Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=ஜூன் 2008
பொருட்படுத்தப்படாத பிற்படுத்தப்பட்டோர்
அசோக் யாதவ்


மண்டல் அறிக்கை, பதினைந்தாண்டு கால இடைவெளிக்குப் பின்னரும் இந்தியாவிலுள்ள ஆளும் வர்க்கமான மேல்தட்டு மக்களை ஓயாமல் வாட்டி எடுக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 93 ஆவது திருத்தத்தைத் தொடர்ந்து பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மய்ய அரசு, தனியார் நடத்தும் தொழில் நுட்பம் மற்றும் சிறப்புக் கல்வி நிறுவனங்களில், 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசு தீர்மானித்தது. இதை அடுத்து எழுந்துள்ள இந்த அத்தியாயத்தை, மண்டலின் இரண்டாவது அத்தியாயம் என்று ஆதிக்க சாதியினர் மற்றும் மேலாதிக்கம் செலுத்தும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மண்டல் II க்கு எதிரான போராட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்றபோது, தனியார் மற்றும் மyய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்மொழியப்பட்ட இடஒதுக்கீட்டின் மீதான தனது பார்வையை விளக்கும் வகையில் 17.5.2006 அன்று, மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி ஓர் அறிக்கை வெளியிட்டது. அவ்வறிக்கை, ‘கிரீமிலேயர்' என்ற கருத்தாக்கத்தை ஆதரிப்பதாகவும், பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டுக்காக வாதிடுவதாகவும் இருந்தது. மூன்று மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும், மய்யத்தில் ஆள்கின்ற முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் நிலையிலும் உள்ள மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி (சி.பி.எம்.), இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் உள்ளது.

அக்கட்சி பொதுக்கருத்துகளை உருவாக்குவதில் முன்னோடி அமைப்பாகவும், பொது நலனை முன்னிறுத்திய போராட்டங்களை நடத்தும் அமைப்பாகவும் உள்ளது. பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு சி.பி.எம். அளிக்கும் ஆதரவு நிபந்தனைகளுடன் கூடியது; கிரீமிலேயர் கருத்தாக்கத்துக்கான அக்கட்சியின் ஆதரவும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி அது வாதிடுவதும், இந்தியாவின் சமூகநீதி இயக்கத்தின் பாதையில் மிகப்பெரிய தடைக்கல்லாக அமைந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன், ஒரு விரிவான உடன்பாடு ஏற்படுவதற்கு ஏதுவாக ஒரு பொது விவாதத்தை நடத்த அக்கட்சி அழைப்பு விடுக்கிறது.

சி.பி.எம். கட்சியால் முன்வைக்கப்படுகின்ற இத்தகைய நிபந்தனைகளை, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எச்சரிக்கையற்ற முறையில் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சி.பி.எம். இன் நிலையை விமர்சனப் பூர்வமாக ஆராய்வது, அவர்களின் நோக்கில் இன்றியமையாத ஒன்றாகும். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் மீதான சி.பி.எம்.இன் நிலைப்பாட்டை விமர்சிக்கும் அதே வேளையில், பிற பிற்படுத்தப்பட்டவர்களின் இரட்டை எதிரிகளான மதவாதத்திற்கு எதிராகவும், புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் அக்கட்சி போராட்டங்களை நடத்தியுள்ளது என்பதையும் நாம் பாராட்டியாக வேண்டும்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், பொருளாதாரத் தன்னிறைவு மற்றம் இந்திய மக்களுக்கான இன்றியமையா நலன்களுக்கான பிற கூறுகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், முன்னேறச் செய்வதற்குமான போராட்டங்களில் சி.பி.எம்.மும், பிற பிற்படுத்தப்பட்ட தலைவர்களும் இயல்பான தோழமை சக்திகளாக விளங்குகின்றனர். மத்தியிலும், மாநிலங்களிலும், காங்கிரஸ் அல்லாத, பாரதிய ஜனதா அல்லாத ஆட்சியமைக்க நாடுகையில் அவர்களின் (பிற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சி.பி.எம்.) நடவடிக்கைகளில் இப்பொதுத் தன்மை மிகச்சிறப்பாக வெளிப்படுகிறது எனலாம்.

