சோழப் பேரரசன் முதலாம் இராசராசன் கி.பி.985இல் முடிபுனைந்திருக்கிறான். முடி புனைந்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே சேர நாட்டிலிருந்த காந்தளூர்ச் சாலையைத் தாக்கி வெற்றி பெற்றிருக்கிறான் என்பது அவனது மெய்க்கீர்த்தியால் நமக்குத் தெரிய வருகிறது. அவன் அவ்வாறு விரைந்து காந்தளூர்ச் சாலையைத் தாக்குவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆதித்த கரிகாலச் சோழன் கொலை

பொன் மாளிகைத் துஞ்சிய தேவரான சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன், அருண்மொழி என்று இரு மகன்களும் குந்தவை என்று ஒரு மகளும் இருந்திருக்கின்றனர். சுந்தர சோழன் இறப்புக்கு முன்பாகவே ஆதித்த கரிகாலன் சில சூழ்ச்சிக்காரர்களால் இரண்டகமாகச் சாகடிக்கப் பெற்றிருக்கிறான்

இத்துன்பச் செய்தி கடலூர் மாவட்டம், காட்டு மன்னார் கோயிலின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரன் கோயில் கல்வெட்டினால் தெரியவருகிறது. இவ்வூர், கல்வெட்டுகளில் “வீர நாராயணபுரச் சதுர்வேதிமங்கலம்” என்று குறிக்கப் பெறுகிறது. ஆதலால் இது முதலாம் பராந்தகச் சோழனால் ஏற்படுத்தப் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனருகில்தான் இப்பராந்தகச் சோழன் காலத்தில் அமைக்கப்பெற்ற வீரநாராயண ஏரியும் உள்ளது.

வீரநாராயணச் சதுர்வேதிமங்கலம்தான் வைணவ இலக்கியங்களில் பேசப்படும் வீரநாராயணபுரம் ஆகும். இவ்வீரநாரயணபுரத்தில்தான் வைணவப் பெரியார்கள் நாதமுனியும் அவரது திருப்பெயரர் யமுனாசார்யா என்று வழங்கப்பெற்ற ஆளவந்தாரும் தோன்றினர். ஆதலால் நான்கு வேதங்களும் கற்ற பார்ப்பன‌ர்கள் இவ்வூரில் முதலாம் பராந்தகன் காலம் முதலே வைணவ ஆசாரியர்கள் காலம் முடிய வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது. இங்குப் பெரும்பாலும் பார்ப்பன‌ர்கள்தான் நில உடைமையாளர்களாக விளங்கியிருக்கின்றனர் என்பதையும் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

உடையார்குடிக் கல்வெட்டு

இவ்வூர் அனந்தீசுவரன் கோயில் உண்ணாழியின் மேற்குச் சுவரில் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டுப் பகுதியைக் கீழே காண்போம்.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம் “பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)...(இவன்) றம்பி
  2. ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
  3. பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
  4. கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர…

மேலே காணப்பெற்ற கல்வெட்டில் “பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனைக்” கொன்று “த்ரோஹிகளானவர்கள்” என்று தெளிவாகக் கூறப்பெற்றிருக்கிறது. அக்கொடும் பாதகச் செயலைச் செய்த துரோகிகள் யாவர் என்று அக்கொலையாளியின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறது. கொலையாளியின் பெயர்கள் அவர்கள் பார்ப்பன‌ர்கள் என்பதைக் காட்டுகின்றன. அப்பார்ப்பன‌ர்கள் ஏன் இந்த அழிவுச் செயலைச் செய்தார்கள் என்பது வரலாற்றாசிரியர்களுக்குப் புரியாத புதிராக இருந்து வருகிறது.

