பிரித்தானிய வல்லாதிக்கத்தின் கருவில் பிறந்த பாரத மாதாவிற்குத் தலைவலியோடு சேர்ந்து இடதுபக்க வாத நோயும் கூடி விட்டது. தலைப்பகுதியில் காசுமீரிகளின் போராட்டம்; மார்பின் இடதுபுறத்தில் வடகிழக்கு மக்களின் போராட்டம். இந்தியா விடுதலை அடைந்து பொன்விழாவையும் கண்டாயிற்று. பாரத மாதா கிழப்பருவம் எய்தி விட்டாள். ஆனால் வல்லாதிக்கப் போக்கும், பிரித்தாளும் சூழ்ச்சியும் மாறுவதாக இல்லை. எத்தனை நாள்களுக்கு இவ்வாதிக்கம் நீடிக்கும் என்பது கேளவிக்குறியே! அவள் சாவின் நாள்கள் எண்ணப்பட்டு வருவதாகவே தெரிகிறது. வடகிழக்கு மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் இதையே உணர்த்துகின்றன.

ஒரு நூற்றாண்டுக் காலமாக மேற்கு வங்கத் திலிருந்தும், கிழக்கு வங்கத்திலிருந்தும் (வங்காள தேசம்) வங்காளிகள் அசாம் மண்ணில் குடியேறி அம்மண்ணை ஆக்கிரமித்து வருகின்றனர். அவர்களின் ஆதிக்கத்திற்கெதிராக அசாமியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அசாம் மாநிலத் திற்குள் வசிக்கும் போடோ மக்களின் கோபத்திற்கும் வங்காளிகள் இரையாகி வருகின்றனர். திரிபுராவிலும் வங்காளியர் ஆதிக்கத்திற்கெதிரான போராட்டம் நடைபெறுவதை நாம் அறிவோம்.

குடி மரபுக்குழு, குலம் ஆகியவை மனித சமூகத்தின் தொன்மையான வடிவங்களாகும். குடிமரபுக் குழுக்கள் ஒன்று சேர்ந்து குலமாக உருவாகுவதும் குலத்திற்கென்று பொது மொழியும், பொது வாழிடமும் உருவாக்கம் பெறுவதும் இயங்கியல் போக்கில் தவிர்க்க முடியாதவை. வடகிழக்குப் பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் உள்ளன. அவற்றில் சமூக வளர்ச்சிப் போக்கில் முதிர்வடைந்த இனக்குழுக்கள் ஒரு தேசிய இனமாக மலர வேண்டிய கட்டத்தை அடைந்துள்ளன. இந்திய வல்லாதிக்க அரசு அதைத் தடுத்து நிறுத்துகிறது. வளர்ந்து வரும் வடகிழக்குத் தேசிய இனங்களின் மொழி, பண்பாட்டு, பொருளியல் கூறுகளைக் கருவி கொண்டு அடக்கி அழிக்க முயற்சி செய்கிறது.

இந்திய விடுதலைக்குப் பின் 1963ஆம் ஆண்டு வரை மொத்த வடகிழக்கு இந்தியாவும் அசாம் மாநிலம் என்றுதான் அழைக்கப்பட்டது. நாகர் இன மக்களின் விடுதலைப் போராட்டம் காரணமாக 1963இல் அசாம் மாநில நாகர் வாழும் பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு ‘நாகாலாந்து’ மாநிலம் முதன்முறையாக உருவாக்கப்பட்டது.

அதன் பின்னர், அப்பகுதியில் ஒவ்வொரு தேசிய இனமும் தமக்கெனத் தனி மாநிலம் அல்லது தனி நாடு கேட்டுப் போராடத் தொடங்கின. போராட்டங்கள் தீவிரமடைவதைக் கண்டு அஞ்சிய தில்லி அரசு அடுத்தடுத்து 5 மாநிலங்களை உருவாக்கியது. இன்று வடகிழக்குப் பகுதியில் ஏழு மாநிலங்கள் அமைந்துள்ளன.

