அமெரிக்காவின் நவீன கால வரலாற்றில் 1960-கள் மிகமுக்கியமான காலமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க கறுப்பின மக்களின் வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் இந்த காலகட்டத்தில் நடந்தேறியது. 1965-இல் அமெரிக்க நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் சிம்மசொப்பனமாக விளங்கிய மால்கம் எக்ஸ் (Malcom X) சுட்டு கொல்லப்படுகிறார். 1968-இல் அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைக்காக, அமைதி வழியில் போராடிய, அமைதிக்கான நோபல் பரிசினை பெற்ற மாட்டின் லூதர் கிங் (Martin Luther King Jr.) சுட்டு கொல்லப்படுகிறார். அதே காலகட்டத்தில், கறுப்பின மக்களின் மீது நடத்தப்படும் அரச வன்முறைக்கு எதிராக, தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதம் தங்கிய, சோஷலிச மற்றும் கறுப்பின தேசிய கொள்கைகளை முன்வைத்து பிளாக் பாந்தர் கட்சி (Black Panther Party), 1966-இல் உருவாக்கப்படுகிறது. இதே 1960-களில் தான் அமெரிக்கா-வியட்நாம் போருக்கு எதிரான போராட்டங்களும் நடைபெறுகிறது.

summer of soulஇந்த வரலாற்று பின்னணியில் தான், 1969 ஜூன் 9 முதல் ஆகஸ்ட் 24 வரை, 6 ஞாற்றுக்கிழமைகளில் நடைபெற்றது “ஹார்லெம் கலாச்சார திருவிழா (Harlem Cultural Festival)”. இலட்சக்கணக்கான கறுப்பினத்தவர்கள் கலந்துகொண்டு, கறுப்பினத்தவர்களின் இசையை, கலையை கொண்டாடிய இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வு, வரலாற்றில் மறைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை பதிவு செய்த காணொளிகளின் மீது 50 வருடங்களாக யாரும் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இந்த காணொளிகளை கொண்டு, வரலாற்றை மீள்பதிவு செய்ய 2021-ஆம் ஆண்டு, கியூஸ்ட்லவ் (Questlove) இயக்குநரால் என்ற உருவாக்கப்பட்டது தான் ‘சம்மர் ஆஃப் சோல்’ (Summer of Soul (...Or, When the Revolution Could Not Be Televised)) என்னும் ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படம்.

அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் இசை மிக முக்கிய பங்காற்றுகிறது. பல இசை வகைமைகளை அவர்கள் உருவாக்கினார்கள். முக்கியமா தங்களின் ஆப்பிரிக்க இசை தாளத்தையும், ஐரோப்பிய இசை முறையுடன் சேர்த்து உருவாக்கிய ஜாஸ் (Jazz) இசை வகைமை இன்றளவும் இசை உலகை ஆட்சி செய்து வருகிறது. இதில் முக்கியமாக அதுவரை இருந்த இசை முறைகளுக்கும் ஜாஸ் இசைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, ஜாஸ் இசையில் அதனை இசையமைக்கும் அனைவருக்கும் அவர்களின் தனித்துவ இடத்தையும், தங்களை வளப்படுத்திக்கொள்ள வாய்ப்பையும் வழங்குகிறது. இதனாலயே ஜாஸ் இசை வகைமை, ஜனநாயகத்துடன் என்றும் ஒப்புமை படுத்தப்படுகிறது.

அமெரிக்க கறுப்பின மக்கள் ராக் அண்ட் ரோல் (Rock and Roll), ராப் (Rap), ஹிப்-ஹாப் (Hip-Hop) என இன்னும் பல இசை வகைமைகளை உருவாக்கினார்கள். இவை இன்றும் இசை உலகத்தில் தங்களுக்கென வலுவான இடத்தை உருவாக்கி வைத்துள்ளது.