கொலைக்கான காரணம்

ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் சில ஊகங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாகச் சோழர் வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாத்திரியார், கண்டராதித்த சோழரின் மகனும், சுந்தரசோழனின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பான உத்தம சோழன்தான் இவ்வந்தணர்களை ஏவி ஆதித்த கரிகாலனைக் கொன்றிருப்பான் என்று கருதியுள்ளார். இக்கருத்து முற்றிலும் தவறு என்று வரலாற்றிலும் தமிழிலக்கியத்திலும் சிறந்த அறிஞரான தி.வை.சதாசிவ பண்டாரத்தார் தக்க சான்றுகளுடன் மறுத்திருக்கிறார். இருப்பினும் அவர் மறுப்பை ஏற்றுக்கொள்ளாத சென்னை விவேகாநந்தர் கல்லூரிப் பேராசிரியர், கே.ஏ.நீலகண்ட சாத்திரியார் கருத்தே மேலோங்கி நிற்கிறது என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

“இக்கட்டுரை உள்நோக்கம் கொண்ட கட்டுரை என்றும் தம் மரபினரைப் பாதுகாக்க எடுத்துக்கொண்ட முயற்சி” என்றும் தெரிவித்து வரலாற்று அறிஞர் க.த. திருநாவுக்கரசு தம் கட்டுரையொன்றில் சாடியிருக்கிறார். இவர், ஆதித்த கரிகாலன் பாண்டியனை வென்று அவனது தலையைக் கொண்டதால், பாண்டியனின் மரபினர் இவ்வந்தணர்களில் ஒருவனான “பஞ்சவன் பிரமாதிராசன்” மூலம் ஆதித்த கரிகாலச் சோழனைத் தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள் என்று புது விளக்கம் தந்துள்ளார். இவர், “பஞ்சவன் பிரமாதிராசன்” பாண்டியர்களின் அரசு அலுவலர் என்று கருதியிருக்கிறார். இவர் குறிப்பிட்டுள்ள “பஞ்சவன் பிரமாதிராசன்”, “ரவிதாசன்” என்பது ரவி குலத்தவனின் (சூரிய குலத்தினனின்) அடியான் என்று பொருள். எனவே, சூரியகுல அடியானாகிய பஞ்சவன் பிரமாதிராசன் சோழர், பாண்டியர்களை வென்றபொழுது, “பஞ்சவன் பிரமாதிராசன்” என்ற விருதுப் பெயரைச் சோழ வேந்தனால் சூட்டப்பட்டவனாகலாம். ஆதலால் அவன் சோழ அதிகாரியே தவிர பாண்டியனின் அரசதிகாரியில்லை.

கொலைக் கரணியம் யாது?

இந்தச் சூழ்நிலையில், ஆதித்த கரிகாலனைக் கொன்ற தீயவர் யாவர்? அவனைக் கொன்றதற்கான கரணியம் யாது? என்பது நம்முன் நிற்கும் வினாக்களாகும். இதற்கு விடை காண வேண்டுமென்றால் தொன்மத்தையும், இலக்கியத்தையும், கல்வெட்டு, செப்பேட்டு வரிகளையும் நாம் ஆராய வேண்டுவது தேவையாகிறது.

தொன்மம் கூறுவது என்ன?

சூரிய குலத்தில், கேகயநாட்டுக் கிருதவீரியனுக்கும் சுகந்தைக்கும் பிறந்தவன் கார்த்த வீரியன். இவன் ஒரு சத்திரியன். இவன் சமதக்கனி முனிவரிடமிருந்து “ஓமதேனு” எனும் பசுவைக் கவர்ந்ததனால் பரசுராமர் இவனைக் கொன்றார். இதைக் கேள்வியுற்ற கார்த்த வீரியர் மைந்தர், பரசுராமர் இல்லாத நேரத்தில் சமதக்கினி முனிவரைக் கொலை புரிந்தனர். பரசுராமர் அங்கு வந்தவுடன், சமதக்கினி முனிவர் தேவியார் இருபத்தோரு முறை தம் மார்பிலடித்துக்கொண்டு அவன் தந்தை இறந்த செய்தியைத் தெரிவித்தாள். கோபமுற்ற பரசுராமர் கார்த்தவீரியன் குலமாகிய சூரியகுல மரபினர்களை அழிப்பதாக உறுதிகூறி இருபத்தொரு தலைமுறை கருவறுத்தனன். அப்போது தப்பியவர்கள் கார்த்தவீரியன் புதல்வர்களாகிய சய்த்துவசன், வீரசேனன்,விருடணன்,மதுசூரன் அல்லது ஊர்ச்சிதன் ஆகியோராவர் என்று மச்சிய புராணம் கூறுகிறது.

