தீபச்செல்வன் நேர்காணல்முந்தைய இதழின் தொடர்ச்சி...

2008-2009 இறுதிப் போர்க்களத்தில் உங்கள் இடம், நிலை, பணி என்னவாக இருந்தது?

இந்தக் காலத்தில் எழுத்தும் மாணவத் தலைமையும் தான் எனது பணியாக இருந்தது. போர் நடைபெற்ற தருணத்தில் பலர் எழுத அவகாசமும், இடமுமற்று அலைந்து கொண்டிருந்தார்கள். போரின் பொழுதான வீழ்ச்சிகளால் மனமுடைந்திருந்தேன். போராட்ட நகர்வுகளில் நான் அதிகம் நெருங்கியிருந்தேன்.ஒரு மாற்றம் வரும், விடுதலை கிடைக்கும், மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்பியிருந்த காலம். ஆனால் வீழ்ச்சியை உலகமே சேர்ந்து எங்களுக்கு வழங்கியது. அதன் தடயங்களைப் பதிவாக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக எழுதி வந்தேன். போரின் தாக்கத்தால் ஏற்பட்ட எல்லா உணர்வுகளையும் எழுதினேன். எல்லாத் தருணங்களிலும் எழுதிக் கொண்டிருந்தேன். மனதில் ஏற்பட்ட துயர்களை ஏமாற்றங்களை வீழ்ச்சிகளை எழுதுவதைவிட, வேறு என்ன செய்வது என்று தெரியாத தருணத்தில் எழுதப்பட்டவை. நான் எழுதிய கவிதைகள் வழியாக ஈழத் தமிழர்கள் மீதான யுத்தத்தை அதனால் ஏற்பட்ட வடுவை வீழ்ச்சியை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ள உதவினால் மட்டும் போதுமானது. அந்த நோக்கத்தில் எழுதுவதில் தீவிரமாயிருந்தேன். 

மாணவத் தலைமையின் நோக்கம் போரை நிறுத்துவதும், போருக்கு எதிரான போக்கை வெளிக்காட்டுவதும்தான். இன்றும் நான் உயிரோடு இருப்பது எனக்குக் கனவைப்போலத்தான் இருக்கிறது. இன்று உன்னைச் சுடப்போகிறோம், நாளை உன்னைச் சுடப்போகிறோம் என்று இராணுவம் தொலைபேசி வழியாக அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அதனால் கனவில் நான் எத்தனையோ நாட்கள் கொல்லப்பட்டிருந்தேன். கனவில் சன்னங்கள் என் நெஞ்சைத் துளைத்தன. யாழ் நகரத் தெருவில் குருதி பீறிட எனது பிணம் எறியப்பட்டுக் கிடந்தது. எனினும் நான் சோர்வடைந்து போகவில்லை. ஆனால் எனது செயற்பாடுகளுக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இரக்கமற்ற போரை நிறுத்தி எமது மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். தலைமை வகிக்க நமது மாணவர்கள் தயங்கியபொழுதும் விலகிய பொழுதும் நான் அதைப் பொறுப்பெடுத்தது நமது மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தது. எனது மாணவர்கள் பக்கபலமாக என்னுடன் நின்று செயற்பட்டார்கள். எனக்கு அன்று எல்லாமுமாக இருந்தது என் மாணவர்கள்தான். அதனால் தான் தொடர்ந்து என்னால் செயற்பட முடிந்தது. அத்தகைய நெருக்கடியான காலத்தில் நாம் செய்த பணிகள் எதிர்ப்பைப் பதிவு செய்யவாவது உதவியது என்பது மட்டுமே இதில் ஆறுதலானது. வீதியில் இறங்கி மக்களுக்காகக் குரல் கொடுக்க முடிய வில்லை என்றாலும் தொடர்ந்தும் அறிக்கைகள், கடிதங்கள், மௌன பிரார்த்தனைகள் போன்ற வெளிப்பாடுகளின் வாயிலாக எதிர்ப்பை வெளிக் காட்டினோம்.

வன்னிப் போர் பல்கலைக்கழகத்தில் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தியது. மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்யும் நிலைக்குப் போயிருந்தார்கள். அவர்களின் குடும்பங்கள் போரில் பாதிக்கப்பட்ட பொழுது அவர்கள் மிகவும் சோர்ந்து போனார்கள். போரில் நிலங்கள் வீழ்ச்சியடைந்த பொழுதும் போரின் இறுதிக் கட்டங்களின் பொழுதும் மனமுடைந்து போனார்கள். அவர்களைத் தேற்றி பாதுகாப்பது அவர்களுக்கு உணவு நிதி உதவி போன்ற வேலைகளை செய்வது என்பது முக்கியப் பணியாக முன்னெடுக்கப்பட்டது. அன்று பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் என்.சண்முகலிங்கன் மாணவர் நலத்திட்டம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியவர். அன்றைய சூழலில் என் படிப்பில் நான் ஆர்வம் செலுத்தாமல் மாணவர் ஒன்றியப் பணிகளில்தான் முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தேன். இப்படி என்னால் இயன்ற பணிகளைச் செய்தேன். என் வாழ்க்கையில் சந்திக்க முடியாத காலமாக மறக்க முடியாத காலமாக எதிர்கொண்ட காலங்களில் இவைகளும் அடங்குகின்றன. 

போரில் சிக்கிய பொதுமக்களின் மனநிலை?

போருக்குள் சிக்கிய மக்கள் போர் நிறுத்தப்படும் என்று தொடர்ந்தும் எதிர்பார்த்தார்கள். மரணங்களால் அச்சங்களால் மக்களின் வாழ்க்கை அவலத்தோடிருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் இடம் பெயர்ந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஓடும்பொழுது பலதையும் இழந்து கொண்டுதான் ஓடினார்கள். சக உறவுகளும் சக மனிதர்களும செத்துக் கொண்டிருக்க கொல்லப்பட்டவர்களைத் தூக்கி புதைக்க நேரம், காலம், அவகாசமின்றி ஓடிக்கொண்டிருந்தார்கள். தர்மபுரம் முதல் முள்ளிவாய்க்கால் வரை எல்லா இடங்களும் மக்களின் அவலத்தால் நிறைந்து தொடர்ந்தது. யுத்தம் சனங்களின் மனநிலையைச் சாகடித்தது.

