் இப்பிரபஞ்சத்தில் உள்ள பல அண்டங்களில் ஒன்று என இப்போது தெரிந்து போயிற்று. நம் பால்வழி மண்டலம் என்பது பிரபஞ்சத்தில் எவ்வளவு பெரியது தெரியுமா? ஒரு பெரிய ரொட்டித் துண்டில் உள்ள சிறிய துணுக்கு தான் நம் பால்வழி மண்டலம். ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது. இப்பிரபஞ்சமோ மேலும் மேலும் விரிந்துகொண்டே செல்கிறது. ஒருக்கால் வெடித்துவிடுமோ? இல்லவே இல்லை. ஓட்டம் நிற்குமா? ஒருபோதும் இல்லை. நீங்கள் எவ்வளவு தொலைவில் அண்டங்களை கடந்து சென்றாலும் வேண்டாம், வேண்டாம் நில்லுங்கள்... இதோ பிரபஞ்சம் முடியப்போகிறது என எச்சரிக்க முடியுமா? அங்கு யாராவது உண்டா? இல்லவே இல்லை. எல்லையே இல்லையே.. இது முடிவற்ற வெளி...

அதுமட்டுமா நம் சூரியக்குடும்பம், பால்வழி மண்டலம், நம் பிரபஞ்சம் எல்லாம் தொடர்ந்து ஓரிடத்தில் நில்லாமல் நகர்ந்து நகர்ந்து விரிந்து போய்க்கொண்டே முடிவில்லா பயணத்தை நீட்டிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் நேற்று இருந்த இடத்தில் இன்றில்லை நண்பா! நேற்று என்ன ஒரு மணி நேரத்திற்கு முன்பு இருந்த இடத்தில் கூட இப்போது நீங்கள் இல்லையே! சுமார் 8,00,000 கி.மீ தூரம் நகர்ந்திருக்கீறீர்களே. பின் என்ன இது, என்ன இங்க இருக்கிறது, இது என் ஊர், இது என் வீடு, இது என் மாநிலம் என்பதெல்லாம் எவ்வளவு நிஜமானது? போலியானது தானே! நிலம் நிற்கிறதா, கடல் நிற்கிறதா, யார் நிற்கின்றனர் இந்த பிரபஞ்சத்தில்? எல்லாமே எப்போதுமே ஓடிக்கொண்டே நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

-     பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)