அசாம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, அருணாசலப்பிரதேசம், மிசோரம் ஆகிய அவ்வேழு மாநிலங்களும் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஏழு சகோதரிகளுக்குரிய நிலப்பரப்பு பாகப்பிரிவினை செய்யப்பட்டு விட்டபோதிலும், இவர்களுக்குள்ளேயும் சண்டை சச்சரவுகள் உண்டு. இருப்பினும் முதன்மை எதிரியாகத் தில்லி அரசைத்தான் எழுவரும் அடையாளம் காட்டுகின்றனர். இவ்வேழு மாநிலங்களும் மற்ற இந்திய மாநிலங்களோடு மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஒரு சிறிய பகுதியின் மூலம் நிலவழியாக இணைக்கப்படுகின்றன. இப்பகுதியானது சில்லி குறுவழி அல்லது கோழிக் கழுத்து என்று அழைக்கப்படுகிறது.

அசாம் மக்கள் வரலாறு

அசாமின் தெற்கே இமயமலையும் கிழக்குப் பகுதியில் பிரம்மபுத்திரா, பராக்கா ஆறுகள் பாயும் பள்ளத்தாக்கும் அதனையட்டி மலைப்பகுதியும் அமைந்துள்ளன. வடக்கே பூடான் நாடும், மேற்கே வங்காள தேசமும் அமைந்துள்ளன. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அதன் மொத்த மக்கள்தொகை 3.11 கோடியாகும்.

பர்மிய அரசின் ஆளுகைக்குப் பின்னர், 1838இல் யாண்டாபோ உடன்படிக்கையின்படி அகோம் அரசுகளிடமிருந்து அசாமைப் பறித்து பிரித்தானிய வல்லாதிக்கம் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 1900 ஆம் ஆண்டுகளில் வங்காளிகள் பெருமளவு எண்ணிக்கையில் நுழைந்து அசாமியர்களின் இயற்கை வளங்களைக் கைப்பற்றத் தொடங்குகின்றனர். 1931ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 55 இலட்சம் பேரில் 5 இலட்சம் பேர் குடியேறிய வங்காளிகள் என்று கணக்கெடுப்பு அலுவலர் சி.எஸ்.முல்லான் என்பவர் பிரித்தானிய அரசுக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கிறார்.

அதன்பின் இந்திய விடுதலையின் போதும், வங்காளதேச விடுதலையின் போதும் வங்காளிகள் அசாமிற்குள் மலையெனக் குவியத்தொடங்கினர். அப்போது திரிபுராவிலும் ஊடுருவி, திரிபுராவின் மண்ணின் மக்களைச் சிறுபான்மை இனமாக மாற்றியது தனி வரலாறு. அசாமின் பெரும்பான்மைத் தேயிலைத் தோட்டங்கள் அசாமியர்களிடமிருந்து வங்காளிகளுக்குக் கை மாறின. எல்லாத் தொழில்களிலும் வங்காளிகள் ஆதிக்கம் ஓங்கத் தொடங்கியது. அசாமியர் விழித்துக் கொண்டனர். 1960களில் ‘அசாம் அசாமியருக்கே’ என்று முழக்கம் பிறந்தது.

1979ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அன்றைய தலைமையமைச்சர் இந்திரா காந்தி அசாமிய மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்வதாக உறுதிகூறி அம்மக்களின் ஆதரவைக் கோரினார். அவரை நம்பத் தயாராக இல்லாத அனைத்து அசாமிய மாணவர் சங்கம் தேர்தலைப் புறக்கணிக்கும்படி அறைகூவல் விடுத்தது. வெறும் 13 விழுக்காடு மக்கள் மட்டுமே வாக்களித்தனர். இந்திராவின் குள்ளநரித்தன வேலைகள் அசாமியர்களிடம் எடுபடவில்லை. அசாம் மாணவர் இயக்கம் அங்குக் கிடைக்கும் கல் நெய்யையும் (பெட்ரோல்) வேறு இயற்கை எரிபொருள்களையும் தில்லி அரசு வெளியே எடுத்துக் கொண்டு போவதைத் தடுத்துக் கிளர்ச்சியில் குதித்தது.

“இந்திய நாய்களே வெளியேறுங்கள்” என்று தார்ச்சாலைகளில் எழுதி மாணவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். அசாமின் வாக்காளர் பட்டியலிலிருந்து வெளியார்களின் பெயர்களை அகற்றாமல் அசாமில் எந்தத் தேர்தலும் நடைபெறக் கூடாது என்பதில் மாணவர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் தில்லி நிர்வாகம் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் 1983ஆம் ஆண்டு அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை அறிவித்தது. அதன் விளைவு அசாம் வரலாற்றின் கருப்புப் பக்கமான நெல்லிப் படுகொலை. ஏறத்தாழ 5000 பேர் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர்.

இராசீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் போராட்டம் கொதி நிலையடைந்தது. அசாம் தில்லி அரசின் கையை விட்டுப் போய்விடுமோ என்று அச்சப்பட்ட இராசீவ்காந்தி அசாம் மாணவர் சங்கத் தலைவர் பிரபுல்ல குமார் மகந்தாவோடு பேச்சு வார்த்தை நடத்தினார். 1985ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் ஏற்பட்ட இராசீவ் காந்தி மகந்தா உடன்பாடு அசாமிய வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்த உடன்பாட்டில் முக்கிய விடயங்கள் பின்வருமாறு : 1) வங்காள தேசத்திலிருந்து 1966ஆம் ஆண்டு வரை வந்து குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குதல் 2) 1966, 1971ஆம் ஆண்டுகளில் வந்த வங்காளிகள் அசாமில் வாழ உரிமையுண்டு; ஆனால் வாக்குரிமை வழங்கப்படாது 3) 1971ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வங்காளிகள் கட்டாயமாக வெளியேற்றப்படுவர்.

இந்த மூன்று விடயங்களும் இராசீவ் காந்தியின் வாக்கு வங்கி அரசியலுக்கு மட்டுமே பயன்பட்டன. அவர் தேர்தல் வெற்றிவிழாக் கொண்டாடினார்; ஆனால் கைச்சாத்திட்ட உடன்பாடோ குப்பைத் தொட்டிக்குப்போனது. மாணவர்களின் கதாநாயகன் மகந்தாவோ முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டுத் தனது கொள்கைகளுக்குச் சமாதிக் கட்டினார். அதற்குப் பின் அசாமிய விடுதலை கோரும் ‘உல்பா’ (ஹிலிதிகி) அமைப்பு அசாமிய மக்களின் விருப்பங்களை முன்னெடுத்து கருவிப் போராட்டத்தை நடத்தி வருகிறது.

போடோ மக்கள் வரலாறு:

அசாம் மாநிலத்தில் வாழும் ‘போடோ’ மக்கள் தில்லி அரசிடமிருந்து தங்கள் இறையாண்மையை மீட்கப் போராடும் அதேவேளையில், வங்க மக்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் அசாமிய மக்களோடு இணைந்தும் போராடி வருகின்றனர். அசாமியர்களுக்கும் வங்காளிகளுக்கும் இடையேயான முரண்பாட்டைப் பின்னுக்குப் போகவிடாமல் தடுத்து அம்மய்ய முரண்பாட்டுக்கு வரலாறு நெடுக வலு சேர்த்து வருபவர்கள் போடோக்களே என்றால் அது மிகையாகாது. அசாமியர்களைப் போலவே போடோக்களுக்கும் நீண்ட வரலாற்றுப் பின்னணி உண்டு.

ஒத்த மொழிக் கூறுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்ட 18 இனக் குழுக்களைக் குறிக்கும் ஒரு கூட்டுச் சொல்தான் போடோ என்பதாகும். 18 இனக் குழுக்களுள் மிகப்பெரிய இனக்குழு போடோ கச்சாரி இனக்குழு ஆகும். வட கிழக்கு இந்தியாவின் பெரும் பகுதிகளிலும் நேபாளத்தின் சிற்சில இடங்களிலும் நெடுங்காலமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அசாமில் இவர்களின் எண்ணிக்கை 20 இலக்கம் ஆகும். அதாவது அசாம் மக்கள் தொகையில் 5.5% ஆகும். இவர்கள் சமவெளிப் பழங்குடி மக்களாக அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் மொழி அரசமைப்பில் 6ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. போடோ மக்களில் பெரும்பாலோர் இந்துக்களே. கிருத்துவர்களும் இசுலாமியர்களும் சிறுபான்மை மக்களாக உள்ளனர். தங்கள் மொழி, பண்பாடு, வழிபாட்டு முறைகளில் தனித்துவ அடையாளங்களைப் பேணிக் காப்பதற்கு இறையாண்மையுள்ள ‘போடோ’ நாட்டை உருவாக்குவதுதான் அவர்களின் நீணடநாள் கனவு ஆகும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அவர்களின் நாட்டு விடுதலைப் போராட்டம் தொடங்கி விட்டது. 1930களில் பிரித்தானிய வல்லாதிக்கத்திற்கு எதிராக காளிச்சரண் பிரம்மா என்பவர் தலைமையில் இம்மக்கள் பேராடினர். சைமன் குழுவிடம் தங்கள் இறையாண்மைக் கோரிக்கையை முன்வைத்தனர். பிரித்தானிய அரசு செவி சாய்க்கவில்லை. அதன்பின் 1960களில் அவர்களின் இரண்டாவது கட்டப் போராட்டம் இந்தியர்களின் ஆட்சியில் தொடங்கியது. அப்போது அவர்கள் முன்மொழிந்த ‘உதயச்சல்’ எனும் தன்னாட்சி ஒன்றியக் கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஒதுக் கீடு ‘போடோ’க்களுக்கு அளிக்கப்பட்ட போதும் ‘போடோ’ மாணவர்கள் கல்வியிலோ, வேலை வாய்ப்பிலோ பெரும் முன்னேற்றம் பெற இயல வில்லை.