இந்த அவலங்கள் ஊடகங்களில் இறுதித்தருணம் வரை வந்து கொண்டிருந்தன. எஙகளைக் காப்பாற்றுங்கள். நாங்கள் அழிக்கப்படுகிறோம் என்ற எங்கள் மக்களின் குரல்கள் வந்து கொண்டுதானிருந்தன. யார் அதைக் கேட்டார்கள்? யார் அதற்கு மதிப்பளித்தார்கள்? யார் எங்கள் மக்களின் மனநிலைக்கு நடவடிக்கை எடுத்தார்கள்? மக்களோ அய்நா காப்பாற்றும், அமெரிக்கா காப்பாற்றும், இந்தியா காப்பாற்றும் என்று நம்பி நம்பி ஏமாந்தார்கள். எல்லாரும் தமிழின அழிப்பு என்கிற விதத்தில் ஒரே மனதுடன் ஒன்றாகக் கைகோர்த்து நின்று இலங்கை அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவளித்தார்கள்.

அந்நாட்களில் போர் வலயத்திலிருந்து வெளியில் நின்ற நண்பன் ஒருவன் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினான். நாங்கள் மீளமாட்டோம், எங்களை உலகம் கைவிட்டு விட்டது என்று நம்பிக்கையிழந்துப் பேசினான். பதுங்குகுழியில் இருந்து கொண்டு மக்களுக்கான தொலைபேசிச் சேவையை அவன் நடத்திக் கொண்டிருந்தான். அவன் பேசப் பேச செல் வெடித்துக் கொண்டிருந்தது. முள்ளிவாய்க்கால் மணற் பதுங்குகுழியில் தஞ்சமடைந்திருந்த எனது அம்மா என்னுடன் பேசும்பொழுதும் நாங்கள் உயிருடன் திரும்ப மாட்டோம் என்றார். அன்றைய நாட்களில் போர் வளையத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அங்கிருந்து என் செவிகளுக்கு எட்டும் வார்த்தைகள் என்னை முழுமையாகப் பாதித்தது. போர் நிறுத்தப்படும் யுத்தம் முடிவுக்கு வரும் என்று நமபிய மக்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் நம்பிக்கை இழந்து தவித்தார்கள். ஈழததமிழ் மக்கள் இனி எந்த ஒரு காலத்திலும் யுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்பதை இலக்காக வைத்தே இப்படி யுத்தம் நடத்தப்பட்டது. மனங்களைக் குறி வைத்திருந்த இந்தப் போர் எங்கள் மக்களின் மனநிலையை மிகக் கொடூரமாகச் சிதறடித்துவிட்டது. 

போர் முடிந்த பின் மக்களின் நிலை, போராளிகளின் நிலை எப்படி இருக்கிறது?

போர் முடிந்த பொழுது சுமார் மூன்றரை லட்சம் மக்கள் தடுப்பு முகாமிற்குள் வைக்கப்பட்டார்கள். போருக்குப் பின்னான மக்களின் மனநிலை தடுப்பு முகாம் வதைகளினால் முழுக்க முழுக்க மறைமுகமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டது. மிக நெருக்கமான கூடாரங்களும் சுற்றிக் கட்டப்பட்ட முட்கம்பிகளும் தொடர்ச்சியாகச் சிறை வைக்கப்பட்டமையும் மக்களுக்குத் தொடர் சித்திரவதைகளை வழங்கியிருந்தன. அடைக்கப்பட்டிருந்த மக்களின் மனநிலை என்பது எப்பொழுது வெளியில் வருவோம் என்ற ‘விடுதலை’யைப் பற்றியதாக மட்டுமே இருந்தது. உறவினர்கள் அவர்களைச் சந்திப்பது முதல் எல்லாமே தடையாகவும் மட்டுப்படுத்தபட்டதாகவும் இருந்தது. தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எனது அம்மா, தங்கையை இரண்டு ஆண்டுகளின் பின்னர் ஐந்து நிமிட அவகாசத்தில் பார்த்தப் பொழுது நாங்கள் பெருந்துயரை அடைந்தோம். தடுப்பு முகாமில் இருந்த அம்மாவின் கூடாரத்திற்குள் இரண்டு நாட்கள் வாழ்ந்திருந்தேன். தடுப்பு முகாமின் உள்முகம் எத்தகைய பயங்கரமானது என்பது அன்றுதான் தெரிந்தது. யுத்தமும் தடுப்பு முகாமும் மக்களை வதைமுகாம் வாசிகளாக்கியிருந்தது. அவர்கள் மெலிந்து மனமுடைந்து போயிருந்தார்கள்.

நாள் முழுவதும் விடுவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த மக்களில் பலர் இன்றும் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிவாரண நடவடிக்கையில் பல்வேறு அரசியல்களும் புறக்கணிப்புகளும் நடக்கின்றன. பெரும்பாலான இடங்களில் இன்னும் மக்கள் தறப்பாள் கூடாரங்களில்தான் இருக்கிறார்கள். நாங்களும் தறப்பாள் கூடாரத்தில் தான் வாழ்கிறோம். எதுவுமற்ற தறப்பாள் கூடார வாழ்க்கை தரும் அவலம் மிகவும் கொடியது. மழை வெயில் என்று எப்பொழுதும் அது சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய அவலத்தில் சனங்களின் காணி நிலங்களைக் கையகப்படுத்த அரசு பெரும்பாடுபடுகிறது. அவலத்தின் மீது அவலத்தை அரசு ஏற்படுத்துகிறது. போரின் பிறகு மக்களின் நிலை என்பது எதுவுமற்ற நிலையில் எல்லாம் இழக்கப்பட்டு அவலத்தோடு நிலத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிற தன்மையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. போராளிகளின் நிலைமை இன்னுமின்னும் துயரமானது.

போரின் பிறகு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்ற அடிப்படையில் பல போராளிகள் சரணடைந்தார்கள். புலித்தேவன், நடேசன், புதுவை இரத்தினதுரை, பாலகுமாரன் என்று முக்கியப் போராளிகள் பலரும் இலங்கை மற்றும் சர்வதேச வாக்குறுதியை நம்பிச் சரணடைந்தபொழுது பலர் களத்தில் வைத்தே சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். ஏனைய போராளிகளில் பலருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலிருக்கிறது. பேராளிகள் புனர்வாழ்வுத் தடுப்பு முகாம் என்பதும் பேராளிகள் மன நிலையைச் சிதைக்கும் விதமாக அமைந்து சித்திரவதைகளைக் கொடுத்திருக்கிறது. மீண்டும் போராட்டத்தையும் துப்பாக்கிகளையும் அவர்களால் நினைத்துப் பார்க்கக்கூடாத வகையில் மறைமுகமாக வதை செய்யப்பட்டுள்ளது.