இத்தொன்மத்தில் சூரிய குலத்தின் 21 தலைமுறைச் சத்திரியர்களைப் பரசுராமர் பூண்டோடு அழித்தார் என்பது மையக்கருத்தாகும். ஆனாலும் அவரிடமிருந்து தப்பியவர்களும் சிலர் இருந்தனர் என்பதுமாகும்.

இலக்கியக் கூற்று

இத்தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் ஒரு செய்தியை மணிமேகலையில் தெரிவித்திருக்கிறார்.

“மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்

தன்முன் தோன்றல் தகாதொளி நீயெனக்

கன்னி யேவலின் காந்த மன்னவன்

இந்நகர் காப்போன் யாரென நினைஇ

…………….

காவற் கணிகை தனக்காங் காதலன்

இகழ்ந்தோர்க் காயினும் என்சுத லில்லான்

ககந்தனா மெனக் காதலிற் கூஉய்

அரசா ளுரிமை நின்பால் இன்மையின்

பரசுராம னின்பால் வந்தணுகான்”

அதாவது, பரசுராமன்(மழுவாள் நெடியோன்) அரச குலத்தை(சத்திரிய குலத்தை) அழிப்பதற்காக உறுதியேற்றுக் கொண்டு புகார் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். நீ அவன் கண்ணில்படுவது தகாது, ஆதலால் நீ உன் கணிகை மகனான சுகந்தனிடம் ஆட்சியை ஒப்ப்டைத்துவிட்டு ஓடி ஒளிந்துகொள் என்று புகாரின் கன்னித்தெய்வம் “காந்தமன்” என்ற சோழ அரசினிடம் கூறியதுதான் அச்செய்தி. சோழர் சூரிய குலத்த்தைச் சார்ந்த சத்திரியர்கள் என்பதால்தான் பரசுராமன் சோழ வேந்தன் காந்த்மனைத் தாக்க வந்திருக்கிறான்.

மேலே குறிக்கப்பெற்ற இரு செய்திகளையும் அடிபடையாகக் கொண்டு ஆய்ந்து பார்ப்போமானால், சூரிய குலத்தில் தோன்றிய சோழ சத்திரிய அரசர்கள் மீது பரசுராமனுக்கும் அவரது மரபினர்க்கும் சினமும் எரிச்சலும் இருந்திருக்கிறது என்பது தெரியவரும்.

கல்வெட்டு, செப்புப் பட்டயச் சான்று

இயல்பாகவே கற்றறிந்த அந்தணர்கள் சத்திரியர் மீது மனக்கசப்பு கொண்டிருந்திருக்கின்றனர் என்பது பல்லவர் காலத்தில் கதம்ப பார்ப்பன‌ அரசன் “மயூரசர்மன்”, காஞ்சிபுரம் கடிகைக்கு உயர் கல்வி கற்க வந்தபோது, பல்லவர் குதிரை வீரன் ஒருவனால் கடிகைக்குள் நுழையவிடாது தடுத்துவிட்டபொழுது, அப்பார்ப்பன‌ மன்னன், “கடவுளே இந்தக் கலியுகத்தில் பார்ப்பன‌ர் சத்திரியர்களுக்கு அடங்கிய நிலையில் இருக்க வேண்டியுள்ளதே! பார்ப்பன‌ர் தன் குருவின் குடும்பத்துகு உரிய பணிவிடை செய்திருந்தாலும், வேதங்களின் உறுப்புகளை முறையாகப் படித்திருந்தாலும், அவன் சமயத்தில் முழுத்துவம் அடைவதற்கு (பல்லவ) அரசனைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மனவலியை ஏற்படுத்த இதைவிட வேறு என்ன வேண்டியிருக்கிறது?” என்று தமக்குத் தாமே புலம்பியிருக்கிறான். இச்செய்தி தாலகுண்டாக் கல்வெட்டினால் புலப்படுகிறது. பல்லவர் சத்திரியர் என்பது காசாக்குடிச் செப்பேடு நரசிம்மவர்மனை “சத்திரிய சூளாமணி” என்பதாலும், திருவெள்ளறை மூன்றாம் நரசிம்மப் பல்லவன் தம்மை “சத்திரிய சிம்மன்” என்று அழைத்துக் கொண்டதாலும் உணரலாம்.

