உலகின் இன்றைய வல்லாதிக்க அரசுகள் தங்கள் சந்தை நலனுக்காகக் கூட்டு சேர்ந்து உலகை மறு பங்கீடு செய்து வருகின்றன. இனிமேல் தேசிய இனப் போராட்டங்களோ, அதன்வழி நின்று விடுதலை பெறுவதோ சாத்தியமில்லையென்று பலர் உரக்கக் குரல் எழுப்பி வருகின்றனர். ஈழப் போராட்டத்தின் தற்போதைய பின்னடைவைக் கண்டு, அப்போராட்டத்தை ஆதரித்தவர்கள் கூட, தனித் தமிழீழம் சாத்தியமில்லையென்று சோர்வுற்று கூறுவதையும் நாம் கேட்டு வருகிறோம். இத்தகைய சூழலில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் ‘தென் சூடான்’ என்றொரு நாடு உலக வரைபடத்தில் புதிதாக உருவாகியிருப்பது எந்த விடுதலைப் போரும் இறுதியில் வெல்லும் என்பதை மீண்டுமொருமுறை மெய்ப்பித் திருக்கிறது.

சூடான் உருவான வரலாறு

       சூடான்தான் வடக்கிலிருந்து தெற்கு வரை பாயும் நைல் நதியின் பிறப்பிடமே! அது பாய்ந்து செல்லும் வழிகளெல்லாம் சதுப்பு நிலப் பகுதிகள் உருவாகின. அச் சதுப்பு நிலங்கள் ‘சூட்’ என்று பெயரிடப்பட்டு பின்னர் ‘சூடான்’ என்று அழைக்கப்படுவதாகக் கூறுவாருமுண்டு. இப்போதைய சூடான் குடியரசு என்று அழைக்கப்படும் அந்நாடானது கறுப்பு நாடு (country blacks) என்றும், அரபியில் பிலாது - இல் - சூட் என்றும் அழைக்கப்படுகிறது.

       கிறித்துவர்களின் வேதாகமத்தில் ‘கஷ்’ (cush) என்று பல குறிப்புரைகளில் காணப்படுகிறது.

       எகிப்தியர்களின் வருகைக்கு முன்னால் கி.மு.750இல் சூடானிய மன்னர்கள் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்போது ‘பியான்கி’ மன்னனும், அவரது மகன் ‘திர்ஹாகா’வும் திறம்பட ஆட்சி நிர்வாகம் செய்து வந்தனர்.

       கி.பி.450இல் கிறித்துவத்தின் வருகையும், அம்மன்னர்களின் ஆட்சியும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் நடைபெற்று வந்தன. கி.பி.7ஆம் நூற்றாண்டில் அராபிய இசுலாமியர்கள் வடக்கு சூடான் பகுதிக்குள் அலை அலையாய் நுழைந்து அப்பகுதி முழுவதையும் கைப்பற்றினர். அராபியர்கள் பின்பற்றிய இசுலாமிய மதம் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. பல நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்த பூர்வ குடிகளான ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் தெற்கு நோக்கி அடித்து விரட்டப்பட்டனர். 1821ஆம் ஆண்டு வாக்கில் துருக்கிய, எகிப்தியப் படைகள் சூடான் நாட்டை ஆக்கிரமித்து, அடிமை வியாபாரத்தின் சந்தைக் காடாக தெற்குப் பகுதியைப் பயன்படுத்தின. பின்னர் நாடு விடுதலை பெறும் வரை பிரித்தானிய ஆட்சியாளர்களே சூடானைக் காலனியாதிக் கத்தின் கீழ் வைத்திருந்தனர்.