தடுப்புமுகாமில் வைக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள் மட்டும் தற்பொழுது விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களால் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வது என்பது பெரும் நெருக்கடியாய் இருக்கிறது. தொழில், கல்வி, பொருளாதாரம் என்று எந்தப் பின்னணியும் இல்லாமல் போராட்டத்திற்காக மிக நீண்ட காலத்தைச் செலவு செய்து விட்டு இன்று போய் வெறுந்தரையில் வாழுங்கள் என்றால் எப்படி வாழ்வது? மிகுந்த நெருக்கடியுடன் சீடிக்கடை நடத்தும், தேனீர் தள்ளுவண்டியைத் தள்ளிச் செல்லும் போராளிகளை விடவும் அங்கங்களை இழந்து அடுத்த கட்டம் எப்படி வாழப்போகிறோம் என்று தெரியாதவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள். இந்த நிலையில் வாழும் இவர்களை அரசும் படைகளும் தொடர்ந்து பின்தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழகம், இந்தியா போர் குறித்து மேற்கொண்ட நிலைப்பாடுகள் பற்றி மக்கள் பார்வை என்ன?

தமிழக மக்கள் ஈழத்து மக்கள்மீது எத்தகைய அன்பை வைத்து உறவைக் கொண்டாடுகிறார்கள் என்பதை இப்பொழுது தமிழகம் வந்திருக்கிற சூழலில் இன்னும் உணர முடிகிறது. தமிழக உறவுகள் என்றாலே பெரும் எதிர்பார்ப்புடன் நேசத்துடன் எங்கள் மக்கள் எதிர்நோக்குகிறார்கள். ஈழப்போரின் இறுதிக் கட்டத்திற்கு எதிராக முத்துக்குமாரன் போன்றவர்கள் தீக்குளித்து அந்த உறவின் பற்றை வெளிப்படுத்தினார்கள். ஈழப்போரின் இறுதி நாட்கள் தமிழகத்தவர் பலரை நிலைகுலையச் செய்து தவிக்கப் பண்ணியிருக்கிறது. வரலாற்று ரீதியாக இன ரீதியாக தமிழகமும் தமிழ் ஈழமும் கொண்டிருக்கிற உறவின் அடிப்படையில் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரின் பொழுது கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியது.

தீக்குளிப்பு, சாலை மறியல் போராட்டம், கவன ஈர்ப்புப் போராட்டம், உண்ணாவிரதப் போராட் டம் என்று தொடர்ச்சியாகப் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட பொழுதும் அந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி போராட்டத்தின் கூர்மையை மழுங்கடித்து, தனது நலன்களைத் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி சாதித்திருக்கிறார். இதனால் உலகத் தமிழர்களுக்கே கருணாநிதி துரோகமிழைத்துள்ளார் என்று எங்கள் மக்கள் கருணாநிதி மீது மிகுந்த வெறுப்போடு இருக்கிறார்கள். தமிழக மக்களின் தியாகங்களையும் ஈழத் தமிழர் மீதான பற்றையும் கருணாநிதி தனது குடும்பத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார். தமிழக வரலாற்றில் கருணாநிதி அவர்கள் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்பை அவர் உடைத்தெறிந்து உலகத் தமிழர்களிடத்தில் களங்கத்தின் சின்னமாகி யிருக்கிறார். கருணாநிதியின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட எங்கள் மனநிலை மிக மிகக் காயப்பட்டிருக்கிறது.

ஈழத் தமிழர்கள் மீதான போரில் இந்தியாவின் பங்கு முக்கிய செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது. எங்கள் மீது கருணை காட்டாத இந்தியாவிடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறோம். இறுதித் தருணம் வரை எதிர்பார்த்திருந்தோம். இந்தியா தமிழக மக்களை அவர்களின் எழுச்சியை மதிக்காமல் ஈழத்தமிழர்களைக் கைவிட்டது. இலங்கை அரசினது இந்தப் போரில் உலக வல்லாதிக்கங்களின் ஒத்துழைப்பில் இந்தியாவின் பங்களிப்புப் பெரியது என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்தான். இறுதியில், தோற்ற பொழுதும் இந்தியாவின் துரோகமும், மௌனகரமான நடவடிக்கையும் எங்கள் மனதை மிகவும் நோகடித்தது. இத்தனைக்கும் பிறகும் ஈழத்தமிழர்கள் ஈழத்தீர்வைப் பெற இந்தியா உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிற கையறு நிலையிலே நாங்கள் இருக்கிறோம் என்பதும் அவலமானதுவே.

இந்திய, தமிழக அரசியல் குறித்து உங்கள் பார்வை என்ன?

தமிழகத்தில் இப்பொழுது ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, ஈழத்தமிழர் துரோகம் என்பன செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது. தமிழக மக்கள் எத்தகைய ஆட்சியையும் சூழலையும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை, இந்தத் தேர்தலில் மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். தமிழக அரசியலில் ஈழத் தமிழர் விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. புதிதாகப் பதவி ஏற்றுள்ள முதல்வரிடத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். தமிழக மக்களும் நம்புகிறார்கள். ஈழத்தமிழர்கள் தொடர்பாக அவர் கொண்டு வந்துள்ள தீர்மானங்கள் கட்சி பேதங்களை கடந்து ஆதரவு பெறுகிறது. ஒட்டுமொத்தச் சட்டமன்றமும் இதற்கு ஆதரவளித்துள்ளது என்பது ஒட்டுமொத்தத் தமிழகத்தினதும் ஆதரவுதான். இன்று தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள அரசியலிலும் ஈழத்தமிழர் விடயம் செல்வாக்கு செலுத்துகிறது. இந்திய மைய அரசியலிலும் இதன் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது.

புதுவை மாநிலத்திற்குச் சென்றிருந்த பொழுது அங்கு நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்கும் ஈழத் தமிழர் விவகாரம் முக்கிய பங்களித்திருக்கிறது என்று நண்பர்கள் குறிப்பிட்டார்கள். எல்லாமே காங்கிரஸ் கட்சியை நோக்கிய எதிர்ப்பாகவே வெளிப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகம் இன்று இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தைச் செலுத்துகிறது. தவிர ஊழலுக்கு எதிராக இந்தியாவின் அரசியலில் பல எதிர்ப்புகள் எழுகின்றன. இங்கு வந்த பார்த்த பொழுது உலகத் தமிழினத் தலைவர் கலைஞர் என்று வீதி முழுக்க எழுதியிருக்கிறார்கள். இந்த கட்டவுட்டுகளும் பொய் வாசகங்களும் எனக்குப் புதிதாய்த் தெரிகின்றன. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிக்கிறோம் என்று சொல்லும் சில கட்சிகள் மீதும் தமிழக மக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள் என்பதையும் பார்த்தேன். அது அவசியமானது. நாங்கள் தமிழக அரசியல் கட்சிகள், இந்தியக் கட்சிகள் மீது எங்கள் பிரச்சினையைத் தீர்க்கும் கோரிக்கையை வைக்கத்தான் முடியுமே தவிர அவற்றை விமர்சிக்க முடியாது. அதைச் செய்து அந்தக் கட்சிகளை வழி நடத்த வேண்டியது தமிழக இந்திய மக்களும் ஊடகங்களும்தான்.