இருப்பினும், சி.பி.எம்.இன் பார்வையில் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடமேயில்லை என்பது போன்ற நிலைதான் நிலவுகிறது. அதன் பொதுவான செயல்திட்டங்களில் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரைப் பொறுத்தவரை, ஏன் இவ்வகையான பாகுபாடு நிலவுகிறது என்று சி.பி.எம். மிகவும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். கிரீமிலேயர் என்ற கருதுகோளுக்கு சி.பி.எம். ஆதரவு என்பது, மேட்டுக்குடியினரால் பரவலாக ஆதரிக்கப்படுகிறது. மண்டலின் முதலாவது காலகட்டத்தில் கூட (மண்டல் ஐ), சி.பி.எம். கிரீமிலேயர் திட்டத்திற்கு தனது வலுவான ஆதரவைத் தெரிவித்தது. இறுதியில் உச்சநீதிமன்றத்தால் கிரீமிலேயர் கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

"பொருளாதார அளவுகோலை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தொண்ணூறுகளில் சி.பி.எம். மட்டுமே முன்வைத்த கோரிக்கையை, தனது கிரீமிலேயர் பற்றிய விளக்கத்தில் உச்ச நீதிமன்றம் மிகுந்த கருணையுடன் ஏற்றுக் கொண்டது'' என்று 29.6.06 அன்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்' இதழில் சி.பி.எம். இன் தலைவர்களில் ஒருவரான சீதாராம் எச்சூரி குறிப்பிடுவதில் இருந்து புலனாவதைப் போல, தனது கண்டுபிடிப்பாகிய கிரீமிலேயர் கருதுகோள், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்டது என்பதில் அக்கட்சி மிகவும் பெருமிதம் கொள்கிறது.

மண்டல் I அய் மண்டல் II இல் நடத்த சி.பி.எம். மீண்டும் தயாராகிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் அடுத்த வரியிலேயே அவர், "உயர் கல்வியிலுள்ள பிற பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டிலும் இது இணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்'' என்று எழுதுகிறார். கம்யூனிஸ்டுகளின் மொழியில் சுரண்டல் அமைப்பினை ஓர் அங்கமாக நீதித்துறை கருதப்படும் நிலையில், கிரீமிலேயர் கருதுகோளை நீதிமன்றம் ‘மிகுந்த கருணையுடன்' ஏற்றுக்கொண்டு விட்டதாக ஒரு கம்யூனிஸ்டு கட்சி ஆறுதல் தேடிக் கொள்வது நிச்சயம் முரண்நகையான ஒன்றுதான். ‘மிகுந்த கருணையுடன்' என்ற வார்த்தையின் பயன்பாடு, கிரீமிலேயர் கருதுகோளுக்குச் சாதகமாக நீதிமன்றம் ஆணையிட்டிருக்காவிட்டால், பெருத்த அபாயம் விளைந்திருக்கும் என்று பொருள் தருவதாக இருக்கிறது. அத்தகைய பெருத்த ஆபத்து என்னவாக இருந்திருக்கும் என்பதை சி.பி.எம். தான் நமக்கு விளக்க வேண்டும்.

சி.பி.எம். அய். மட்டும் சொல்லி என்ன ஆகப்போகிறது? லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், மாயாவதி போன்ற பல சமூகநீதித் தலைவர்களே கூட, பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் இடஒதுக்கீடு குறித்த சி.பி.எம்.மின் நிலைப்பாட்டின் மீதான விமர்சனம் என்பது, கிரீமிலேயர் குறித்த கருதுகோள்களுக்கும், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்கும் எதிரான வாதங்களாகவும் இருக்கின்றன.

1) பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பொருட்டே இல்லையா?

இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதுப்பெயரில் அழைக்கப்பட்ட -இப்புதுப்பெயரில் சாதி என்பதற்குப் பதிலாக வகுப்பு என்பது பதிலீடு செய்யப்பட்டிருப்பதாலும், ‘பிற' என்பது தெளிவற்றதாக இருப்பதாலும் நாம் இப்பெயரோடு உடன்படாத போதும், சூத்திரன் என்பவன் பொருட்டில்லாத ஒருவனாகவே சி.பி.எம். கட்சிக்குத் தெரிகிறான். 2006ஆம் ஆண்டின் குடியரசு நாளையொட்டி வெளியான சி.பி.எம்.மின் ‘பீப்பிள்ஸ் டெமாக்கரசி' இதழின் சிறப்பிதழை வாசிக்கும்போது, பிற்படுத்தப்பட்டவர் என்பது சி.பி.எம்.இன் பார்வையில் எங்குமே இல்லை என்றே உணர முடிகிறது.

‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி' சிறப்பிதழில், நமது அரசியலின் குறிப்பான பிரச்சனை குறித்த சிறப்புக் கட்டுரைகள் உள்ளன; மறைந்த அனில் பிஸ்வாசின் கூட்டாட்சி அமைப்பை பலப்படுத்துவது குறித்த கட்டுரை; வேளாண்மையின் நெருக்கடி குறித்த உத்சா பட்நாயக்கின் கட்டுரை; பழங்குடியினர் போராட்டம் குறித்த பிமன்பாசுவின் கட்டுரை; வகுப்புவாதம் எதிர் மதச்சார்பின்மை என்பது குறித்த தீஸ்தா செடல்வாட்டின் கட்டுரை; ஏகாதிபத்தியமும் பொருளாதாரத் தன்னிறைவும் குறித்த சி.பி. சந்திரசேகரின் கட்டுரை; பெண்களின் பிரச்சனைகள் குறித்த சுதா சுந்தரராமனின் கட்டுரை; பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோரின் பிரச்சனைகள் குறித்த தோரட்டின் கட்டுரை; ஊடகங்களின் மக்கள் விரோத போக்கு குறித்த பி. சாய்நாத்தின் கட்டுரை மற்றும் பிரகாஷ் காரத், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மற்றும் ஜோதிபாசு ஆகியோரின் பொதுவான கட்டுரைகள். இவை தவிர அவ்விதழின் ஆசிரியரான சீதாராம் எச்சூரி தலையங்கம் எழுதியிருக்கிறார்.

இந்தியாவின் மக்கள் தொகையில் ஆகப்பெரும் பங்கை வகிக்கும் மக்களான இவர்கள் (பிற்படுத்தப்பட்டோர்) குறித்த சிறப்புக் கட்டுரையை விடுங்கள். மேற்கண்ட கட்டுரைகளை எழுதிய சி.பி.எம். தலைவர்களானாலும் சரி; பிற கட்டுரையாளர்களானாலும் சரி, ஒருவர் கூட திட்டும் நோக்கில் கூட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்ற வார்த்தைகளை ஓரிடத்திலும் பயன்படுத்தவில்லை.

சி.பி.எம்.மின் பார்வையில் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை தலையங்கத்திலிருந்து தொடங்கலாம். சீதாராம் எச்சூரி இவ்வாறு எழுதுகிறார்: "அரை நூற்றாண்டுக் காலமாக இடஒதுக்கீடுகள் இருந்தாலும், தலித்துகளின் அவல நிலை இன்னும் துயரம் தருவதாகவே தொடர்கிறது. கடுமையான ஒடுக்குமுறைகளுக்குள்ளான சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரின் வாழ்க்கை தொடரும் அதே வேளையில், பாலினங்களின் அடிப்படையிலான குற்றங்களும், பாரபட்சங்களும் அபாயகரமான அளவுக்கு அதிகரிப்பதைத் தெரிவிக்கும் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.'' பிற்படுத்தப்பட்டவர்களைப் பற்றி எந்த குறிப்பும் இதில் இல்லை.

பிரகாஷ் காரத் இவ்வாறு எழுதுகிறார் : "கிராமப் புறங்களில் உள்ள தலித் மக்களும் ஏழைகளும் எவ்வாறு நிலப்பிரபுத்துவ ஆதிக்கச் சாதி சார்ந்த சக்திகளால் வன்முறையாக வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடப்பட்டே ஆக வேண்டும். சமூக சமத்துவம் போன்ற ஒரு தோற்றத்தைக்கூட உறுதி செய்ய இக்குடியரசால் இயலவில்லை என்பது வெட்டவெளிச்சமானது. அரசியலமைப்புச் சட்டத்தால் நிவாரண நடவடிக்கைகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு இருந்த போதிலும், தலித் மக்கள் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே நீடிக்கிறார்கள். 8.4 கோடி மக்கள் தொகையுள்ள பழங்குடியினர், நிலப்பிரபுத்துவ வட்டிக்கடைக்காரர் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் கூட்டணியால் கொடிய சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள்.'' இங்கேயும் பிற்படுத்தப்பட்டவர்களைப் பற்றி ஒரு குறிப்பும் இல்லை.

ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் கட்டுரையில் பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் குழுக்களின் அவல நிலை என்ற பகுதியில் பின்வருமாறு எழுதுகிறார்: "இன்றும் கூட நமது விவசாயக் கூலிகளில் பெரும்பகுதியினர் பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். சொத்துரிமையையும், சமூக நன் மதிப்பையும் இவர்களுக்கு வழங்க நிலச்சீர்திருத்தம் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டும்.'' இங்கும் பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்து ஒரு வார்த்தையும் இல்லை.

“சாதிய அடக்குமுறையும் பழங்குடியினர் மீதான அடக்குமுறையும் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன'' என்று ஜோதிபாசு போகிற போக்கில் எழுதுகிறார். வேளாண்மை நெருக்கடி குறித்த தனது கட்டுரையில், தலித் மக்கள் மீதான வன்முறைகளைக் குறிப்பிடுகிறார் உத்சா பட் நாயக். இங்கேயும் பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றிய குறிப்பு எதுவுமில்லை. வேளாண்மை நசிந்து போனதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்ற உண்மையைக் கூட இப்பெரிய பொருளாதார நிபுணர் ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டார்.

இந்திய விவசாயிகள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கின்ற சூழலில், உத்சா பட்நாயக் போன்ற புகழ் பெற்ற பொருளாதார நிபுணர், பிற்படுத்தப்பட்டவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடாதது மிகவும் விந்தையான ஒன்று. பிமன் பாசு தனது கட்டுரையில், சாதிவாத அல்லது தலித் தலைவர்களை நிலச்சீர்த்திருத்தத்தில் அக்கறை இல்லாதவர்கள் என்பதற்காக விமர்சிக்கிறார். அவர் தலித் தலைவர்களை விமர்சிக்கிறார்; ஆனால், பிற்படுத்தப்பட்ட தலைவர்களையோ சாதியவாதிகள் என்று பெயரிடுகிறார். பிற்படுத்தப்பட்டவர் என்று உச்சரிப்பதால் வாய் அசுத்தமாகி விடும் என்று அவர் கருதுகிறாரோ என்று தோன்றுகிறது. ஆதிக்க சாதித் தலைவர்களிடம் இருந்து தலித் தலைவர்களை எவ்வாறு வேறுபடுத்துகிறார் என்பதும் தெளிவாக இல்லை.

பெண்கள் மீதான சுரண்டல் குறித்த தனது கட்டுரையில் சுதா சுந்தரராமன், பிற்படுத்தப்பட்ட பெண்களிடம் சிறிதும் பரிவுணர்ச்சியைக் காட்டவில்லை. தோரட் இவ்வாறு எழுதுகிறார்: "பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கும், மற்ற பிரிவினருக்கும் இடையிலான ஒப்பீட்டளவிலான பொருளாதார நிலை குறித்த தரவுகள், ஏழ்மை மற்றும் அதன் பிற அம்சங்களான சொத்துகள் வைத்திருப்பது, கல்வி, ஊதியம் ஈட்டுவது, சுகாதார நிலை மற்றும் அரசியல் அதிகாரத்தில் பங்கெடுப்பது போன்றவற்றில் உரிமையற்ற நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றத்தாழ்வுகள் 2000இல் நிலவுவதைத் தெரிவிக்கின்றன.”