1980களில் போடோக்களின் மூன்றாவது கட்டப் போராட்டம் தொடங்கியது. அவர்களின் அரசியல் கோரிக்கைக்கு உபேந்திராநாத் பிரம்மா தலைமை வகித்தார். போடோக்களை ஓரணியில் திரட்டினார். போடோக்களின் தந்தை என அவர் அழைக்கப்பட்டார். 1993ஆம் ஆண்டு முதன்முறையாக போடோக்களின அரசியல், சமூக, பொருளியல் நலன்களை மேம்படுத்தும் பொருட்டு அசாம் அரசு ‘போடோலாந்து’ தன்னாட்சி மன்றத்தை நிறுவியது. அனைத்துப் போடோ மாணவர் ஒன்றியம், போடோ மக்கள் நடவடிக்கைக் குழு ஆகியவை இதனை ஏற்றுக்கொண்டன. ஆனால்அசாம் அரசு ஒப்புக் கொள்ளப்பட்ட பலவற்றை நிறைவேற்றத் தவறியதால் வழக்கம்போல் இதுவும் தோல்வியைத் தழுவியது.

போடோ மக்களின் அறவழிப் போராட்டங்கள் பயனில்லாமல் போகவே, கருவியேந்தும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டார்கள். 1986ஆம் ஆண்டில் இரன்சைக்ரா நப்லா டைமரி என்பவர் தலைமையில் போடோ பாதுகாப்புப் படை உருவாக்கப்படுகிறது. பின்னர் அது 1994ல் போடோலாந்து தேசிய சனநாயக முன்னணி என்று பெயர் மாற்றம் பெறுகிறது. தில்லி ஆதிக்கத்திலிருந்து போடோலாந்தை முழுமையாக விடுவிப்பதுதான் முதன்மைக் குறிக்கோள் என அறிவிக்கப்படுகிறது. தேவநாகரி வரி வடிவ எழுத்துகளை கைவிட்டு இலத்தீன் வரிவடிவ எழுத்துகளைப் பயன்படுத்துமாறு அது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்த அமைப்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கிறித்துவர்களாக இருப்பதால் இந்த அமைப்பை அன்னிய நாடுகளின் கைக்கூலி அமைப்பென்று சித்தரிக்கிறது தில்லி அரசு.

போ.தே.ச.மு.க்குப் போட்டியாக போடோ விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு ஒன்றும் உருவானது. அது முழு விடுதலைக்கு மாற்றாகத் தன்னாட்சி கோரிக்கையை முன்வைத்தது. இந்த அமைப்போடு அன்றைய தலைமையமைச்சர் வாஜ்பாய் உடன்பாடு ஒன்றைக் கண்டார். போடோ புலிகள் அமைப்பு உடனடியாகக் கருவிகளை ஒப்படைத்துச் சரணடைந்தது. போ.தே.ச.மு. அமைப்பு முழு விடுதலையைக் கோரியதால் உடன்பாட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டது.