இந்தியாவுக்குரிய பிரச்சினைகள் பெருமளவானவை இன்னும் தீர்க்கப்படாதிருக்கின்றன. தமிழகத்தின் பிரச்சினைகள் பலவும் தீர்க்கப்படாதிருக்கின்றன. ஊழல், சாதியப் பிரச்சினைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் குரல்கள், ஆதிக்குடிகளின் பிரச்சினைகள், வளநில இழப்புகள், அந்திய ஆதிக்கம் என்று ஒட்டுமொத்த இந்தியாவில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழக அரசியற் தலைவர்களுக்கு ஈழப் பிரச்சினையில் இருக்கிற ஆர்வம் இந்தப் பிரச்சினைகளில் இருப்பதில்லை என்று எனது தமிழக நண்பர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். நாம் சனங்களின் வாழ்வை நோக்கியும் வளம் மிகுந்த எதிர்காலத்தை நோக்கியுமே நகர வேண்டும். பாராளுமன்றத்தை நோக்கி நகர்வதும் அமைச்சர் பதவிகளை நோக்கி நகர்வதும் இலட்சியமாக இருந்தால் மக்கள் இப்படிப் பல்வேறு அவலங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். இந்த விடயம் ஈழ இலங்கை அரசியலுக்குப் பொருந்துகிறது. அங்கும் இந்த அணுகுமுறை காணப்பட்டதினால்தான் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது. இப்பொழுது மறுபடியும் இதே போக்கே காணப்படுகிறது.

தற்பொழுது தமிழக அரசியலில் ஏற்பட்ட விழிப்புணர்வு தொடர வேண்டும். அதேவேளை தமிழக மக்களுக்காகவும். ஈழ மக்களுக்காகவும் நுண்ணிய சிந்தனைகளுடன் குரல் கொடுக்கிற மணியரசன், விடுதலை இராசேந்திரன், தியாகு, கொளத்தூர் மணி போன்றவர்களின் குரல்களும் எழுச்சி அலைகளை உருவாக்குகிற சீமானைப் போன்றவர்களது நடவடிக்கைகளும் தொடர்ந்து தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். அதே வேளை வை.கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்களின் ஈழத்து ஆதரவுக குரல்களை நாங்கள் மதிக்கிறோம். நாம் இந்த அரசியலில் நேர்மையை எதிர்பார்க்கிறோம். அது இல்லாத சூழலிலும் தொடர்ந்து அதை நாம் வலியுறுத்த வேண்டியும் இருக்கிறது. இன்றைய தமிழகத்தின் குரல்களையும் எழுச்சியையும் புதிய முதல்வர் மதிக்கிறார் என்றே நினைக்கிறேன். இந்த விடயங்கள் மாற்றங்களை உருவாக்கி எழுச்சியைப் பதிவு செய்யுமாக இருந்தால் இன்றைய முதல்வர் தமிழர்களின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுவார்.

இன்று இந்தியா மத்திய அரசை உலுப்பும் தமிழக மக்களின் உணர்வு வெற்றி பெற வேண்டும். நாம் இன்று முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களது பிராந்திய நாடான இந்தியாவின் அரசியல் நமக்கு முக்கியமானது. இந்திய அரசியல் குறித்து அதிக விடயங்களை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை. ஈழம் இந்தியாவை ஆதரவு தேடும் நாடாகவே பார்க்கிறது. தமிழகத்தின் அழுத்தம் இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டும். நாம் நோக்கி நகர வேண்டிய அரசியல் வழியில்தான் இப்பொழுது பயணிக்கிறோம். இன்னும் இலக்கை அடைய நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த இலக்கு என்பது முழுக்க விழிப்புணர்வாலும் தொடர் செயற்பாடுகளாலும் எழுச்சிகளாலும் தங்கியிருக்கிறது.

ஐ.நா. அறிக்கை குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன? ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள செய்திகள் பரவலாக மக்களைச் சென்றடைந்துள்ளனவா?

அய்நா அறிக்கை இலங்கையை உலுப்புகிறது என்பது உண்மைதான். ஆனால் ஏன் அது இலங்கையை உலுப்புகிறது என்பது நமக்குத் தெரிந்ததுதான். அய்நா இலங்கை அரசு நிகழ்த்திய போர்க்குற்றங்களை முழுமையாகப் பதிவு செய்துவிடவில்லை. ஆனால் போர்க்குற்றங்களை இலங்கைப் படைகள் செய்தன என்பதை உறுதி செய்திருக்கிறது. அய்நா, அமெரிக்கா எல்லாமே இந்தப் போர் நடந்து முடியும் வரை இதற்காகக் காத்திருந்திருக்கிறது. உடனே தடுத்து நிறுத்த வேண்டிய போரைப் பற்றி இரண்டு ஆண்டுகளின் பின்னர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். மனித உரிமையைக் காப்பாற்றுவது என்பது பல ஆண்டுகள் கடந்து வெற்றி தோல்வியை மதிப்பிடுவதைப் போலல்ல. அதைத்தான் அய்நா செய்திருக்கிறது.

எமது மக்கள் அய்நா அறிக்கை ஈழ அரசியலில் தாக்கத்தை செலுத்தும் என்று நம்புகிறார்கள். எங்கள் மீதான படுகொலைப் பயங்கரம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது அவர்களுக்கு ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. இந்த ஆறுதல் எதிர்பார்க்கிற மாதிரி அய்நா அறிக்கை விளைவுகளைக் கொண்டு வருமா? என்பது கேள்விதான். அல்லது இலங்கை அரசைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அரசியல் பண்ட மாற்றுகளுக்காக இந்த அறிக்கை வெளியிடப்பட்டதா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஈழத் தமிழ் மக்கள் மீது பேரழிவுகள் நிகழ்த்தப்படும் பொழுது பார்த்துக் கொண்டிருந்த அய்நா இப்பொழுது இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. சரி, அய்நா மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை ஈழத் தமிழர் மீது உண்மையில் அக்கறை கொண்டுதான் விசாரணைக்குப் பரிந்துரைத்திருக்கிறது என்றால் அதை நடத்திக்காட்டிய பிறகே நாம் நம்ப முடியும். அய்நா அறிக்கை ஈழப் பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றது. பெருமளவான மக்களைச் சென்றடைந்திருக்கிறது. அதன் விளைவுக்குத்தான் காத்திருக்கிறோம்.