தாலகுண்டா கல்வெட்டு தெரிவிக்கும் முதன்மைச் செய்தி யாதெனில் பார்ப்பன‌ மன்னர்களும் பார்ப்பனர்களும் சத்திரிய மன்னர்கள் மீது வெளியில் காட்டிக் கொள்ளாத பகைமை உணர்வைக் கொண்டிருந்தார்கள் என்பதேயாகும். இதுவும் அந்தப் பரசுராமனின் சத்திரிய மன்னர்களின் அழிப்பின் ஒரு கூறே என்று கருதலாம்.

பரசுராமன் கதை மேற்போக்காகப் பார்க்கையில் ஒரு தொன்மம் போன்று தோன்றினாலும், பார்ப்பன‌ – சத்திரிய அரசர்களின் பகைமையை எதிரொலிப்பதாகவே அதைக் கொள்ளல் வேண்டும்.

கண்டராதித்தன் மேற்கெழுந்தருளியது எதற்காக?

பிறகாலச் சோழ மன்னர்களில் முதற்பராந்தகனின் மகன் கண்டராதித்தனை “மேற்கெழுந்தருளிய தேவர்” என்று உடையார்குடிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவர் சோழ நாட்டின், மேற்குப் பகுதிக்கு எதற்காகச் சென்றார் என்பதில் வரலாற்றாசிரியர்கள் வேறுபட்ட கருத்தைக் கூறியுள்ளனர். இவன் மேற்றிசையில் இராட்டிரகூட மன்னரோடு பொருது அதில் இறந்திருக்கலாம் என்பது ஒரு கருத்து. இம்மன்னன் தல யாத்திரைக்குச் சென்று திரும்பாமை என்பது பிறிதொரு கருத்து.

இவர் காலத்தில் முதன் முதலாகக் “கண்டராதித்த பெரும் பள்ளி” என்ற புறச் சமயக் கோயில் ஏற்படுத்தப்பெற்றிருக்கிறது. கண்டராதித்த சோழனின் இப்புறச் சமயச் சார்பும், இவன் ஒரு சத்திரிய மன்னன் என்ற நிலையும், இவன், 9ஆம் திருமுறையில் சேர்க்கப் பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவன் என்பதும், காந்தளுர்ச் சாலையிலிருந்த பரசுராமன் வழிவந்தோரை இவன் மீது வெறுப்படையச் செய்திருக்கும். அவர்களை அமைதிப்படுத்த இம்மன்னன் சென்றிருக்கலாம். அப்போது மேற்குத் திசையில் (சேர நாட்டுக் காந்தளூர்ச் சாலையில்) இம்மன்னன் நயவஞ்சகமாக சாகடிக்கப்பட்டிருக்கலாம். ஆதலால் இவன் மீண்டும் சோழ நாட்டுக்குத் திரும்ப இயலாது போய்விட்டது. இதுதான் “மேற்கெழுந்தருளிய தேவர்” என்ற மரியாதைச் சொல்லுக்கு உரிய பொருளாக இருக்கும்.