2003ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் நாள் இந்திய அரசின் அன்றைய துணைத் தலைமை அமைச்சர் எல்.கே.அத்வானி, அசாமின் அன்றைய முதல்வர் தருண் கோகாய் ஆகியோர் முன்னிலையில் போடோ விடுதலைப் புலிகள் அமைப்புத் தலைவர் ஹக்கிரம்மா பசுமத்தாரி கையெழுத்திட்டு போடோலாந்து ஆட்சிப் பரப்பு மன்றத்தை ஏற்றுக்கொண்டார். இந்த உடன்பாட்டின் மூலம் இந்திய அரசமைப்பின் 8ஆவது அட்டவணை மொழிகளில் போடோ மொழியும் இணைக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 6வது பட்டியலின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த மன்றம் சட்டமன்ற, நிர்வாக, நீதித்துறை அதிகாரங்களைக் கொண்டது. மாநில அரசின் சட்டங்களோ, தேசிய அரசின் சட்டங்களோ ஒன்றியத்தின் அனுமதியோடு தான் நடைமுறைப்படுத்த முடியும். இந்த உடன்பாட்டில் நிலம் வாங்கும் உரிமை போடோக்களுக்கு மட்டுமே என்கிற நிபந்தனை இல்லாத காரணத்தால் குடியேறிய வங்காளிகள் நிலம் வாங்கிக் குவிப்பதை இந்த மன்றத்தால் தடுக்க முடியவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் வங்காளிகள் போடோ மக்களின் எண்ணிக்கையைத் தாண்டிக் குவிந் துள்ளனர். போடோலாந்து ஆட்சிப் பரப்பு விழலுக்கு இறைத்த நீராகி விட்டது. போடோலாந்து ஆட்சிப் பரப்பு பகுதிகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள பெரும்பாலான வங்காளிகள் விரும்புகின்றனர். போடோ மக்களோ அண்டை நாடான வங்காள தேசத்தின் எல்லையை மூடும்படி கோரி வருகின்றனர். இரண்டு இனங்களுக்கிடையேயான மோதல் நிலைதான் கடந்த சூலை 20ஆம் நாளன்று மிகப்பெரிய கலவரத்தைத் தோற்றுவித்தது. அஃது இன்னும் ஓய்ந்தபாடில்லை.

ஆரிய இனவழிப் பாசம்

அசாமில் கோக்ரஜார் மாவட்டத்தில் தொடங்கிய வன்முறையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நான்கு இலக்கம் பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். வடகிழக்கு மாநிலத்தவர், சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய ஊர்களிலிருந்து வெளியேறி, சாரை சாரையாகத் தொடர்வண்டியில் ஏறியபோதுதான் இனக்கலவரம் செய்தியானது. நாடெங்கும் பரவியது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத மன்மோகன்சிங் அரசு பாகிசுத்தான் மீது பழியைப் போட்டு இணையம், குறுஞ்செய்திகளுக்குத் தடை விதித்தது. கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்த கதைபோல்தான் இதுவும். அசாம் இனக்கலவரத்திற்கான மூலக் காரணங்களை இன்றளவும் அது மூடி மறைக்கிறது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 1901ஆம் ஆண்டில் 15 விழுக்காடாக இருந்த வங்க நாட்டினர் 2001இல் 31 விழுக்காடாகவும், 2011இல் 34.7% விழுக்காடாகவும் உயர்ந்துள்ளனர். அசாமில் வங்க நாட்டினர் பெரும்பான்மை இனமாக மாறி வருவதையே இது காட்டுகிறது. 2001இல் அசாமில் உள்ள 27 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் மட்டுமிருந்த வங்காளிகள் 2012இல் 14 மாவட்டங்களில் கூடுதலாகப் பரவியுள்ளனர்.

1983இல் அசாமில் கொண்டு வரப்பட்ட சட்டவிரோத வெளியார் நுழைவுத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தும் வங்க நாட்டினர் நுழைவதைத் தடுக்க முடியவில்லையே ஏன் என்று வினா எழுப்பிய உச்சநீதி மன்றம் அச்சட்டத்தையே நீக்கி ஆணையிட்டது. அத்தோடு நில்லாமல் அது, வங்க நாட்டின் எல்லையோர மாவட்டங்களான கம்கன்ஜில் 42.08 விழுக்காடும், கேச்சரில் 47.59 விழுக்காடும், துப்ரியில் 56.57 விழுக்காடும் வங்காளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியதோடு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள மய்ய அரசின் வெளியார் நுழைவுச் சட்டத்தையே பயன்படுத்துமாறும் ஆணையிட்டது.