புலிகளின் செயல்பாடு குறித்து ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ள குற்றாய்வுகள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

ஒருமுறை அய்நா செயலாளர் போர் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் பெரும் ஆயுதங்களை இராணுவத்தினர் பயன்படுத்தக்கூடாது. சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி யுத்தம் நடத்தலாம் என்றார். அப்படி என்றால், சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்களைக் கொல்லலாம் என்கிற மாதிரியான கருத்து. இதுதான் அவர்களின் மனிதாபிமானம். இப்படி ஒரு அணுகுமுறையில் புலிகள் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்கிற வார்த்தைகள் ஈழப் போராட்டத்தை நிராகரிப்பதற்காகச் சொல்லப்பட்டுள்ளன. ஈழப்போர் என்பது உள்நாட்டில் நடந்த சின்ன வன்முறை கிடையாது. ஒரு சிறிய கிளர்ச்சிக் குழுவுடனான யுத்தம் கிடையாது. ஈழத் தமிழர்களின் பெரும் போராளி அமைப்போடு நடந்த யுத்தம். இது அறுபதாண்டுக் கால அரசியல் இனப்பிரச்சினை. ஈழத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினை. வாழும் உரிமைக்காக ஒரு போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தை அழித்து மக்களை நலிவுபடுத்த நடத்தப்பட்ட யுத்தம். இரண்டு தேசங்களுக்கு இடையில் நடந்த யுத்தம். இந்த யுத்தம் மூலம் தமிழர் தேசத்தின் கட்டுமானங்கள், போராட்ட அமைப்பு, மக்கள் என்ற எல்லாமே சிதைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் புலிகளையும் அவர்களின் நடவடிக்கைகளையும் அய்நா அணுக வேண்டும்.

ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் போராளிகளையும் அய்நா முதலில் அங்கீகரிக்கட்டும். அதன் பின்னர் போராளிகள் மீதான குற்றச்சாட்டுகளை ஆராயலாம். இந்தப் பேரழிவுகளுக்கு முன்பாகவே புலிகள் அய்நாவின் அங்கீகாரத்தை நோக்கி குரல் எழுப்பியவர்கள். மக்கள் குரல் எழுப்பினார்கள். சர்வதேச அங்கீகாரத்தையும் நற்பெயரையும் பெறுவதற்காக உலகின் பல்வேறு பாகங்களில் நடந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்கள். போரை மறுத்து, புலிகள் தீர்வைக் கோரியபொழுது இந்த அய்நா என்ன செய்தது? புலிகளின் மீதும் மக்கள் மீதும் இலங்கை அரசுதான் போர் தொடுத்தது. இலங்கை அரசு மனிதாபிமானப் போர் என்று சொல்லிக் கொண்டு நடத்திய படுகொலைக்கு ஆதரவளித்த வல்லாதிக்கங்களும் அதன் மனிதாபிமானம் என்ற கவர்ச்சி முகமூடி அணிந்த அய்நாவும் இன்று புலிகளும் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்று சொல்லி தங்கள் அறிக்கைக்கு சமநிலை தேடுகிறார்கள்.

இலங்கை அரசியலில் சிங்களக் கட்சிகளின் நிலைப்பாடு? சிங்கள இடதுசாரிகள் அணுகுமுறை பற்றிப் பேசுங்கள்?

காலம் காலமாக இலங்கை அரசு எப்படி ஆண்டு கொண்டிருக்கிறதோ அதே ஓட்டத்தில் தாங்களும் ஆள வேண்டும் என்பதுதான் இலங்கை சிங்களக் கட்சிகளின் நிலைப்பாடு. தமிழர்களுடனான பேச்சுவார்த்தை, வாக்களிப்பு, ஒப்பந்தம் எல்லாவற்றையும் கால ஓட்டததில் இழுத்தடித்து கிழித்தெறிவதுதான் சிங்களக் கட்சிகளின் அரசியல். சிங்கள மக்களிடத்தில் இனவாதத்தை ஊட்டி, தொடர்ந்தும் முழு இலங்கையும் எப்படி ஆளுவது என்பதுதான் பெரு ஆதரவுடைய சிங்களக் கட்சிகளின் நிலைப்பாடு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் எந்த வேறுபாடுகளையும் கொண்டிராத இனவாதக் கட்சிகள், இலங்கை, ஈழ நாட்டின் அரசியல் பிரச்சினைகளிலும் மக்கள் அழிவுகளிலும் இந்தக் கட்சிகள் முக்கிய காரணங்களை வகித்திருக்கின்றன. இந்தக் கட்சிகள் ஆண்ட காலத்தில் நாங்கள் படுகொலை செய்யப்பட்டோம் எங்கள் போராட்டம் அழிக்கப்பட்டது. அதேவேளை இந்தக் கட்சிகளின் போக்குகளினால்தான் ஈழப் போராட்டம் வெடித்தது.

இலங்கை & ஈழப் பிரச்சினையில் இடதுசாரிக் கட்சிகள் செல்வாக்கை இழந்து காணப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி சோசலிச ஈழத்தைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், சிங்கள மக்களிடத்தில் அந்தக் கட்சிக்கு எந்தச் செல்வாக்கும் கிடையாது. ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி நான்காம் ஈழப் போரின் அழிவுகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த கட்சி. தாங்களும் ஒரு இடதுசாரிக் கட்சி என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள்தான் புலிகள் பயங்கரவாதிகள், பிரிவினைக்காரர்கள், அவர்களுடனான சமாதான ஒப்பந்தத்தை கிழித்து எறிந்து விட்டு யுத்தத்தை நடத்தி புலிகளை அழியுங்கள் என்ற அரசுக்கு ஆணையிட்டவர்கள். இன்று வரை அதைச் சொல்லி சிங்கள மக்களிடத்தில் அரசியல் செய்கிறார்கள். இன்று தமிழ் மக்களின் காயங்களை ஆற்றப் போகிறோம் என்று வடக்கு கிழக்கிற்கு வருகிறார்கள். அவர்களால் ஏற்பட்ட காயத்தை அவர்களே ஆற்றப் போகிறார்கள் என்பது எத்தகைய கொடிய அரசியல்? அவர்கள் ஆணையிட்டு நடத்திய யுத்தத்தில் காணாமல் போனவர்களை அவர்களே மீட்கப்போகிறார்கள் என்பது எத்தகைய மோசடி அரசியல்? வடக்கு கிழக்கில் தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவே ஜே.வி.பி. இப்படிச் சொல்லுகின்றது.

தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த «ஜ.வி.பி. தமிழர்களுக்குத் தனியான தீர்வு தனி ஈழம் என்பதை நிராகரிக் கிறது. அண்மையில் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரிவின்சில்வா தமிழர்களுக்குத் தீர்வு வழங்க உண்மையான திட்டம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார். அப்படி என்றால் ஜே.வி.பி. தமிழர்களுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் தனது கட்சி அரசியலுக்காக அரசை எதிர்க்க வடக்கு, கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளை எப்பொழுது ஜே.வி.பி. கையில் எடுத்ததோ அன்றிலிருந்து ஜே.வி.பி. தோல்விகளைச் சந்தித்து வருகிறது.

