தமிழ்நாட்டில் பரந்துபட்ட மக்களுக்கு வாழ்வு ஆதாரமாய் அமைந்திருப்பது உழவுத் தொழில்-. உண்மையில் உழவுத் தொழிலே தமிழ் நாட்டைப் பொருளியல் நெருக்கடிக்குள் தள்ளி விடாமல் காப்பாற்றி வருகிறது. ஆனால் இந்த உழவுத் தொழிலைத் தொடரத் தமிழ்நாட்டில் உழவன் வழியற்றுப் போய்விடுவானோ என்ற பேரச்சம் ஏற்பட்டுள்ளது.

உழவுக்குத் தேவை நீர். நீரே உழவுக்கு அடிப்படை. நீரின்றி உழவு செய்ய முடியாது. ஆனால், அந்த நீர் தமிழ்நாட்டு உழவன் வாய்க்காலில் பாய்ந்தோடும் வழி முற்றாக அடைக்கப்படும் நிலை நாளும் நாளும் கூடி வருகிறது.

‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’ இன்று அக்காவிரி கர்நாடக அணைகளுக்குள் அடை பட்டு விட்டது. வான் பொய்த்தால் சொட்டு நீரும் தமிழ்நாட்டுக்கு வராது. வான் மிகையாய்ப் பெய்து நிரம்பி அணைகள் வழிந்தால் தமிழ்நாட்டைத் தண்ணீர் எட்டிப் பார்க்கும். கர்நாடக நீர்ப்பாசனத் திட்டங்கள் முழுவதும் நிறைவேறும்பொழுது மிகை மழைப் பொழிவும் தமிழ்நாட்டுக்குப் பயன்தராது என்பார் காவிரி மீட்புக்காகவே வாழ்ந்து மறைந்த பூ.அர.குப்புசாமி அவர்கள்.

 எவ்வளவு மழை பெய்தாலும் அவ்வளவும் கர் நாடகம் கட்டவுள்ள அணைகளில் நிரம்பியும் வெட்டவுள்ள வாய்க்கால்களில் ஓடியும் கர்நாடகத் திற்குள்ளேயே அடங்கிப் போய்விடும். ஒகேனக்கல்லில் நீர் விழாது. தமிழ்நாட்டுக் காவிரிப் பாசனப் பகுதி பாலைவனமாய்ப் பாழ்பட்டுப் போகும்.

தென் தமிழ்நாட்டு மக்கள் வறுமை வாழ்நிலை கண்டு வருந்திய பென்னிகுக் அம்மக்களின் வாழ்க்கையை வளமாக்க தன்னையே ஈந்து முல்லைப் பெரியாறு அணையைக் கட்டித் தந்தான். இன்று ஈவிரக்கமே அற்ற மலையாள அரசியல் கும்பல்கள் தங்கள் பதவி வெறி வேட்டையில் அவ்வணையை இடித்து மக்களின் வாழ்க்கையை அழித்துவிடக் கங்கணம் கட்டித் திரிகின்றன. பொய்யையும் புனைவையும் கலந்து பரப்பி மலையாள மக்களைப் பீதியுறச் செய்கின்றன. பன்னாட்டுத் தேசியம் பேசும் பொதுமையரே இதில் முன்னணி வகிக்கின்றனர். கிருஷ்ண அய்யர் போன்ற மனித உரிமைப் போராளிகளும் தடுமாறிப் போகின்றனர். வல்லுநர் பலரும் அணை வலுவானது என்று உறுதியளித்த பின்னரும் வாய்மூடிக் கிடக்கிறது மய்ய அரசு. உச்சநீதிமன்றமும் ஊசலாடுகிறது. இன்று இவர்களின் கையில்தான் தென்தமிழ்நாட்டு மக்களின் உயிர்மூலம் சிக்கித் தவிக்கிறது.

வடதமிழ்நாட்டு மக்களுக்குப் பால் வார்ப்பவள் பாலாற்றுத் தாய். அவள் வறண்டால் அம்மக்கள் வாழ்க்கையும் வறண்டுபோய்விடும். இன்று அவள் கூந்தல் ஆந்திரத்தின் இரும்புப் பிடிக்குள். பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் ஆந்திரம் உறுதியாய் இருக்கிறது. அதனைத் தடுக்கும் வழி அறியாத் தமிழகம் தடுமாறுகிறது. ஆந்திரத்தில் அரசியல்வாதிகள் ஒன்றாய்க் கைகோர்க்கின்றனர். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவிமோகித்து பிரிந்து நிற்கின்றனர். தமிழ்நாட்டின் தடுமாற்றத்திற்கு இதுவே காரணம்.