       வடக்கு சூடான் பகுதியில் வசிப்பவர்கள் இசுலாம் மதத்தையும் தெற்கு சூடான் பகுதியில் வசிப்பவர்கள் கிறித்துவம் மற்றும் இயற்கை சார்ந்;த புராதனக் கடவுள்களைப் பின்பற்றி வருபவர்கள் அராபிய மொழியே வடக்கு சூடானில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி. ஆங்கிலம், மற்றும் பக்குவமடையாத அரபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இனக்குழு மொழிகளே தெற்கு சூடானின் பேச்சு மொழி. பிரித்தானியர்களின் ஆட்சியில் வடக்கு, தெற்கு பகுதிகள் தனித் தனி ஆட்சியாகவே நடத்தப்பட்டன. 1956ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் வடக்கையும் தெற்கையும் ஒரே நாடாக இணைத்து வடக்கு சூடானில் உள்ள கார்டூமை தலைநகரமாக அறிவித்து நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். இதனால் ஒன்றுபட்ட சூடான் நாட்டின் மொத்த நிலப்பரப்பானது இந்திய நிலப்பரப்பில் 75 விழுக்காடு கொண்டதாகவும், ஆப்பிரிக்க நாடுகளில் மிகப் பெரிய நாடாகவும் உருமாறுகிறது. மொத்த மக்கள் தொகையே 4 கோடி பேர். அராபியர்கள் 31 விழுக்காடும், ஆப்பிரிக்கர்கள் 61 விழுக்காடும், மற்றவர்கள் 8 விழுக்காடும் வாழ்ந்து வருகின்றனர்.

முதல் உள்நாட்டுப் போர் (1955 - 1972)

       1956இல் பிரித்தானியர் வடக்கு சூடானியரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு முன்பாகவே, தெற்கு சூடான் மக்கள் அதிகாரத்தைப் பரவலாக்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். தெற்கு சூடானியரின் உயர்கல்வி என்பது எழுத்தர் பணிக்கு மேல் தாண்டவில்லை. வேலை வாய்ப்பு முழுவதையும் வடக்கத்தியரே அபகரித்துக் கொண்டனர். பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் வடக்குப் பகுதியில்தான் நிறுவப்பட்டது. 80 விழுக்காடு எண்ணெய் வளங்களையுடைய பகுதிகள் தெற்குப் பகுதியில் இருந்த போதிலும், கச்சா எண்ணெயைத் துப்பரவு செய்யும் தொழிற்சாலைகள் வடக்கில் தான் உருவாக்கப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் வடக்கு மட்டுமே வாழ்ந்தது. தெற்கோ தாழ்ந்தது.

       1960களில் ஏற்பட்ட இராணுவப் புரட்சி மூலம், அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு மேலும் வடக்குப் பகுதிக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டன. தேசிய மொழியாக அரபு மட்டும் அறிவிக்கப்பட்டுக் கூடுதல் தகுதி வழங்கப்பட்டது. அனைத்துக் கல்வி, அரசு நிறுவனங்களில் அரபு மொழியைக் கட்டாய மொழியாகப் பின்பற்றும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரசு விடுமுறை நாள் ஞாயிற்றுக் கிழமைக்குப் பதிலாக வடக்கு சூடான் மக்களின் வழிபாட்டு நாளான வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.

       1964இல் சூடானில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தபின் பாராளுமன்றம் செயற்படத் தொடங்கியது. தெற்கு சூடான் மக்களின் உணர்வுகளை ஏற்றுக் கொள்வதாகவும், கூடுதல் அதிகாரம் தருவதாகவும் அனைத்துக் கட்சி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. 1968இல் உருவான புதிய அரசியலமைப்புச் சட்டமும் எந்தத் தீர்வையும் தராததால் உள்நாட்டுக் கலகம் மிகப் பெரிய அளவில் வெடித்தது.

