தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ஈழ விடுதலைப் போராட்டம் இன்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஏறத்தாழ ஓரிலக்கத்திற்கும் மேலான மக்கள் மாண்டு போயுள்ளனர். இரண்டு இலக்கத்திற்கும் மேலான மக்கள் முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஈழம் முற்றுமுழுதாகச் சிங்களச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கிறது.

      இன்று ஈழ மண்ணில் ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சனநாயகவெளி முற்றிலுமாக அடைக்கப் பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தமது கடைசி மாவீரர் உரையில் ஈழ விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்களிடமே, அதுவும் குறிப்பாக இளைஞர்களிடமே உள்ளதெனக் குறிப்பிட்டார். தேசியத் தலைவரின் முன்னோக்கிய பார்வையையே இது காட்டுகிறது. தலைவர் சுட்டிக்காட்டும் கடமையின் ஒரு பகுதியை நிறைவேற்றும் முயற்சிதான் நாடு கடந்த அரசமைத்தலும் இவ்வறிக்கையும்.

நாடு கடந்த தமிழீழ அரசு:

      நாடு கடந்த அரசாங்கம் (Transnational Goverment) என்பது புகலிட அரசாங்கத்திலிருந்து  (Government of Ezile) முற்றிலும் வேறுபட்டது. புகலிட அரசாங்கம் என்பது ஏற்கனவே சொந்த நாட்டில் இயங்கி அகபுற அச்சுறுத்தல்கள் காரணமாக அங்கு இயங்க முடியாமல் நட்பு நாட்டில் அதன் ஏற்புடன் இயங்குவது.

      நாடு கடந்த அரசு என்பது முற்றிலும் புதிய முயற்சி. இது இயங்குவதற்கு எந்தவொரு நாட்டினதும் இசைவும் ஏற்பும் தேவையில்லை. உலகெங்கும் பரவி வாழும் புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு இணங்கி இவ்வரசை செயல்படுத்த முடியும். இவ்வரசுக்கென்று தனி நிலப்பரப்பு எதுவும் தேவையில்லை. இவ்வரசின் கட்டமைப்பு பற்றியும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றியும் அறிக்கை விரிவாகப் பேசுகிறது.

      அறிக்கை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான செயல்முறையையும், இலக்குகளையும் வரையறுத்துக் கொள்கிறது. நாடு கடந்த அரசாங்கத்தின் பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் வாக்காளர், வேட்பாளர்களின் தகுதிகள் ஆகியவை பற்றி விரிவாக விவரிக்கிறது. உலக அரங்கில் தான் செயல்படக் கூடிய தளத்தினையும் வரையறுத்துக் கொள்கிறது. இன்றைய சூழலில் உலகளவில் ஈழத்தமிழர்களுக்கான எதிர்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தன் ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்துவதற்கான வழிவகைகளையும் ஆராய்கிறது. தனக்கு ஆதரவான

ஆற்றல்களாக கீழ்க்காணும் நான்கு தொகுதியினரை அடையாளம் காண்கிறது.

1. புலம்  பெயர் ஈழத் தமிழர்கள்.

2. தாயகத்தில் வாழும் தமிழர்கள்

3.உலகெங்கும் பரந்து வாழும் பல தேசங்களினைச் சேர்ந்த தமிழ்ச் சமூகம்.

4. சர்வதேசச் சமூகம்.

இலக்கு:

      அறிக்கை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலக்கினை எவ்வகை அய்யத்திற்கும் இடமின்றி முன்மொழிகிறது. ஈழத் தமிழர் தேசத்தின் நியாயமான அரசியல் அபிலாசைகளினை வென்றெடுக்க அயராது உழைப்பதே இதன் அடிப்படை இலக்கு என குறிப்பிடுகின்றது.

வழிகாட்டிக் கோட்பாடு:

      அறிக்கை ஒன்பது வகையான வழிகாட்டிக் கோட்பாடுகளை விரிவாக விளக்குகிறது. அதன் முதன்மைக் கோட்பாடாகச் “சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை வென் றெடுப்பதில் விசுவாசமான உறுதிப் பாட்டைக் கொண்டிருத்தல்”” எனக் குறிப்பிடுகிறது. “தமிழீழ அரசு மதச் சார்பற்ற அரசாக அமையும்” என்பது அதன் இரண்டாவது கோட்பாடு. மற்றொரு கோட்பாடு “நாடு கடந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் புரிந்தவர்கள் விசாரணைக்குட்படுத்தப் பட்டுக் குற்றங்கள் இழைத்தோர் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது பற்றியும் ஈழக் குழந்தைகளின் கல்வி பற்றியும், ஈழ மக்களின் பொருளாதார, தொழில், சுகாதார மேம்பாடுகள் பற்றியும் வழிகாட்டிக் கோட்பாட்டில் பேசப்படுகின்றன.

முஸ்லீம் இன மக்களுடனான உறவுநிலைகள்:

      இவ்வறிக்கையின் மிகவும் சிறப்பான உள்ளங்கவர் குறிப்பாக இருப்பது முஸ்லீம் மக்களைப் பற்றிய குறிப்பாகும். ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட ஒரு சோக நிகழ்வினுக்குக் கழுவாய் தேடிக் கொள்ளும் முயற்சியாக இது அமைந்துள்ளது. ஈழத் தமிழர்களை மத அடிப்படையில் பிரிப்பதில் சிங்கள அரசு பெற்ற வெற்றிதான் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது. இந்நிகழ்வானது முஸ்லீம் மக்களின் மனங்களில் இன்றுவரை ஆறாத வடுவாக அமைந்துவிட்டது. புலிகள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்ட போதிலும் முஸ்லீம் மக்களுடனான உறவு மேம்படவில்லை. இவ்வறிக்கை அதைத் தீர்ப்பதற்குப் பெரிதும் உதவுமென நம்பலாம்.“தமிழீழ அரசு அமையும் போது முஸ்லீம் மக்களின் கூட்டுப் பிரதிநிதித்து வத்தினை அங்கீகரிப்பதற்கும் ஏதுவான வலுவான அரசியலமைப்பு மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளினை உறுதி செய்து கொள்வது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொறுப்பாகும்”” என அறிக்கை உறுதியளிக்கிறது. அது இன்னொரு படி மேலே சென்று “விரும்பும் போது பிரிந்து சென்று தனியாக வாழும் சுயநிர்ணய உரிமை முஸ்லீம் மக்களுக்கும் உரியது என்பது ஏற்றுக்கொள்ளப்படும்” என அழுத்தம் திருத்தமாக அறிவிக்கிறது. இந்த அறிவிப்பானது எதிரிகளின் பொய்ப் பரப்புரையை உறுதியாக முடிவுக்குக் கொண்டு வரும் என நம்பலாம். இது முஸ்லீம் மக்களிடையே உள்ள தயக்கங் களையும் அச்சங்களையும் போக்கித் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் இணைக்கும் என்பதில் அய்யமில்லை.

      இவ்வாறு இவ்வறிக்கை பல்வேறு நல்ல வரவேற்கக்கூடிய அறிவிப்புகளைப் பெற்றிருக்கிறது. அறிக்கையில் கூறப் பட்டவை அனைத்தும் நடைமுறைக்கு வர புலம்பெயர் தமிழர்கள் உழைக்க வேண்டும். அறிக்கை குறித்து மனந்திறந்த விவாதங்களை மேற்கொள்ள வேண்டும். மாவீரர்களின் கனவு நனவாக அனைவரும் உழைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் போராட்டத் திற்கு நாம் என்றும் துணை நிற்போம் என உறுதி கூறுவோமாக!

- தகப்பன் பிள்ளை