2005ஆம் ஆண்டைய உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை மதித்து மன்மோகன்சிங் அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அது போகட்டும்! மன்மோகன்சிங்கின் நிரந்தரத் தலைவி சோனியாவின் கணவர் இராசீவ் காந்தி காலத்தில் செய்து கொள்ளப்பட்ட வங்க நாட்டினரை வெளியேற்றும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியிருந்தாலும், வங்காளிகள் பெருமளவில் குவிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்திய விடுதலைக்கு முன்பும் இந்திய அரசியலில் வங்க இனத்தவரின் ஆதிக்கம் நீடித்தது; விடுதலைக்குப் பின்பும் நீடித்து வருகிறது. பாகிசுத்தானுக்கு எதிரான காய் நகர்த்தலுக்கு வங்க இனத்தவர் பயன்பட்டு வருகின்றனர். 1971இல் வங்காள தேசத்திற்கு விடுதலை பெற்றுத் தந்த தில்லி அரசு அது முதல் வங்க இனத்தவரிடம் மென்மையான போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

வங்க இனத்தவரின் தொப்புள் கொடி உறவான விசயனின் வம்சாவழி வந்த சிங்கள இனத்தைத் தில்லி அரசு தொடர்ந்து ஆதரித்து வருவது கண்கூடு. அதுபோலவே வங்க இனத்தவரின் சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி திரிபுரா, அசாம், போடோலாந்து பகுதிகளில் வாழும் தேசிய இன மக்களுக்கு இரண்டகம் செய்து வருகிறது. சட்ட விரோதமாகக் குடியேறிய வங்க நாட்டினர்க்கு வாக்குரிமை, அடையாள அட்டை, குடிமைப் பொருள் அட்டை என்று எல்லாவகை ஏந்துகளையும் செய்து கொடுக்கிறது தில்லி அரசு.

ஆனால் ஈழத்தமிழர் சிக்கலில் எப்படி நடந்து கொள்கிறது? கடவுச் சீட்டு இல்லாமல் ஈழ அகதி ஒருவர் கடல் தாண்டிப் படகில் வந்துவிட்டால்கூட, அம்மணமாகப் பல மணி நேரம் சோதனை போட்டுப் பின்னர் அகதி முகாம் என்ற சிறைக்கு அனுப்பி வைக்கிறது. பல ஆண்டுகளாகச் செங்கல்பட்டு முகாமிலும், பூந்தமல்லி முகாமிலும் எந்த வழக்கு விசாரணையுமின்றி ஈழ ஏதிலிகள் வதைபட்டு வாடுகின்றனர். அவர்களைத் திறந்தவெளி முகாமில் (திறந்த வெளிச்சிறையில்) வைப்பதற்குக் கூடத் தில்லி அரசு தடை விதிக்கிறது. கடவுச் சீட்டு இல்லாத எத்தனையோ ஈழத் தமிழர்களைத் திருப்பிய அனுப்பிய தில்லி அரசு கடவுச் சீட்டுடன் வந்த பார்வதியம்மாளைக் கூடத் திருப்பியனுப்பித் தமிழின விரோதப் போக்கை மெய்ப்பித்துக் காட்டியது. அதற்கு நம் கருணாநிதி துணைபோனதை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது.

இங்கே நமக்கு இயல்பாகச் சில கேள்விகள் எழுகின்றன. ஏதிலியராய் வந்த ஈழத்தமிழரைத் திருப்பி அனுப்ப எப்பொழுதும் நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. ஆனால் வங்காளதேசத்திலிருந்து சட்டப் புறம்பாகக் குடியேறிய 80 இலக்கத்திற்கும் மேற்பட்ட வங்காளியர்களை மட்டும் திருப்பி அனுப்பத் தயங்குவதேன்? ஆங்கிலேயர் காலத்தில் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அம்மண்ணைத் தங்கள் வியர்வையாலும் அரத்தத்தாலும் வளப்படுத்திய தமிழர்களுக்குச் சிங்களவன் குடியுரிமை மறுத்த போது ஐந்திலக்கத் தமிழர்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் மீண்டும் ஏற்றுக் கொண்டது இந்திய அரசு. அப்பொழுது ஆடு மாடுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொள்வது போல் ஒரு மாந்த நேயமற்ற ஒப்பந்தத்தை (சாஸ்திரிசிறீமாவோ ஒப்பந்தம்) இலங்கையுடன் செய்து கொண்டது. வங்காளியர்கள் கள்ளத்தனமாக உள் நுழைந்தவர்கள். அவர்களை வெளியேற்ற ஒரு நியாயமான ஒப்பந்தத்தை வங்காளதேசத்துடன் செய்து கொள்ள இந்தியா நினைத்துக்கூடப் பார்க்கவில்லையே, ஏன்? இவற்றையெல்லாம் ஆரிய இனவழிப் பாசம் என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது?