அடிஸ் அபாபா உடன்படிக்கை (1972)

       சூடானில் நடைபெற்ற உள்நாட்டுக் கலகத்தைப் பயன்படுத்திக் கொண்டு 1969 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு இராணுவப் புரட்சி நடைபெற்றது. இராணுவத் தளபதி கேணல் நிமெய்ரி ஆட்சியைக் கைப்பற்றி, மதச்சார்பற்ற சோசலிச அரசாகச் சூடானைப் பிரகடனப் படுத்தினார். தெற்கு சூடானுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதாகவும் அறிவிப்புச் செய்தார். அப்போது தெற்கு சூடான் மக்களுக்கு விடுதலை கேட்டு தெற்கு சூடான் விடுதலை இயக்கமும் (Southern Sudan Liberation Movement) அதன் கெரில்லாப் பிரிவான‘அன்யன்யா’வும் போராடி வந்தன. 'SSLM' என்று சுருக்கமாக அழைக்கப்படும் அவ்வமைப்போடு அதிபர் நிமெய்ரி பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில், எத்தியோப்பியா தலைநகர் அடீஸ் அபாபாவில் அதிபர் ஹெய்லி சீலஸி முன்னிலையில் உடன்படிக்கை காணப்பட்டது. தெற்கு சூடானுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குதல், சட்டம், நிர்வாகம், நிதித்துறையை உள்ளடக்கிய இடைக்காலச் சபை உருவாக்குதல், தேர்தல் மூலம் தலைவர் தேர்வு செய்யப்படுதல், ‘அன்யன்யா’ கெரில்லாப் போராளிகள் அனைவரும் காவல் சிறைத்துறை பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுதல் ஆகியவை அந்த உடன்படிக்கையில் காணப்பட்டது. ஆனால் உடன்படிக்கைக்கு மாறாக சில மாதங்களிலேயே அதிகாரத்தைப் பகிர்வு செய்து கொள்வதில் சிக்கல்கள் நீடித்தன. இடைக்காலச் சபைக்கான அதிகாரங்கள் குறுக்கப்பட்டு, மைய அரசின் அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டன. தெற்கு சூடானியர்களின் கல்வி, பொருளியல் முன்னேற்றம், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் மைய அரசின் தலையீட்டின் காரணமாக இடைக்கால சபையின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. சூடானிய இராணுவத்திலும் கலகம் ஏற்பட்டு பல இராணுவ வீரர்கள் உகாண்டா, எத்தியோப்பியாவிற்குத் தப்பியோடினர். அங்கு போய் அடிஸ் அபாபா உடன்படிக்கைக்கு எதிராகச் செயல்பட்டனர். இதனால் தென் சூடான் மக்களின் தன்னாட்சிக் கனவு தகர்ந்து போனது. கிட்டத்தட்ட 15 இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்ட முதல் உள்நாட்டுப் போரானது தென் சூடான் மக்கள் விடுதலைக்கு மிகப் பெரும் பின்னடைவையே தந்தது.

இரண்டாம் உள்நாட்டுப் போர் (1983 - 2005)

       நிமெய்ரியின் ஆட்சிக் காலத்தில் 1983இல் இசுலாமியர்களால் பின்பற்றப்படும் ‘சரியத்’ சட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம் தெற்குப் பகுதி மக்களுக்குப் பொருந்தாது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டாலும் அது தம் மீது செலுத்தப்படும் மற்றொரு ஒடுக்குமுறையாகவே தென் சூடான் மக்கள் கருதினர். நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன.

       1985ஆம் ஆண்டு பலத்த எதிர்ப்பின் காரணமாக நிமெய்ரி பதவி விலகினார். இதற்கிடையில் இசுலாமிய அடிப்படைவாதிகள் ஒன்று சேர்ந்து ‘தேசிய இசுலாமிய முன்னணி’ (NIF)யைக் கட்டமைத்தனர். சூடான் நாட்டை இசுலாமியத் தேசமாக மாற்றுவதே இவ்வமைப்பின் நோக்கமாகும். 1989ஆம் ஆண்டில் இராணுவத்தின்; துணையோடு ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது நடைபெற்ற ஈரானுக்கும், எகிப்திற்குமிடையிலான ‘பனிப் போரில்’ ஈரானிய அரசு ‘இசுலாமிய சூடான்’ அரசிற்கு முழு ஆதரவைத் தந்தது.