தஞ்சைக்கு நெல் என்றால் மேலைத் தமிழ்நாட்டுக்கு ஒருபுறம் மஞ்சள்; இன்னொரு புறம் பரந்து விரிந்து கிடக்கும் தென்னந்தோப்புகள். இனி இவையெல்லாம் எத்தனை நாட்களுக்கு மிஞ்சியிருக்கப் போகின்றன என்பதே இப்பகுதி உழவர்களை ஆட்டிப் படைக்கும் கேள்வியாய்ப் பேருருக் கொண்டுள்ளது. பவானியின் குறுக்கே கேரளாவில் அணை. அமராவதியைத் தடுத்தும் அணை; சிறுவாணிக்கு மேலேயும் அணை, பரம்பிக்குளம்-&ஆழியாறு ஒப்பந்தம் மீளாய்வு& இப்படி அடுத்தடுத்த திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகிறது கேரள அரசு. இத்திட்டங்கள் எல்லாம் நிறைவேறும் நிலையில் தமிழ்நாட்டிற்கு வளம் சேர்க்கும் ஆறுகள் எல்லாம் கேரளாவிற்குள் முடங்கிப் போகும். ஏற்கனவே கேரளாவின் ஆறுகள் மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் கலந்து வீணாகின்றன. வீணாகும் ஆறுகளைப் பயன்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை; பயன்படும் ஆறுகளைப் பாழாக்கவே அனைத்து திட்டங்களும். கேரளாவின் வேளாண் நிலப்பரப்பு குறைவு என்பதையும் ஆனால் மழைப்பொழிவு மிகுதி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கேரளாவிற்கு நீர்ப்பாசனத்தைவிட வேறு திட்டங்கள் இருக்கலாம். முல்லைப் பெரியாறு அணையில் சிக்கல் செய்வதே இடுக்கி மின்சார உற்பத்திக்காகவே.

 ஒருபுறம் இப்படிப் புறத்தே தமிழ்நாட்டில் பாயும் ஆறுகளை வற்றச் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகையில் மறுபுறம் அவற்றை அகத்தே மலடிகளாக்கும் அடவாடித்தனங்களும் அளவற்று அரங்கேறுகின்றன. நாடு, நாட்டின் வளம், மக்கள், மக்களின் வாழ்க்கை ஆகிய எவற்றைப் பற்றியும் எள்ளளவும் கவலையில்லாமல் பணவளத்தைப் பெருக்குவது ஒன்றை மட்டுமே குறியாய்க் கொண்ட தொழில்முதலைகள், தொழிற்கழிவுகளை ஆறுகளில் கலக்கவிட்டு அவற்றைச் சாகடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் செல்வ வளத்திற்குக் காரணமாய்த் திகழ்ந்த நொய்யல் ஆறு திருப்பூர் சாயப்பட்டறைகளால் காணாமல் போய்விட்டது. பாலமுருகனின் நொய்யல்; தொலைந்த தடங்கள் படம் பார்த்து பெருமூச்சு விட மட்டுமே இப்பொழுது முடிகிறது.

காவிரியில் கலக்கும் கழிவுகளைப் பற்றிச் சொல்-லவே வேண்டியதில்லை. மேட்டூர் தொடங்கி, தொடர்ந்து கழிவுகள். கர்நாடகத்தானாவது அணைகள் கட்டி தன் மக்களுக்குக் காவிரியைப் பயனுறச் செய்கிறான். தமிழ்நாட்டு முதலாளிகளோ மாசுமறுவற்ற காவிரியை மாசடையச் செய்து நிலங்-களையும் பாழ்படுத்தி விடுகின்றனர்.

