கொங்கு நாட்டின் அறிவுக் கருவூலமாக விளங்கிய பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் 22.10.2010 மாலை 4.30 மணிக்கு, சென்னை பெரியார் திடலில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். ஆசான் அவர்களின் மறைவு தமிழின உணர்வாளர்களுக்கு, சனாதன எதிர்ப்பாளர்களுக்கு, பெரியார் பெருந் தொண்டர்களுக்குப் பேரிழப்பாகும்.

                ஆசானின் இயற்பெயர் கு.வெ.கிருட்டிணசாமி. 1935ஆம் ஆண்டு திசம்பர் 23ஆம் நாள் உடுமலை வட்டம் குருவப்ப நாயக்கனூரில் பிறந்தார். திரு.வெங்கடசாமி வேலம்மாள் ஆகியோர் இவரின் பெற்றோர். உடுமலையில் பள்ளிக் கல்வியும் பெங்களுரில் சட்டவியலும் பயின்றவர். பொருளியல், அரசியல், வரலாறு, மெய்யியல் ஆகிய நான்கு துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

                பெரியார் பேருரையாளராகவும், திராவிடர் கழகத்தில் துணைப் பொதுச் செயலாளராகவும் விளங்கினார். ஆசான் உண்மையில் தமிழ்த் தேசியச் சிந்தனையாளர்;. கல்லூரிப் பருவத்தில், ஈ.வெ.கி. சம்பத் தோற்றுவித்தத் தமிழ்த் தேசியக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டவர் சம்பத் பேராயக் கட்சியோடு கரைந்த போதும், இவர் தமிழ்த் தேசியச் சிந்தனைகளில் ஊன்றி நின்று அறிவுக் கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

                தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், தமிழ்ப் பேரரசின் தந்தை சி.பா. ஆதித்தனார் ஆகியோரின் தமிழின விடுதலைச் சிந்தனைகளில் இணக்கக் கூறுகளை உற்றுநோக்கி ஒருங்கிணைந்த விடுதலையினை முன்வைத்தவர் ஆசான்.

                உலக விடுதலை இயக்கங்களின் வரலாற்று மாநாட்டைப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கோவையில் நடத்திய பெருமைக்குரியவர் ஆசான்.

ஆழ்ந்து நிறைந்த தமிழ் உணர்வுக் கடல் ஆசான் உள்ளம். மொழி ஞாயிறு தேவநேயரின் நூல்களைக் கற்றுக் கற்றுத் தோய்ந்தவர். பாவாணரின் ஆய்வியல் நுட்பத்தை, ஆசானைப் போல் அறிவியல் நெறியில் விளக்கிக் கூறியவர் வேறு எவருமில்லை எனலாம். தூய தமிழை ஏட்டிலும் எழுத்திலும் மட்டுமின்றிப் பெயர்ப் பலகையிலும் நிலை நிறுத்தப் போராடியவர்.

பாரதியையும் தமிழ்த் தேசியப் பாவலராகக் கண்டு சுவைத்த ஆசான், பாவேந்தர் படைப்புகளில் பேரீடுபாடு கொண்டிருந்தார். பாவலரேறு பெருஞ்சித்திரனாருடனும் 'தென்மொழி'யுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். உலகத் தமிழ்க் கழகம், உலகத் தமிழின முன்னேற்றேக் கழகம் போன்ற அமைப்புகளில் தொடர்பு கொண்டு செயல்பட்டார். “பாவேந்தர் பாசறை” என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார்.

                கோவையில் இவர் உருவாக்கிய சிந்தனைப் பேரவை, அறிஞர் உலகின் சிந்தனைத் தளத்தில் விரிவான மலர்ச்சியை உருவாக்கியது. பல்துறை அறிஞர்களும், பல்வகைப்பட்ட சிந்தனையாளரகளும் நேச உணர்வுடன் கூடிப் பேசி, வழக்கிட்டுக் கருத்துக்களைக் கூர்மைபடுத்திக் கொள்ளும் களமாகச் சிந்தனைப் பேரவை விளங்கி வந்தது.

                ஆசானின் “கல்வி அகம்” அறிஞர்களின் சிந்தனைக் கூடம். இங்கே கூடாத கூட்டம் இல்லை. பேசாத பொருளில்லை. பலதுறை அறிஞர்களும் கூடிக் கருத்துரையாற்றக் களம் ஏற்படுத்தியவர் ஆசான். தந்தை பெரியார், ஈழத் தலைவர்கள் ஈழவேந்தன், வைகுந்தவாசன், காசிஆனந்தன், அமிர்தலிங்கம், பெங்களுர் குணா, கு.ச.ஆனந்தன், வே.ஆனைமுத்து முதலியோர் கல்வி அகத்தில் கருத்துரையாற்றிய அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

                ஈழத் தமிழர் உரிமைப் போராட்டம் எழுச்சியுற்ற போது, ஈழப் போராளிகளையும், ஈழத்து அறிஞர்களையும் பரப்புவதிலும் நெறிப்படுத்து வதிலும் பெரும்பங்காற்;றினார். அதேபோல், பகுத்தறிவு இயக்கப் பணிகளையும்; முன்னெடுத்து வந்தார். திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கற்று அதன்படி வாழ்ந்த அறநெஞ்சினர் ஆசான். இவர்தம் துணைவியார் போராசிரியர் சாரதா மணி பாவேந்தர் கண்ட குடும்ப விளக்கு! பல்துறை அறிஞர் செந்தில் குமார் ஆசானின் மைந்தா.; உமா இவர்தம் புதல்வி.

                “இங்கும் அங்கும்”, “ஊரும் உலகும்” என்ற பெயர்களில் மாத இதழ்களை நடத்தி வந்துள்ளார்.

                1983 வெளிக்கடைச் சிறைப் படுகொலைக்குப் பின், மாலை முரசு இதழில் ஈழத் தமிழர் வரலாற்றுக் கட்டுரைத் தொடரை எழுதி மக்களுக்கு அறிவுத் தெளிவூட்டினார்.

                அண்மைக் காலமாக, “விடுதலை”, “தி மாடர்ன் ரேசனலிஸ்ட்” இதழ்களில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுச் சிறப்பாகக் கடமையாற்றி வந்தார்.

                இவர் எழுதிய “மொழி உரிமை” என்னும் நூல், தமிழர் ஒவ்வொருவரும் படித்துணர வேண்டிய கருத்துக் கருவூலம்.

                மலையாள மாக்கவி குமாரன் ஆசான், வருண சாதி உருவாக்கம், மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம், தமிழர் வரலாற்றில் தந்தை பெரியார், பாரதியார் - பெரியார், பாரதியும் - பாவேந்தர் - பெரியார், சாகு மகராஜ், ஈழத் தமிழர் உரிமைப் போர் வரலாறு, Gora's positive Atheism and Free Will, Thiruvalluvan on learning Knowledge and Wisdom Kjypad முதலியன இவர் படைத்த அரிய நூல்கள்.

                வடகோவையில் இவர் உருவாக்கிய சிந்தனைப் பேரவை, 1970 செப்டம்பர், 2 ஆம் நாள் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கும் தமிழ்த் தேசம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.