சிங்கள மக்களிடத்தில் பெரும் ஆதரவைக் கொண்டிருந்த அந்தக் கட்சி ஆதரவை இழந்திருக்கிறது. விக்கிரமபாகு கருணாரத்தனா போன்றவர்கள் அரசின் மீறல்களைத் தொடர்ச்சியாக எதிர்த்து வருபவர்கள். தமிழ் மக்களுக்கு ஆதரவைத் தெரிவிப்பவர்கள். இடதுசாரிகள், தமிழ் ஈழத்தை ஏற்றுக்கொள்வதா என்பதும் ஈழத் தமிழர்கள் பற்றி பேசும்பொழுதும் சிங்கள மக்களால் தூக்கி எறியப்படுவதும் அரசியலில் பின்னடைவுகளை உருவாக்குகின்றன. இன்று சிங்களக் கட்சிகளின் அரசியல் மோதல்களில் புலிகளை யார் அழித்தது? ஈழப் போராட்டத்தை யார் சிதைத்தது என்றுதான் ‘போர்ப் பொறுப்பேற்று’ வாக்குவாதங்கள் நடக்கின்றன.

போர் நிறுத்த முயற்சியில் புலம் பெயர் தமிழர்களின் பங்கு குறித்து?

ஈழத்தில் போரும் பேரழிவுகளும் நடந்து கொண்டிருந்தபொழுது போராட்டத்தின் நியாயத்தை உலக அரங்குகளில் நின்று புலம்பெயர்ந்த மக்கள் ஒலிக்கச் செய்தவர்கள். ஈழத் தமிழர்களின் பெரும் சக்தியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் முக்கியம் பெறுகிறார்கள். நிலத்தில் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைக்கும் இனவழிப்பிற்கும் எதிராகப் புலத்தில் வெளிப்படுத்தப்படும் உணர்வு வெளிப்பாடுகள் மிகவும் முக்கியமானது. நான்காம் ஈழப் போரில் வர்ணகுலசிங்கம் முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னாள் தீக்குளித்துப் போர் நிறுத்தத்தை வலியுறுத்தினார். இதைவிட புலம்பெயர் மக்கள் என்ன செய்ய வேண்டும்? முருகதாசனின் இந்த முடிவும் போராட்டமும் சாதாரணமான வெளிப்பாடு கிடையாது. புலம் பெயர்ந்த மக்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியிருந்தார்கள். வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். நடைப்பயணங்களையும் உண்ணாவிரதங்களையும் நடத்தினார்கள்.

ஈழத்தில் நடந்த ஆயுதப் பேராட்டத்திற்கும் புலத்தில் நடந்த ஜனநாயகப் போராட்டத்திற்கும் உலகம் ஆதரவளிக்காமல் ஈழத் தமிழர்களைக் கைவிட்டு துரோகம் இழைத்தது. ஒரு பூர்வீக இனம் தனது வாழ்க்கைக்காகப் போராடுவதை தனது அடையாளங்களைக் கோருவதை உலகம் நிராகரித்திருக்கிறது. உலகமெங்கும் நடத்தப்பட்ட ஜனநாயகப் போராட்டங்களை உலகம் மதிக்கவில்லை. இலண்டனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் இலங்கை ஜனாதிபதி உரையாற்ற இருந்தார். அவர் உரையாற்றுவதைத் தடுத்து ஓட ஓட விரட்டவும் முடியும் என்பதைப் புலம்பெயர் தமிழர்கள் உணர்த்தியிருந்தார்கள். புலத்தில் சிங்கள மக்களிடத்தில் உரையாற்ற வந்த போர்க் குற்றவாளியான சவேந்திரசில்வாவிடம் போர்க் குற்றங்கள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் நேரடியாக அவைக்குள் நுழைந்து கேள்வி எழுப்பினார்கள். இத்தகைய எதிர்ப்புகளைப் புலம்பெயர்ந்த சூழலில் வெளிப்படுத்துவது எமக்கு ஆறுதல் அளிக்கின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய செய்திகள் மக்களுக்குத் தெரியுமா? அது பற்றி உங்கள் கருத்து என்ன?

நாடு கடந்த அரசு அமையப் போகிற ஈழ அரசின் முன் நடவடிக்கைகளில் ஒன்றுதான், ஈழ அரசை அமைக்கிற அதற்கு வழிகாட்டியான புலத்தின் வெளிப்பாடாகவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு பெரிய விடயம் என்பதை அரசாங்கம்தான் எங்கள் மக்களுக்கு அடிக்கடி உணர்த்தி வருகிறது. நாடு கடந்த அரசாங்கத்தால் அரசிற்கு ஏற்படும் பதற்றங்கள் அடிக்கடி எங்கள் நாட்டு ஊடகங்களில் வருகின்றன. வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடிக்கடி புலம்புகிறார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதயம் ஈழப் போராட்டத்தில் முக்கிய தாக்கத்தை செலுத்துகிறது. ஏற்கனவே ஈழத்தில் நடந்த நிழல் அரசிற்கும் இதற்கும் இடையில் வடிவ அடிப்படையில் சில வேறு பாடுகள் உள்ளன. ஆயுதப் போராட்டச் சூழலில் சிவில் கட்டமைப்புகளை ஈழத்தில் நடந்த நிழல் அரசு கொண்டிருந்தது. நாடு கடந்த அரசாங்கம் ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்ட புலச்சூழலில் உதயமாகியிருக்கிறது. ஈழப் போராட்டத்தின் இலட்சியத்தை நோக்கி நகர்வதில் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு இருக்கிற பங்கு இன்று முக்கியமானது.

தலைவர் இருக்கிறார், இல்லை என்பது குறித்து மக்களிடையே நிலவும் கருத்து?

நான் மக்களுடைய நம்பிக்கையுடன் உரசிப் பார்க்க விரும்பவில்லை. எங்கள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துச் சில புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது. ஆனால் ஈழத்தில் மட்டுமல்லாமல புலம்பெயர் மக்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களும் இன்று பிரபாகரன் இருக்கிறார¢ என்று நம்புகிறார்கள். மக்களின் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். இந்த மக்கள் பிரபாகரன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுதான் அவர்களின் முதல் நம்பிக்கையாக இருக்கிறது. அதுதான் பிரபாகரன் என்ற தலைவரது அவசியமுமாகிறது. அவர் ஒருவரால்தான் ஈழப் போராட்டத்தை இத்தகைய கட்டம் வரை நகர்த்த முடிந்தது. அவரால் இந்தப் போராட்டத்தை நடத்த முடியும். உலகின் மிகச்சிறந்த போராளியாக ஈழப் போராட்டத்தை அவர் அடையாளப்படுத்தியவர்.

ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்டது என்கிற சூழலில் எமது மக்கள் தலைமைத்துவமின்றி சூன்ய அரசியலுக்குள் என்ன செய்வதெனத் தெரியாமல் இருக்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே அரசியல் வெறுமை இருப்பதைப் போல ஒரு சோகம் நிலவுகிறது. பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்கிற வெற்றிடமே அது. ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கும். தலைமை வகிக்கிற தனித்துவம் தலைவர் பிரபாகரனிடம்தான் இருக்கிறது. அந்த தனித்துவத்தினாலும் நம்பிக்கையாலும்தான் தலைவர் இருக்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அந்த நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.

மக்கள் போராடுவதற்கான சனநாயக வெளியை தோற்றுவிக்க முடியுமா?

சிங்கள மக்களுக்கே அந்த வெளி மறுக்கப்பட்டிருக்கிறது என்ற பொழுது தமிழர்கள் அதை நினைத்துப் பார்க்க முடியாது. காலத்தின் கைதிகளாய் இருக்கிறார்கள். இன்று அரசை எதிர்த்துக் கொண்டு ஜே.பி.வி.க்குப் பின்னால் நிற்கிற சிங்கள மக்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும்கூட இந்த வெளி மறுக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் சனாதிபதி மகிந்தராஜபக்சே தலைமையில் அவரது சகோதரர்கள் குடும்பமாக இணைந்து இராணுவத்தின் பலத்துடன் குடும்ப இராணுவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் யாரும் அரசை எதிர்த்துப் பேசவோ போராடவோ முடியாது. ராஜபக்சே குடும்பத்திற்கு மிகுந்த விசுவாசமான இராணுவத்தினர் அவர்களை எதிர்ப்பவர்களுக்குத் தண்டனைகளை வழங்குவார்கள். மக்கள் அச்சமும் பீதியும் ஏற்படுத்தப்பட்ட சூழலில் வாழ்கிறார்கள். யுத்த வெற்றியில் மூழ்கி ராஜபக்சேவை ஒரு யுத்த ஹீரோவாக பார்க்கிற சிங்களவர்களுக்கு சனாதிபதி என்ன செய்தாலும் பிரச்சினை கிடையாது.

இதில் தமிழ் மக்கள் போராடும் சனநாய வெளி பற்றி சிந்திக்கவே முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தமது உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் போராடிய பொழுது அதையும் வந்து இராணுவம் கையாளுகிறது. கட்டுப்படுத்துகிறது. வீட்டுக்கு வீடு இராணுவம் வந்து நடவடிக்கைகளை விசாரிக்கிறது. வீதிக்கு வீதி நின்று காவல் காக்கிறது. தேர்தல் அரசியல் நகர்வுகள் என்று வந்துவிட்டால் ஆட்களையும் நாய்களையும் கொலை செய்து மிரட்டுகிறார்கள். எங்கும் இராணுவ மயமும் அதன் கட்டுப்பாடுகளும், ஜனநாயக குரல்களை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் அரசு இராணுவத்தை ஈடுபடுத்துகிறது. இந்தச் சூழலில் இப்பொழுது ஜனநாயகப் போராட்டங்களை நடத்துவதற்கு வாய்ப்பில்லையே தவிர ஜனநாயகப் போராட்டம் நடத்துவதற்கான சூழல் ஏற்படாது போகும் என்று நான் கூறவில்லை. இந்த நிலைமை தொடருமாக இருந்தால், இதற்கு எதிர்ப்புகள் வெடிப்பதற்கு வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. ஈழத்து அரசியலில் இலங்கை அரசின் ஏமாற்று நாடகங்களும் தொடர்ச்சியான ஒடுக்குமுறையும்தான் இவற்றைத் தீர்மானிக்கப்போகின்றன.

ஈழ விடுதலை மீதான நம்பிக்கை மக்களுக்கு அற்றுப் போய்விட்டதா?

இப்படிச் சொல்லித்தான் இன்று சிலர் தமது அரசியலையும் பிரச்சாரத்தையும் முன்னெடுக்கிறார்கள். அந்த அரசியலும் பிரச்சாரமும் ஈழம் என்கிற கனவைத் துடைத்து சிங்களப் பேரினவாத அரசியலை வளர்க்கும் தந்திரம் கொண்டது. இன்று ஈழம் வேண்டும் என்று எங்கள் மக்கள் வீதியில் வந்து பகிரங்கமாகச் சொல்ல முடியாத காலம். இத்தனைத் தியாகங்களையும் செய்து மக்கள் போராடியது ஈழ விடுதலை மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்றல்ல. ஈழம் என்கிற வாழும் நிலத்திற்காகவும் உரிமைக்காகவும் அடையாளத்திற்காகவும் பல்லாயிரம் போராளிகள் போராடி எங்கள் நிலத்தில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லோரும் வாழும் ஆசை கொண்டவர்கள். நாம் வாழ விரும்பும்பொழுதெல்லாம் ஈழம் அவசியமாகிறது.

ஈழத்தின் நான்காம் போர் முடிந்த தருணத்தில் இருந்த சோர்வும் நம்பிக்கையின்மையும் இன்றைய அரசியலால் முற்றாக மாறிவிட்டது. இதை நடைமுறை அரசியலே இன்னுமின்னும் அவசியமாக்குகிறது. நான் ஒரு ஊடகவியலாளராகவும் இருப்பதால் வன்னியில் யாழில் கிழக்கில் இன்று அதிகம் மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறேன். இன்றைய நெருக்கடிகளைப் பதிவு செய்து கொண்டிருப்பதால் அதிகமதிகம் மக்களுடன் உரையாடி வருகிறேன். யாரும் ஈழம் என்கிற இலட்சியத்தில் இருந்து விலகியது கிடையாது. ஏனெனில், அது நாங்கள் வாழும் நிலம். எங்களிடம் இருந்த நாடு, நாம் பூர்வீகமாக வாழ்ந்த நாடு, எங்கள் மொழி, எங்கள் பண்பாடு, மீண்டும் மீண்டும் அரசும் அதன் படைகளும் அதைத் தாக்கி அழிக்க நினைக்கிறவரை அது எமக்கு அவசியமாகிறது. இன்று போரால் காயப்பட்ட மக்களின் காயங்கள் ஆற வேண்டும். அந்தக் காயங்களை ஆற்றுவதும் அவரவர் காணி நிலங்களைச் சென்றடைவதும் இன்று பெரும் போராட்டமாக இருக்கிறது. தடுப்புச் சிறைகளில் வைக்கப்பட்ட போராளிகளை மீட்டெடுப்பதும் காணாமல் போனவர்களைத் தேடுவதும் பெரும் போராட்டமாக நடக்கிறது.