 முன்பு, மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே இயங்கி வந்த செயற்கைப் பட்டுத் தொழிற்சாலை (விஸ்கோஸ்) பவானி ஆற்றை முற்றாக நாறச் செய்து வந்தது. இப்பொழுது அத்தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால், அங்குத் தப்பிய பவானி, காளிங்கராயன் வாய்க்காலுக்குள் நுழையும்போது, இருபுறமும் உள்ள தோல் ஆலைகள் கழிவால் நிறமிழந்து பயிர்களைச் செழிக்கச் செய்யும் உயிர்ச்சத்திழந்து நஞ்சாக மாறிவிடுகிறது. நிலத்தை நாசமாக்குகிறது. நிலத்தைக் காப்பாற்ற உழவர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். கழிவுகளை வாய்க்காலில் கலக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் அவ்வப்பொழுது உறுதிகளை வாரி வழங்குகின்றனர். ஆனால் உண்மையில் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியாளர் ஆனந்த குமார்தாம் மாற்றப்பட்டார். அதிகாரமில்லாப் பதவிக்குத் தூக்கி எறியப்பட்டார். இந்த ஆட்சியாளர்தாம் தம் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுகளுக்கு ஆபத்து வேதியல் கழிவுகளால் மட்டும் உருவாகவில்லை. மணற்கொள்ளையர்களால் ஏற்படும் ஆபத்தோ பேராபத்தாய் இருக்கிறது. தமிழ்-நாட்டுக்குள்ளே பிறந்து தமிழ்நாட்டை வளப்படுத்தும் ஆறு தாமிரவருணி. ஆனால் இந்தத் தாமிரவருணியை மணற்-கொள்ளையர்கள் சாகடித்து விடுவார்களோ என்ற அச்சமே நிலவுகிறது. தாமிரவருணியில் மட்டு-மின்றி, காவிரி, அமராவதி, பாலாறு என அனைத்து ஆற்று மணற்படுகைகளிலும் அடிக்கப்படும் மணற்-கொள்ளைக்கு முடிவே வராது போல் தோன்றுகிறது. இந்நிலை தொடருமெனில் ஆறுகள் செல்லும் வழிகளெல்லாம் பெரும் பாதாளக் குழிகளாக மாறிவிடும். ஆறுகள் காணாமல் போய்விடும். நினைக்-கையிலேயே நெஞ்சு நடுங்குகிறது.

ஆற்றுநீர் பற்றாக்குறையுடன் தமிழ்நாட்டில் மழைப்பொழிவின் பற்றாக்குறையும் சேர்ந்து கொள்கிறது. மலை மறைவுப் பகுதி என்பதால் கடற்கரையோரப்பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் மழை எப்பொழுதும் குறைவுதான். நீர்வளம் குறைவாக உள்ள நாடு கிடைக்கும் நீரைத் திட்டமிட்டுச் சேமிப்பதிலும் பகுத்துப் பயன்படுத்துவதிலும் சிறந்து விளங்க வேண்டும். பண்டைய தமிழகம் இதில் ஒப்பற்றுத் திகழ்ந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அணை கட்டி (கரிகாலன் கல்லணை) வாய்க்கால் வெட்டி வேளாண்மை செய்தவன் தமிழன். அவனுடைய ஏரிகளும், குளங்களும், நீர்ப்பாசன மேலாண்மைக்கு எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்கின்றன.

ஆனால் இன்று நீரை வீணாக்குவதில் அவனை மிஞ்ச எவனுமில்லை. பலப்பல ஆண்டுகளாய்த் தூர்-வாரப்படாத வாய்க்கால்கள்; ஒவ்வோர் ஆண்டும் அணை-களில் நீர் திறந்துவிடும்போதெல்லாம் வாய்க் கால்களில் உடைப்பெடுக்கும் அவலநிலை. வயலில் சென்று பாயும் நீரை விட இடையில் வெளியேறி வீணாகும் நீரே மிகுதி.

சேறும் சகதியும் நிறைந்து போனால், அணையில் நீர் கொள்ளளவு குறைந்து போகும். ஏரியைத் தூர்வாருவது போல அணையின் அகலத்தையும் ஆழத்தையும் தொடர்ந்து பேணுகின்ற தொழில்-நுட்பம் நம்மிடம் உள்ளதா என்று தெரியவில்லை. மேட்டூர் அணையில் படிந்துள்ள வண்டலை அகற்ற ஒருமுறை திட்டமிட்டு, ஆகக்கூடிய செலவைக் கண்டு மலைத்துப் போய் கைவிட்டுவிட்டதாகச் சொல்-கிறார்கள். இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தில் இவையெல்லாம் சாத்தியமே.