சூடான் மக்கள் விடுதலை இயக்கம் - 1983

       தென் சூடான் நாடானது ‘இசுலாமியமாகுதல்;’ என்கிற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட சூழலில், 1983ஆம் ஆண்டு மருத்துவர் ஜான்கரஸ் டி மபாயர் தலைமையில் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (Sudan People Liberation Movement) உருவானது. அதன் இராணுவப் பிரிவானது இசுலாமிய அரசை தூக்கியெறிவதற்காக, தெற்கு சூடானின் பல்வேறு இனக் குழுக்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. இவ்வமைப்பு முதலில் தன் தீர்வுரிமை (சுயநிர்ணய உரிமை) கேட்டு மட்டுமே போராடி வந்தது. 1990இல் சோவியத் ஒன்றியம் பல்வேறு தேசிய இனங்களாக சிதறுண்ட பின்னர் தென் சூடான் விடுதலை ஒன்றே தீர்வு என முழக்கமிட்டது. இசுலாமிய வடக்கு சூடான் அரசு இராணுவப் படை கொண்டு இவ்வமைப்பை நசுக்க முற்பட்டது.

       1989இல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் ஒமர் அசன் அல்பசீர் அதிபர் ஆனார். இவர் ஆட்சிக் காலத்தில் சூடான் மக்களின் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 1995இல் தெற்கு சூடான் மக்கள் விடுதலை இராணுவம் பரஜாக், ஊனிகிபல், போலடகா, மக்வே, பகரி, தலைநகர் ஜீபா வரை பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறினர். இந்தப் போரில் தேசிய இசுலாமிய முன்னணியின் அரசுபடை தோல்வியடைந்து பத்தாயிரம் இராணுவ வீரர்களை இழக்க நேரிட்டது.

நைரோபி உடன்படிக்கை - 2005

       கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் பல இலட்சம் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கவலைப்படுவதைப் போல நாடகமாடின. இருப்பினும், சூடான் நாட்டின் மீது பல்வேறு அழுத்தங்களைக் கொடுக்கவும் இந்நாடுகள் தவறவில்லை. 2005ஆம் ஆண்டு மே 9ஆம் நாள் கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் சூடான் தேசியக் காங்கிரசுக் கட்சி அரசுக்கும், சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்குமிடையில் உடன்பாடு கையொப்பமானது. ஒருங்கிணைந்த சூடானில் தெற்கு சூடான் பகுதிக்குத் தன்னாட்சி அதிகாரம் தருவதன் மூலம் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் ஆட்சி நடத்துவதென்றும், நாட்டின் மொத்த வருவாயை இரண்டு அரசுகளும் சமமாகப் பகிர்ந்து கொள்வதென்றும், 2011 சனவரி 9ஆம் நாளன்று தெற்கு சூடான் மக்களிடம் தனி நாடாவதா? என்று கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படுமென்றும் நைரோபி உடன்பாட்டில் தீர்மானிக்கப்பட்டது. கடந்த காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களைக் காட்டிலும் இவ்வொப்பந்தமானது தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே அமைத்துக் கொள்ளும் உரிமையை வழங்கிய காரணத்தால் தெற்கு சூடான் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தர்ப்பூர் (Darfur) படுகொலையும் போர்க் குற்றவாளி தீர்ப்பும்

       இரண்டாம் உள்நாட்டுப் போரில் (1983 - 2005) ஏறக்குறைய 20 இலட்சம் தென் சூடான் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நாடுகளிலும் ஏதிலிகளாய்ச் சிதறினர். அதிபர் ஒமர் அல் பசீர் நடத்திய படுகொலைகளில் முதன்மையானது ‘தர்ப்பூர்’ எனுமிடத்தில் நிகழ்த்திய படுகொலையாகும். 2003 ஆம் ஆண்டு வரையில் 3,00,000 மக்கள் கொல்லப்பட்டனர். ஒமர் அல் பசீரின் திட்டமிட்ட படுகொலைக்குப் பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்டுப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை, சித்திரவதை, கட்டாய இடப்பெயர்வு, பர், மசலித், ஜகாவத் ஆகிய மூன்று போராளிக் குடும்பங்கள் மீது ஏவப்பட்ட படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அல் பசீரை ஒரு போர்க் குற்றவாளி என்று பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2009ஆம் ஆண்டு மார்ச் 4இல் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அரேபியர் அல்லாதவரை இனப் படுகொலை செய்த குற்றத்திலும் இணைக்கப்பட்டு அல் பசீருக்கு இரண்டாவது முறையாக 2010ஆம் ஆண்டு சூலை 2இல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பிடியாணை நகல் சூடான் அரசுக்கும், ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கும் அனுப்பப் பட்டுள்ளது.