இப்பொழுது நாங்கள் ஒரு வகையில் இயல்பு நிலைக்காய் போராடிக் கொண்டிருக்கிறோம். ஈழ விடுதலை என்பது இந்த ஒவ்வொரு காரியங்களின் விடுதலையிலும் தங்கியிருக்கிறது. நாங்கள் யாரும் எதையும் மறந்துவிட முடியாது. இன்று எங்களுக்கு முன்னால் போராட்டம் சிதைக்கப்பட்டாலும் அந்த உணர்வுடன்தான் நாங்கள் வாழுகிறோம். இன்று போராட்டத்தின் தடயங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த நினைவுகளுடன்தான் வாழ்கிறோம். ஒரு எழுத்தாளனாக இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஈழத்துவாசியாக இந்தப் போராட்டத்தின் அவசியத்தை முன்னெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது ஒவ்வொருவரதும் கடமை. நாம் இதுவரை ஈழம் என்கிற விடுதலை இலக்கிற்காக நகர்ந்தோம். தொடர்ந்தும் அதை நோக்கியே நகர வேண்டும். ஈழத்தின் ஒவ்வொரு வாசியும் இந்த இலக்கை நோக்கி நகர வேண்டும். ஈழ விடுதலை என்பது ஒருபொழுதும் மரணமற்ற இலட்சியம். அது ஒடுக்கப்பட்ட வாழ்வில் பிறந்த கனவு.

ஈழப் போராட்டத்தின் இன்றைய கட்டம்? ஈழத்தின் வருங்காலம் எப்படியிருக்கும்?

ஈழப் போராட்டத்தின் இன்றைய கட்டம் என்பது ஒவ்வொருவரும் ஈழத்தவராக வாழ்வதில்தான் இருக்கிறது. நாமெல்லாம் இலங்கையர். நான் உங்களுக்கு மின்சாரம் தந்து வீட்டுக்கு ஒளி தருகிறேன் என்று ஜனாதிபதி சொல்கிறார். மறுபடியும் மறுபடியும் இலங்கை அரசர்கள் இப்படித்தான் தவறிழைக்கிறார்கள். அதிலும் இன்றைய அரசர் ராஜபக்சே வெறும் அற்ப சொற்ப சலுகைகளைக் கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி ஏமாற்றப்பார்க்கிறார். யுத்தத்தை நடத்தி முடித்து விட்டு நான் உங்களுக்குச் சமாதானம் தந்தேன் என்றும் முகாமிலிருந்து விடுவித்து விட்டு நான் உங்களுக்கு விடுதலை தந்தேன் என்றும் இராணுவத்தால் 25 வருடங்கள் மூடிய வீதியை திறந்துவிட்டு நான் உங்களுக்கு அபிவிருத்தி தந்தேன் என்றும் எங்களைத் தனது அரசியலுக்குப் பயன்படுத்தும் ஆள்.

இன்று ஈழத்தில் வந்து மக்களைப் பலவந்தமாக கொண்டு சென்று அவர் நடத்தும் கூட்டங்களில் அவரது மோசமான அரசியல் வார்த்தைகளை மக்களிடத்தில் உதிர்க்கிறார். ராஜபக்சே முட்டாளாகிற இடமும் அவர் வெளிப்படுகிற இடமும் அவர் தோற்றுப்போகிற இடமும் அதுதான். ஒரு கட்டத்தில் முன்னாள் போராளிகள் மகிந்தராஜபக்சேவின் காலில் விழுந்து விடுவிக்கப்பட்டபொழுது மகிந்தவோ போராளிகளே என்னை வணங்குகிறார்கள் என்று செருக்கடைந்திருக்கலாம். ஈழப் போராட்டம் அழிந்து விட்டது என்று பெரும் மமதையுடன் பேசலாம்.

இன்றைய காலம் என்பது நாம் பல விடயங்களை கடக்க வேண்டிய காலம். இந்தக் காலத்தில் ஈழ இலட்சியத்திற்கு ஏற்ப நாம் வாழ வேண்டியிருக்கிறது. இன்று அரசும் படைகளும் எங்கள் வேர்களை அழிக்கத் திட்டமிட்டுச் செயற்படுகிறார்கள். இந்தக் காலத்தில் நாம் வாழ்கிற வாழ்க்கையில்தான் ஈழப் போராட்டத்தின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்டு விட்டது என்ற சோர்வு அடைந்து விட முடியாது. போராடிய மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்குத் தலைமுறைகள் உருவாகுவார்கள். நாம் தொடர்ந்து இந்த மண்ணில் வாழ வேண்டும். மக்கள் உரிமைகள் எமக்கு வேண்டும் என்பது வாழ்வின் அவசியம். இன்று நமது போராட்டத்தின் அடையாளங்களையும் உணர்வையும் வரலாற்றையும் தடயங்களையும் பதிவு செய்து பாதுகாப்பதுதான் அவசியமானது என்று நினைக்கிறேன். ஈழத்தின் வரும் தலைமுறைகளுக்கு இந்த நிலமும் எமது வரலாறும் பதிவுகளும் அவசியமானது. இந்தத் தலைமுறை செய்ய வேண்டியதை நாம் செய்வோம். வரும் தலைமுறை செய்ய வேண்டியதை அவர்கள் செய்வார்கள். இது சில தலைமுறைகளுடன் முடிந்து போகும் போராட்டம் கிடையாது. இங்கு நடப்பது வாழ்வுக்கான போராட்டம் எல்லாம் எங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழப்போகிற தலைமுறைகளில்தான் தஙகியிருக்கிறது.

ஈழத் தமிழர்கள் ஒரு போராட்டத்தை நியாயமிக்க வாழும் உரிமைக்காகவே செய்திருக்கிறார்கள். இன்று இருக்கிற உரிமைகளும் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. தொழிற் புலங்களும் வளங்களும் கொள்ளையடிக்கப்படுகின்றன. சிங்களமும் பௌத்தமும் போட்டி போட்டு எம்மில் திணிக்கப்படுகின்றன. இந்த நிலை காலம் காலமாக இலங்கை அரசுகளின் போக்குகளாக இருக்கின்றன. மேலும் இந்தப் போக்குகள்தான் எதிர்காலத்திலும் தொடரப் போகின்றன என்றால் வருங்காலத்தில் ஈழம் மீண்டும் வேறு ஒரு வடிவில் உக்கிரமாகப் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். நாம் ஒருபொழுதும் நமதினம் அழிக்கப்படுவதை நமது வாழ்வு அழிக்கப்படுவதை நமது நிலம் பறிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது வாழும் மக்களின் போராட்டம். வாழப் போராட வேண்டியிருக்கிறது. இன்றும் வாழ்வதற்காய்ப் போராடிக் கொண்டிருக்கிறோம்.