அணையை ஆழ அகலப்படுத்துவதில் சிரமங்கள் இருக்கலாம். அணையின் பாதுகாப்புப் பற்றிய கேள்விகளும் எழலாம். ஆனால் தமிழ்நாட்டில் ஏரிகளும், குளங்களும், பல்லாண்டுகளாகத் தூர்வாரப்-படாமல் மேடுகளாகிக் காணாமல் போய்விட்டனவே! குடியிருப்புகளாய் மாறிப் போய்விட்டனவே! சென்னையில் மழைக்காலங்களில் நீரில் மிதக்கும் இடங்களெல்லாம் ஒரு காலத்தில் ஏரிகளாயும் குளங்களாயும் இருந்த இடங்கள் என்கிறார்கள். கோவை வாலாங்குளத்தின் ஒரு பகுதி இன்று உக்கடம் பேருந்து நிலையமாய் உயர்ந்து நிற்கிறது. ஏரி குளங்களைக் காப்பாற்ற வேண்டிய அரசே, அவற்றை அழிக்கும் அவலநிலை. பற்றாக்குறை உள்ள இடத்தில் திருட்டு இயல்பாய் நிகழும். தமிழ்நாட்டில் நீர்திருட்டும் மிகுதி. ஆறு-களின் இரு கரைகளிலும் அனுமதிக்கப்பட்ட மின் திறனைக் காட்டிலும் பன்மடங்கு கூடுதல் திறன் கொண்ட மோட்டார்களைப் பயன்படுத்தி பல கல் தொலைவிற்குக் குழாய் மூலம் நீரை எடுத்துச் செல்-கின்றனர். அமராவதி ஆறு வெள்ளக்காலங்கள் தவிர மற்றெக் காலத்திலும் காவிரியில் சென்று கலப்பதே இல்லை. அமராவதி செல்லும் இடமெல்லாம் இருபுறமும் வகைதொகையின்றி நீர் உறிஞ்சப்படுவதே இதற்கான காரணம். வாய்க்கால்களிலும் நீர் திருட்டு நடப்பதாகச் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி நீர்ப்பாசனத்தை முறைப்படுத்தும் திட்டங்கள் எதுவும் தமிழக அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆற்று நீரை முறையற்றுப் பயன்படுத்துவதைப் போலவே நிலத்தடி நீரையும் தமிழ்நாட்டு உழவர்கள் கண்மூடித்தனமாக உறிஞ்சுகிறார்கள். எந்த அறிவியல் பார்வையும் இன்றி, எதிர்காலம் பற்றிய கவலை சிறிதளவும் அற்று நிகழ்கால நலனை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படுகிறார்கள். குறிப்பாக மேற்கு மண்டலப் பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறுகளுக்குக் கணக்கே இல்லை. தோண்டப்படும் ஆழத்திற்கும் ஓர் எல்லையும் இல்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் என்றாலே 1000 அடிக்கு மேலே என்றுதான் பொருள். அவற்றில் எல்லாம் மிகைதிறன் கொண்ட நீர்மூழ்கி மோட்டார்களைப் பொருத்தி நீரை உறிஞ்சு உறிஞ்சு என்று உறிஞ்சி வெளியே தள்ளுகிறார்கள். இப்போக்கு இப்படியே தொடருமானால், இப்பகுதி காலப்போக்கில் பாலைவனமாய் மாறிவிடும் என்று நீரியல் துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளார்கள். ஏற்கனவே இப்பகுதி கறுப்புப் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்குழாய்க் கிணறுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆழம் குறித்தும் மின்னிணைப்புத் தொடர்பாகவும் நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இவற்றில் எவையும் கறாராக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மழைப் பொழிவு குறையும் காலங்களில் ஆழ்குழாய்க் கிணறு தோண்டும் எந்திரங்கள் இரைச்சல் இன்றும் காதை அடைப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இத்தனை அவலங்களுக்கு இடையில் பன்னாட்டுக் குழுமங்களின் நீர்க் கொள்ளையும் அரங்கேறி வருகிறது. தஞ்சை உழவர்கள் உழவுக்கு நீரின்றித் தவிக்கையில் ‘எல் அண்டு டி’ காவிரித் தண்ணீரைத் திருப்பூர் சாயப்பட்டறைக்கு விற்றுப் பணம் சேர்க்கிறது. குடிநீர் இணைப்பும் வழங்குகிறது. ‘எல் அண்டு டி’ குடிநீர் இணைப்புக்கு ஒரு லிட்டருக்கு ஐந்தரைக் காசு கட்டணமாகத் தண்டுகிறது. இது நம் நகராட்சி, ஊராட்சிகள் விதிக்கும் கட்டணத்தை விடப் பன்மடங்கு அதிகம்.