       உலகின் எந்தவொரு நாட்டிற்குச் சென்றாலும், அந்நாட்டு அரசு அவரைக் கைது செய்யலாம் என்கிற வழிகாட்டுதலையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக கைதுக்குப் பயந்து கொண்டு அல் பசீர் எந்தவொரு நாட்டிற்கும் இதுவரை செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக் கணிப்பு முடிவுகள் - 2011

       சூடான் மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் ஜான்கரங் மாபயர் ‘நைரோபா உடன்படிக்கை’ ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பின் உலங்கூர்தி (ஹெலிகாப்டர்) நேர்ச்சி ஒன்றில் உயிர் துறந்தார். அவருக்குப் பின் சல்வாகிர் மாயார்திக் என்பவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். ‘நைரோபா உடன்படிக்கை’யில் கூறப்பட்டுள்ள படி ஆறு வருடங்கள் கழிந்த பின்னர் கருத்து வாக்கெடுப்புத் தேர்தலை 2011 சனவரி 5 முதல் 15 வரை தேர்தல் வாக்கெடுப்பு ஆணையம் நடத்தி முடித்தது. 2011 சனவரி 30இல் வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் 98.83 விழுக்காடு மக்கள் தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்து போவதற்கு ஆதரவாக வாக்களித் துள்ளனர். இந்தக் கருத்து வாக்கெடுப்பில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு செய்துள்ளனர்.

       தென் சூடானில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது வடக்கு சூடானிலிருந்தும், புலம் பெயர்ந்து ஏதிலிகளாக வாழக் கூடிய நாடுகளிலிருந்தும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். எண்ணெய் வளமிக்க அபேயி (Abeyi) பகுதியில் மட்டும் பல்வேறு மோதல் காரணமாகத் தேர்தல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

       2011 சூலை 9ஆம் நாள் அதிகாரபூர்வமாகத் தென் சூடான் நாடு விடுதலை பெறுவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதே நாளில் ஐ.நா.மன்றத்தில் 193 ஆவது உறுப்பு நாடாக இணைய உள்ளது. கருப்பு, வெண்மை, சிவப்பு, பச்சை, தங்க விண்மீன் உள்ளடங்கிய ஆறு வண்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.

       புதிதாகப் பிறந்துள்ள உள்ள தெற்கு சூடான் நாட்டின் கிழக்கே எத்;தியோப்பியாவும், தெற்கே கென்யாவும், உகண்டாவும், மேற்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசும் வடக்கே - சூடான் நாடும் எல்லையாக அமைய உள்ளன. அதன் தலைநகராக ஜூபா (Juba) அமையவுள்ளது. புதிய அதிபராகச் சல்வாகீர் மாயார்திக் பதவியேற்றார்.

தெற்கு சூடானும் - தமிழீழமும் ஒர் ஒப்பீடு

       தெற்கு சூடான் மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் வரலாற்று ரீதியிலும், ஒடுக்குமுறை வகையிலும், அதனை எதிர்த்த ஆயுதப் போராட்ட முறையிலும் பல்வேறு ஒற்றுமைகள் உண்டு.

       ஈழத் தமிழர்களும் சூடானிய ஆப்பிரிக்கர்களும் தத்தம் மண்ணின் பூர்வ குடிகளாவர். அம்மண்ணில் வந்து குடியேறிய அராபியர்களும், சிங்களர்களும் அங்கு வாழ்ந்த மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தினர்.