இம்மன்னன் காந்தளூர்ச் சாலையில் கொல்லப்பெற்ற செய்தி, இவரது தம்பி மகனாகிய சுந்தரசோழன் ஆட்சியின் இறுதிக் காலத்தில்தான் தெரிய நேர்ந்திருக்கிறது. சுந்தர சோழனை அவன் காலத்தில் வெளியிடப் பெற்ற அன்பில் செப்பேடு “சத்திரியர்களில் முதன்மையானவன்” என்று புகழ்ந்துரைக்கிறது.

சத்திரியர்களின் எதிரியான பரசுராமனின் வழிவந்தோரால் தம் பெரிய தந்தை சாகடிக்கப்பட்டிருக்கிறான் என்று தெரிந்தவுடன் தம் மூத்த மகன் ஆதித்த கரிகாலனைக் காந்தளூர்ச்சாலைக்கு அனுப்பி அந்நயவஞ்சகர்களைத் தண்டிக்க தக்க நடவடிக்கையை மேற்கொண்டிருப்பான்.அத்திட்டம் தம் செவிகளுக்கு எட்டவே பரசுராமன் வழிவந்தோரில், உடையார்குடியில் வாழ்ந்து வந்த மேலே குறிப்பிட்ட நான்கு “துரோகிகளும்” ஆதித்த கரிகாலனைச் சூழ்ச்சி செய்து கொன்றுவிட்டனர்.

சுந்தர சோழனும் மிகுந்த தமிழ்ப்பற்றாளன் என்பதை “வீரசோழியம்” என்னும் தமிழ் இலக்கண நூல் உரை விரித்துரைத்துள்ளது. தாம் ஒரு சத்திரியன் என்பதும், தம் தமிழ்ப்பற்றும்தான் சுந்தர சோழனின் உடனடி நடவடிக்கைகுக் காரணமாகலாம்.

கொலையாளிகளைக் கண்டறிவதில் சுணக்கம்

ஆதித்த கரிகாலனைக் கொன்ற தீயவர்களைக் கண்டறிவதில் காலச் சுணக்கமாகியிருக்கும். ஆதலால் தான் உத்தம சோழன் ஆட்சிக் காலத்தில் அக்கயவர்களைத் தண்டிக்க இயலவில்லை. அவனுக்குப் பின்பு அரசாட்சி ஏற்ற முதலாம் இராசராசன் தம் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே “அத்துரோகிகள்” யார் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களது நிலம் மற்றும் அவர்களது உறவினர்களின் நிலங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விற்று, அரசுக்கருவூலத்தில் ஒப்படைக்கக் கட்டளையிட்டிருக்கிறான் இராசராசன் என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும்.

காந்தளூர்ச் சாலையை முதலில் தாக்கியதன் காரணம்

ஆதலால் தம் இரண்டாம் ஆட்சியாண்டில் அக்கயவர்களுக்குத் தண்டனை வழங்கிவிட்டு,தம் மூன்றாம் ஆட்சியாண்டிலேயே அக்கொலைக்கு மூலக்காரணியர்களான காந்தளூர்ச்சாலையிலிருந்த பரசுராமன் வழிவந்தோரை வாதத்தில் வென்று தாம் ஒரு “ராஜஸர்வஞ்ஞன்” என்பதைப் புலப்படுத்தியதோடு, அச்சாலையை நிலைகுலையச் செய்து, பின்பு தம் பெருந்தன்மையால் மீண்டும் அதைப் பழைய நிலையிலேயே இயங்கவும் செய்ததைத் தம் முதல் வெற்றியாகவும், மற்ற எல்லா வெற்றிகளிலும் முதன்மையானதாகவும் கருதியிருக்கிறான். எனவேதான் அவ்வெற்றியை தம் மெய்கீர்த்தியில் “காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி” என்று முதலாவதாகக் குறிப்பிட்டுக் கொண்டான்.

