எமது தேசம் இல்லாமல் போனது!
எமது தாய்மொழி வதைப்புக்குள்ளானது!
எமது நாவிலிருந்து அது உருவிடப்பட்டது!
எங்கள் நிலங்கள் விலைபேசப்பட்டன!
எங்கள் ஆறுகள் களவாடப்பட்டன!
எங்கள் கடல்பரப்பு எமக்கில்லை ஆனது!
எங்கள் பகைவர் எங்கும் நிறைந்தனர்!

மலைவளம் இழந்தோம்!
நீர்வளம் இழந்தோம்!
மண்ணில் பயிர்த்தொழில் வாழ்வையும் இழந்தோம்!
அடிமை விலங்கினை அணிஎன அணிந்தோம்!

பகைவன் பாடினான் தன் தேசத்தை மெச்சி!
எம்மை வென்றதை
எம்மிடம் பறித்ததை
பகைவன் நயந்து பாடிடலானான்!
அடிமைகள் நாங்களும் அவனோடு பாடினோம்!

தேசம் இலார்க்கு ஒரு தேசப் பற்றினை
உருட்டியும் மருட்டியும் ஊட்டினான் பகைவன்!

எங்கள் அன்னையர் அக்காள் தங்கையர்
தந்தையர் தனையர் அண்ணன் தம்பியர்
உற்றார் உறவினர் யாவரும் அங்கே
பிணங்களாகச் சிதறிக் கிடந்தனர்!

எமது மலையும் ஆறும் கடலும்
மண்ணும் மண்ணுள் கிடந்த செல்வமும்
பகைவனின் சட்டைப் பைக்குள் இருந்தன

வறண்டுவிட்ட உதடுகள் தம்மைக்
கண்களின் நீரால் ஈரமாக்கிக் கொண்டு
நாங்களும் பாடினோம் தேசப்பற்றுப் பாடல்
பகைவனின் மொழியில்!
பகைவன் புரிந்த அரும்பெரும் செயல்களை
மெச்சிப் புகழ்ந்து!

நினைவில் எழுந்து வருத்தும்
இழந்த எம் வாழ்வும்
இழந்த எம் செல்வமும்
இழந்துகொண்டிருக்கும் எம் இனிய நன்மொழியும்!