வங்க நாட்டினர் சிக்கலுக்குத் தாங்கள் மதவாதம் பூசவில்லையென்று பாசக பசப்பினாலும் அதன் ஒவ்வொரு செயலிலும் இசுலாமிய எதிர்ப்பு அரசியலே அடியோட்டமாக உள்ளது. இந்தியாவில் உள்ள இசுலாமிய அமைப்புகள் வங்க நாட்டினரின் ஆதிக்கத்தை மதக் கண்ணோட்டத்தில் ஆதரிப்பதையும் நாம் ஏற்க முடியாது. இந்துத் தீவிரவாத அமைப்புகள் அசாம் இந்துக்களுக்காகப் போராடுவதாகக் கூறும் எதிர்வகை அரசியல்தான் இசுலாமிய அமைப்புகளைத் தூண்டிவிட்டுள்ளது.

அசாமில் நடைபெற்ற இனப்படுகொலைகளில் இரு தரப்பினருக்கும் பங்குண்டு. இந்து, இசுலாம் மதவாதங்கள் கடுமையான கண்டனத்துக்குரியவை; புறக்கணிக்கப்பட வேண்டிவை. அதேவேளையில் போடோ மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதுதான் மதச்சார்பின்மை பேசுவோரின் கடமையாக இருக்க முடியும்; தமிழ்த் தேசியர்கள் போடோ விடுதலையை ஆதரிப்பது அவர்களின் முதன்மைக் கடமைகளில் ஒன்று.

தமிழ்த் தேசியர்களுக்குப் பாடம்

1938இல் தந்தை பெரியார் எழுப்பிய “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கம் தமிழர்களது மொழி, பண்பாடு, இன, பொருளியல் நலன்கள் குறித்த முதல் அரசியல் முழக்கமாகும். தில்லி ஆதிக்கத்திலிருந்தும், மார்வாடி, சேட்டுகளிடமிருந்தும் சுதந்திரத் தமிழ்நாடு பெறுவதுதான் அவரின் இறுதிக் குறிக்கோளாகும். மிகை எண்ணிக்கையில் மார்வாடி சேட்டுகள் தமிழகத்தில் நுழைவதைக் கண்ட பெரியார் தமிழர்களின் தொழில் வணிகத்தைக் காக்கும் பொருட்டுப் பல மறியல் போராட்டங்களை நடத்தினார். அப்போராட்டங்களை நாம் தொடரத் தவறியதால் மார்வாடி சேட்டுகளின் பிடியில் தமிழரின் தொழில் வணிகம் இன்று சிறைபட்டுக் கிடக்கிறது.

இன்றைய உலகமயமாக்கலில் மார்வாடிகளும் சேட்டுகளும் பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர் வாழ்வாதாரத்தை மேலும் சூறையாடி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க வடக்கு, வடகிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த உழைப்பாளிகள் பெரும் எண்ணிக்கையில் வேலை தேடித் தமிழகத்தில் குடிபுகுந்து வருகின்றனர். பெருகி வரும் மலையாளிகளின் எண்ணிக்கையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தமிழர் சிறுபான்மையினராக மாறி விடுவரோ என்று அச்சம் வெறும் உணர்ச்சி சார்ந்ததன்று; ஏற்கனவே கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் தமிழர்கள் சிறுபான்மையினராக மாறி வரும் ஆபத்தை மறுப்பதற்கில்லை. தொடக்க நிலையிலேயே சிறுபான்மை மொழியினர் எண்ணிக்கையைக் குறிப்பிட்ட வரையறுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் தமிழகமும் அசாமைப் போல அவதியுறும் நிலைக்குத் தள்ளப்படும்.

ஆளும் வர்க்கங்கள் உழைப்பாளி மக்களிடையே இனமோதலை தீவிரப்படுத்தும் திட்டத்துடனேதான் இத்தகைய இடப்பெயர்வுகளை ஊக்குவிக்கிறது. தமிழ்த் தேசியர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு தமிழருக்கே என்னும் பொருள் பொதிந்த முழக்கத்தை ஓங்கி எழுப்புவது இன்றைய காலத்தின் தேவையாகும். வெளியார் ஆதிக்கத்திற்கெதிராகத் தமிழ்த் தேசியர்களே அணிதிரண்டு போராட முன்வாருங்கள்!

தரவுகள்: கீற்று, விக்கிப்பீடியா