அமெரிக்க கறுப்பின மக்கள் உருவாக்கிய மற்றுமொரு முக்கிய இசை வகைமை ப்ளூஸ் (Blues). ப்ளூஸ் என்ற சொல், ஆங்கிலத்தில் மனச்சோர்வு சோகத்தை குறிக்கிறது. ப்ளூஸ் இசை வகைமை அமெரிக்காவின் தென்பகுதி மாகாண மக்களால், அதும் விவசாய கூலிகளால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. ப்ளூஸ் இசை வகைமையில் உள்ள பாடல் வரிகளும், இசையும், தங்களின் சோக உணர்வுகளை மற்றவர்களுக்கு கடத்துவதற்காக அமைக்கப்பட்ட வடிவமாக உள்ளது. இவ்வகை பாடல்களில் கதைகளையும், சம்பவங்களையும் கூறுவதை விட, தங்களின் உணர்வுகளை கூறுவதே பிரதானமாக கருதப்படுகிறது.

1969 ஹார்லெம் கலாச்சார திருவிழாவில், ப்ளூஸ் இசை வரலாற்றில் முக்கிய இசைக் கலைஞராக கருதப்படும் பி.பி.கிங் (B.B.King) பாடியுள்ளார். அவர் பாடிய Why I Sing blues பாடல், அமெரிக்க கறுப்பின மக்கள் வரலாற்றிலும், நிகழ்காலத்தில் அவர்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறை பற்றியும் கூறுகிறது. “நான் ஏன் ப்ளூஸ் பாடுகிறேன் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்” என்று துவங்கும் இந்த பாடல், “சவுக்கில் அடிக்கப்பட்டு, நான் கப்பலில் இங்கு கொண்டு வரப்பட்ட பொழுதிலிருந்து எனது ப்ளூஸ் துவங்குகிறது” என்று கூறி அமெரிக்க கறுப்பின மக்களுக்கு நிகழ்காலத்தில் நடக்கும் நிற ஒடுக்குமுறைகளை கூறுகிறார், “நான் சேரி (Ghetto) குடியிருப்புகளில் வாழ்கிறேன், என் குழந்தைகளுக்கு பள்ளிகளில் இடம் மறுக்கப்படுகிறது, எனக்கு வேலை கொடுக்க மறுக்கிறார்கள்” என தான் ஏன் ப்ளூஸ் பாடுகிறேன் என்று கேட்பவர்களுக்கு, நிறவெறியினால் நடத்தப்படும் ஒடுக்குமுறைகளே எங்களின் ப்ளூஸுக்கு காரணம் என்கிறார்.

காஸ்பெல் (Gospel) என்ற இசை கிறித்துவ பக்தி பாடல்களில் ஒரு வகைமை. இதிலும் அமெரிக்க கறுப்பின மக்கள் தங்களுக்கான தனித்துவமான வகையான பிளாக் காஸ்பெல் (Black Gospel) என்ற ஒன்றை உருவாக்கிக்கொண்டனர். மஹாலியா ஜாக்சன் (Mahalia Jackson) பிளக் காஸ்பெல் பாடகரில் மிக முக்கியமான பாடகர். அதுமட்டுமின்றி அமெரிக்க கருப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் உடன் பயணித்தவர். ஹார்லெம் கலாச்சார திருவிழாவில் இவரும் பங்கு பெற்றுள்ளார். இவர் இந்த நிகழ்வில் பாடிய பாடல்களில் மிக முக்கியமான பாடல் “Take My Hand, Precious Lord”. இந்த பாடல் மார்ட்டின் லூதர் கிங் அவர்களுக்கு மிக பிடித்தமான பாடல். தனது பிரச்சார கூட்டங்களில் மக்களை திரட்டுவதற்காக மஹாலியா ஜாக்சனை பாட கூறுவார். அதுமட்டுமின்றி மார்ட்டின் லூதர் கிங் இறப்பதற்கு முன்பு அவர் கேட்க ஆசைப்பட்ட பாடலும் இந்த பாடல் தான். மார்ட்டின் லூதர் கிங் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் நடைபெற்ற இந்த ஹார்லெம் கலாச்சாரத் திருவிழாவில் மீண்டும் அந்த பாடல் பாடப்பட்ட போது அங்கு இருந்தவர்களை நெகிழவைத்தது.