பரசுராமன் நாடு

திருவாலங்காட்டுச் செப்பேட்டில் முதலாம் இராசராசனுடைய இவ்வெற்றி “பரசுராமனது நாட்டை வென்றது” என்று குறிப்பிடப்படுகிறது. இதேபோன்று இப்பெருவேந்தனின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா மகன் முதலாம் இராசேந்திரனும் “சோழ நாட்டுக்கு மேற்கே அமைந்திருந்த சேரநாட்டையும் பல்பழந்தீவுகளையும் வெற்றி கொண்டதோடு, சேரரின் முடியையும், மாலையையும், பரசுராமரால் சாந்திமத்தீவில் வைக்கப்பெற்றிருந்த செம்பொன் முடியையும் தம் ஐந்தாம் ஆட்சியாண்டில் கவர்ந்து கொண்டான்” என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

திருமறை இருக்குமிடம் காட்ட மறுத்ததன் காரணம்

ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகளைத் தண்டித்ததற்கும் தில்லை நடராசர் கோயிலில் திருமறைகள் இருக்குமிடத்தைக் காட்ட மறுத்த தில்லை மூவாயிரவர் செயலுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். ஏனெனில் தில்லை மூவாயிரவரும் சேர நாட்டைச் சேர்ந்தவர்களேயாவர். அவர்களுக்கும் பரசுராமன் வழி வந்தோரான காந்தளூர்ச்சாலை அந்தணர்களுக்கும் உடையார்குடித் துரோகிகளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். ஏனெனில் திருமறை ஓத முக்கிய இடம்.

ஆதித்த கரிகாலனைப் பார்ப்பன‌ர்கள் கொன்றதன் கரணியத்தாலோ என்னவோ இராசராசன் தம் நாட்டில் வேதங்கள் ஒலிப்பதற்குப் பகரமாகத் திருமறை ஓதுவதற்கு மிகுந்த முதன்மை தந்திருக்கிறான். இங்கு மற்றொன்றையும் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரேயொரு செப்புப் பட்டயம்

பிற்காலச் சோழர்களில் பெரும் புகழ் படைத்த பேரரசாக விளங்கிய இராசராசன் வெளியிட்டதாக ஒரே ஒரு செப்புப் பட்டயம்தான் இதுவரை கிடைத்திருக்கிறது. அப்பட்டயமும் “க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டுப் பட்டணக் கூற்றத்து நாகப்பட்டிணத்தில் கடாரத்தரையன் சூளாமணி பன்மனால் அமைக்கப் பெற்ற புத்தப் பள்ளிக்கு” அளிக்கப் பெற்ற நிலக் கொடையைக் குறிப்பதாகத்தான் உள்ளது. பார்ப்பன‌ர்களுக்கு இவன் காலத்தில் நிலக்கொடை வழங்கி வெளியிட்ட செப்புப் பட்டயம் ஒன்றுகூட இதுவரை கிடைக்காமலிருப்பதும், இவன் பார்ப்பன‌ர்கள்மீது கொண்டிருந்த வெறுப்பை எதிரொலிப்பதாகவே தெரிகிறது.

இம்மன்னன் தாம் “சத்திரியர்களின் சிகாமணி” என்று பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறான். மேலும் ஒரு வளநாட்டுக்குச் “சத்திரிய சிகாமணி வளநாடு” என்று பெயரிட்டிருக்கிறான். ஆதலால் தாம் ஒரு “சத்திரியன்” என்று கூறிப் பெருமைப்பட்டிருக்கிறான். இவையெல்லாம் முதலாம் இராசராசனின் பரசுராமர் வழிவந்தோர் எதிர்ப்பைப் புலப்படுத்துவதாகத் தோன்றுகிறது.

- தொல்லியலறிஞர் நடன. காசிநாதன், தமிழ்நாட்டரசுத் தொல்லியல் துறை மேனாள் இயக்குநர்

(கட்டுரை: “முதன்மொழி” சிற்றிதழின் அக்தோபர் – திசம்பர் 2010 வெளியீட்டில் வந்தது)

Pin It