       பல்வேறு இராச்சியங்களாகச் சிதறிக் கிடந்தவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து ஆட்சி நடத்திய பிரித்தானியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறும் போது இலங்கையில் சிங்களவர்களிடமும், சூடானில் அரேபியர் களிடமும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றனர். இலங்கையில் கட்டாயச் சிங்கள மொழித் திணிப்பு என்றால் சூடானிலும் அரபு மொழித் திணிப்புதான். அங்கு பௌத்த மதம் அரசு மதமானது. இங்கும் இசுலாமிய மதம் அரசு மதமானது. தமிழீழத்திலும், தென் சூடானிலும் முதலில் எழுந்த கோரிக்கைத் தன்னாட்சி அதிகாரம் மட்டுமே!

       அடிஸ் அபாபா உடன்படிக்கையும், இந்திய - இலங்கை ஒப்பந்தமும் ஏறத்தாழ ஒரே தன்மை கொண்டவை. மாகாணங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் கொடுக்காமலே இரண்டு அரசுகளும் உடன்படிக்கையைக் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிந்தன.

       1983ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த இனப் படுகொலைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மக்கள் இயக்கமாக மலர்ந்தது. தெற்கு சூடானிலும் அதே ஆண்டில் உருவான சூடான் மக்கள் விடுதலை இயக்கமும் அம்மக்களின் முழு ஆதரவோடு தீர்மானிக்கக் கூடிய சக்தியாகப் பலம் பெற்று போராடியது.

       தமிழீழத்தில் இராசபக்சே அரசினால் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை தமிழர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டதைப் போலவே, தெற்கு சூடானிலும் ஒமர் அல் பசீரால் நடத்தப்பட்ட ‘தர்ப்பூர்’ படுகொலையும் அந்நாட்டில் முதன்மையாகப் பேசப்பட்டது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் ஒமர் அல் பசீரை போர்க் குற்றவாளியென்று அறிவித்துள்ளது. அயர்லாந்து டப்ளின் தீர்ப்பாயமும் ஐ.நா. அறிக்கையும் இராசபக்சேவைப் போர்க் குற்றவாளியென்று பிரகடனம் செய்துள்ளது.

       தமிழீழ விடுதலைக்கும், தென் சூடான் விடுதலைக்குமான ஒரே வேறுபாடு என்னவெனில், தென் சூடானை அமெரிக்கா, மேற்குலக ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டப் பன்னாட்டுச் சமூகம் அங்கீகரித்து விட்டது. தமிழீழக் கோரிக்கை இன்னும் ஏற்கப்படாமல் உள்ளது. அது நமக்கெல்லாம் வேதனையளித்தாலும் கூட, விடுதலையை அங்கீகரிப்பதாக அறிவித்திருப்பது நமக்குச் சற்று ஆறுதலைத் தருகிறது. தமிழீழ விடுதலையை ஏற்றுக் கொண்டு அறிவித்த முதல் நாடும் இதுவாகும்.

       புலம் பெயர்ந்த தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையமைச்சர் உருத்திரகுமாரனுக்கு 2011 சூலை 9ஆம் நாள் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் படி அழைப்பு விடுத்தது தென் சூடான் அரசு. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அரசியல் வெளிவிவகாரத் துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் மற்றும் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் செயப்பிரகாசு செயலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். இதன்மூலம் தமிழீழத் தேசத்திற்கு அறிந்தேற்பு வழிங்கிய முதல் அரசு எனும் வரலாற்றுப் பெருமையைத் தெற்கு சூடான் ஈட்டிக் கொண்டுள்ளது.

       ஏற்கெனவே, 2009ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில்; தென் சூடானிய அய்க்கிய அமெரிக்கப் பேராளர் டொமாக் வால்லு ஆக்சே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

       தமிழீழக் கனவு முள்ளிவாய்க்காலோடு முடிந்து போகவில்லை! சோர்ந்த எமது கைகளை உம் கைகளோடு பிணையுங்கள்! தாயகக் கனவு நிச்சயம் பலிக்கும்… என்று கூறும் தெற்கு சூடான் மக்களின் விடுதலையை உச்சி முகர்ந்து வரவேற்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.