அமெரிக்க கறுப்பின மக்கள் தமது கலாச்சார விடுதலைப் போராட்டத்தில் செய்த முக்கிய பணி, பொது கலாச்சாரமாக அமெரிக்காவில் நிர்மாணிக்கப் பட்டிருந்த, வெள்ளை நிற வெறி கலாச்சாரத்துக்கு எதிராக, ஒரு எதிர் கலாச்சாரத்தை வைத்தது. அமெரிக்கா கறுப்பின மக்களை அவமானப் படுத்துவதற்காக, அவர்கள் நோக்கி உச்சரிக்கப்பட்ட “கருப்பர் (Black)” என்னும் வார்த்தையை அவர்கள் “ஆம் நங்கள் கறுப்பர்கள் தான்” என்று, எந்த வார்த்தை அவர்களை இழிவு செய்ய பயன்படுத்தப்பட்டதோ அதனையே பெருமையுடன் தங்களின் இன அடையாளமாக முன் வைத்தார்கள். இவர்கள் தங்களுக்கு என்று ஒரு உடை, அலங்கார பாணியை எதிர் கலாச்சாரமாக முன்வைத்தனர். இதில் மிகமுக்கியமான ஒன்று, இவர்கள் தங்களுடைய கலாச்சாரத்துக்கான மூலத்தை, தங்கள் வேர்களில் இருந்து, ஆப்பிரிக்காவில் இருந்து எடுத்தனர்.

இதே காலகட்டத்தில் நடந்த மற்றொரு முக்கியமான ஒரு சம்பவம், அமெரிக்க கறுப்பின மக்கள் அமெரிக்காவின் வெள்ளை நிறவெறிக்கு எதிராக தனித்து போராடாமல் அந்த மண்ணில் நிறவெறிக்கு உள்ளாகியிருந்த கியூபா, தென் அமெரிக்க மக்களையும் இணைத்து வெள்ளை நிறவெறிக்கு எதிரான ஒரு கூட்டணியை அமைத்தனர். இது அவர்களின் அரசியல், சமூகம் மட்டுமின்றி இசையிலும் வெளிப்பட்டது.

இந்த ஹார்லெம் கலாச்சார திருவிழாவில் பாடப்பட்ட ரே பாரெட்டோவின் (Ray Barretto) அபிஜான் (Abidjan) , டுகெதர் (Together) மற்றும் நினா சிமோனின் (Nina Simone) To be young, Gifted and Black பாடல்களும் இந்த அரசியல் சமுக பின்புலத்தில் உருவானதே.

“கருப்பர்” என்ற கலாச்சாரத்தை பெருமையாக முன்வைத்தாலும், நிறவெறிக்கு உள்ளாகியிருந்த கறுப்பினத்தவர்களையும் தாண்டி அமெரிக்க அரசால் ஒடுக்கப்பட்ட பல தேசிய இனமக்களை பெரும் கூட்டணியாக உருவாக்கியதிலும் பிளாக் பாந்தர் கட்சிக்கு (Black Panther Party) முக்கிய பங்குண்டு. கறுப்பின மக்களின் பாதுகாவலராக விளங்கிய இவர்கள் தான், நியூ யார்க் நகர காவல் துறை இந்த இசை திருவிழாவுக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கப்பட்ட பொழுது, பாதுகாப்பு அளித்தனர். அந்த நாட்களில் 21 பிளாக் பாந்தர் பார்ட்டி நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் விடுதலைக்கான ஆதரவும் மக்களிடம் இருந்து இந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்டது.

அமெரிக்க கறுப்பின மக்களின் முக்கிய வரலாற்றை பேசிய இந்த ‘சம்மர் ஆஃப் சோல்’ ஆவணப்படம் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கார் விருதை பெற்றது. இந்த விருதை பெரும் பொழுது, இந்த படத்தின் இயக்குனர் கியூஸ்ட்லவ் (Questlove) கூறுகையில், “விளிம்பு நிலையில் உள்ள ஹார்லெம் மக்களின் வலிகள் ஆற்றப்பட வேண்டும். இது வெறும் 1969-களின் கதை இல்லை.” என்கிறார். ஆம், இது வெறும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நிலைமை இல்லை, இன்றும் அதே இனப்பாகுபடும், வெள்ளை இனவெறியர்களின் தாக்குதலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான வரலாறு, இன்று நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களம் காண நம்மளை தயார் செய்கிறது. கறுப்பின மக்கள் அவர்கள் மீது நடத்தப்பட்டும் ஒடுக்குமுறைக்கு எதிராக களம் காண தயாரா என்று கேட்கும், நினா சிமோனின் “Are you ready black people” பாடலுடன் இந்த திரைப்படம் நிறைவடைகிறது.

- மே பதினேழு இயக்கம்