பாட்டில்களில் தண்ணீரை அடைத்து விற்-பனை செய்யும் தொழிற்சாலைகள் ஆங்காங்கே பெருகி வருகின்றன. இவற்றுடன் பெப்சி, கோக்-கோலா பெரு நிறுவனங்களும் இணைந்து கொள்கின்றன. பல்வேறு தொழிற்சாலைகளும் தங்கள் தொழில் பயன்பாட்டிற்கும் பேரளவு நீரைப் பயன்படுத்துகின்றன. ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாட்டின் மூல நீர்வளங்கள் இந்தப் பெருங் கொள்ளைகளைத் தாக்குபிடித்து நிற்குமா என்பதே கேள்வி.

உழவுக்கும் நீரில்லை; குடிக்கவும் நீரில்லை. இந்நிலை நோக்கித் தமிழ்நாடு விரைந்து கொண் டிருக்கிறது.

‘நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வானின்றி அமையாது ஒழுக்கு’

நீரில்லையெனில் மக்களின் ஒழுக்கமும் கெட்டுப்போகும் என எச்சரிக்கிறார் வள்ளுவர். வள்ளுவரைப் பெற்றெடுத்த தமிழகம் அக்குறளுக்கு இலக்கணமாய் அமைந்து விடுமோ? தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. ஆட்சியைப் பிடிப்பதும் அடுத்த தலைமுறையினருக்குச் சொத்துச் சேர்ப்பதுமே அவர்கள் குறிக்கோள்.

காவிரிநீர் உரிமையை இழந்ததற்கு கருணாநிதியே காரணம். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் முல்லைப் பெரியாறு அணை நீரை 142 அடி உயர்த்தத் தவறியதும் அத்தமிழர் தலைவரே. ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறையில்லை எனக் குற்றம் சாட்டுவதில் பொருளில்லை. அவர் நம் பகை. விதி விலக்காய் இருப்பவர் வைகோ ஒருவரே, அவர்மீது நமக்குத் திறனாய்வுகள் இருக்கலாம். ஆனால், ஆற்றுநீர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பதும் போராடுவதும் அவரும் அவர் கட்சியும் மட்டுமே. இன்று அமராவதிக்காகவும், சிறு-வாணிக்காகவும் பவானிக்காகவும் போராட்டங்களை முன்னெடுப்பது ம.தி.மு.கவினரே. ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் அறிக்கைகளோடு நின்ற விடுகின்றன.

இங்கே இன்னொருவரையும் குறிப்பிட்டாக வேண்டும். அவர் எஞ்சியிருக்கும் பொதுமைப் போராளிகளில் ஒருவரான தோழர் நல்லக்கண்ணு ஆவார். தாமிரவருரணிக்காகத் தொடர்ந்து விடாமல் போராடி வருகிறார். அவர் சார்ந்துள்ள இந்திய பொதுமைக் கட்சியும் ஈழப் போராட்டம் தொடங்கி தமிழர் நலன்களில் கூடுதல் அக்கறை செலுத்துகிறது. ஆனாலும் இக்கட்சிகள் தேர்தல் நெருங்கும்போது எல்லாவற்றையும் கைவிட்டுக் கூட்டணியில் கவனம் செலுத்துவது கவலை அளிக்கிறது.

தமிழ்த் தேசிய அமைப்புகள் சூழும் பேராபத்தை மக்களிடம் விளக்கித் தங்கள் தலைமையில், ஒன்று திரட்ட வேண்டும். வரலாறு நம்மீது சுமத்தியுள்ள கடமையை நிறைவேற்றத் தவறினால் நாமும் மக்கள் துரோகிகளே!

ஆற்று நீர் உரிமையை மீட்டெடுப்போம்! தமிழக நீர்வளத்தைப் பாதுகாப்போம்!