'பிற்படுத்தப்பட்டவர்கள் என்று குறிப்பிடாமல் இருப்பதில் தோராட் மிகுந்த கவனமாக இருக்கிறார். அவர்களை பிற பிரிவினர் என்று அவர் அழைக்கிறார். பிற்படுத்தப்பட்டவர் என்ற வார்த்தையை எழுதிய ஒரே ஒரு எழுத்தாளர் தீஸ்தா செடல்வாட் மட்டுமே. "நமக்கிடையே சலுகை கிடைக்கப் பெறாதவர்களாயிருக்கும் இந்தப் பிரிவினர் பெரும்பாலும், தலித்துகள், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் கிறித்துவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் புதிய பவுத்தர்கள் ஆவர்'' எனக் குறிப்பிடுகிறார் அவர்.

இது, பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த மவுனத்தின் ஒரே ஒரு எடுத்துக்காட்டு அல்ல. இடஒதுக்கீடு குறித்த சர்ச்சை மய்யப்பகுதியை அடையும்போது மட்டும்தான் அக்கட்சி பிற்படுத்தப்பட்டவர்கள் மீது முடுக்கிவிடப்படுகிறது. 2005இல் நடைபெற்ற சி.பி.எம்.இன் 18ஆவது காங்கிரசில் இயற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஓரிடமும் இல்லை. கடந்த 15 ஆண்டுகளில் அதாவது மண்டல் I க்குப் பிறகு பா.ஜ.க. போன்ற கட்சியைக் கூட, கட்சியின் அதிகார மட்டத்தில் முக்கியமான இடங்களில் பிற்படுத்தப்பட்ட தலைவர்களைக் கொண்டு வர நிர்பந்திக்கும் அளவுக்கு, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பெரிய அரசியல் சக்தியாகப் பரிணமித்திருக்கிறார்கள். இருந்தாலும் சி.பி.எம்.மால் பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்து பாராமுகமாய் இருக்க முடிகிறது.

கொந்தளிக்கும் கடலான இந்திய அரசியலை பிற்படுthதப்பட்டவர்கள் இல்லாமலே கடக்க முடிவது, சி.பி.எம்.இன் வேலைத்திட்டத்தில் எடுப்பாகத் தெரிகிறது. கட்சியின் முக்கியமான அனைத்து ஆவணங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று ஒருபோதும் குறிப்பிடப்படுவதில்லை. பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கக் கட்சி வருவது, அவ்வாறு ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்னும் போது மட்டும்தான். இல்லையெனில் கட்சியின் வேலைத்திட்டம் போன்ற முக்கியமான ஆவணத்திலும், கட்சி காங்கிரசில் இயற்றப்படும் அரசியல் தீர்மானத்திலும் பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்து எதுவும் பேசாமல் இருப்பது எப்படி சாத்தியமாகிறது? இந்திய மக்கள் திரளின் மிகப்பெரிய பகுதியான பிற்படுத்தப்பட்டவர்களை, ஓர் அரசியல் கட்சி அதுவும் கம்யூனிஸ்டு கட்சி அசட்டை செய்ய எப்படித்தான் முடிகிறது? வெளிப்படையான வெறுப்பை விடவும் மோசமானது மவுனம்.

தலித் மக்கள் மீதான சுரண்டல் வெளிப்படையானதாகவும், எளிதில் காணக்கூடியதாகவும் உள்ளது. ஒரு பிற்படுத்தப்பட்டவன் சந்திக்கும் சாதிய ஒடுக்குமுறை அவ்வளவு வெளிப்படையானதல்ல. பிற்படுத்தப்பட்டவர்களின் வீடுகள் எரிக்கப்படுவதில்லை; அவர்கள் வீட்டுப் பெண்கள் எளிதாகப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதில்லை; கோயில் நுழைவு அவர்களுக்கு மறுக்கப்படுவதில்லை; தேநீர்க் கடைகளில் அவர்களுக்கென தனிக்குவளை வைக்கப்படுவதில்லை; இருந்தாலும் மிகவும் நுட்பமான முறையில் அவர்கள் சாதிய ஒடுக்குமுறைகளைச் சந்திக்கிறார்கள்.

நிர்வாக நடைமுறைகள், கொள்கை முடிவுகள் போன்றவற்றின் மூலம் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் கடிவாளமிடப்பட்டதாக இருக்கிறது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அதிகார மட்டம், ஊடகங்கள், நீதித்துறை, தொழில், வணிகம், தனியார் நிறுவனங்கள், அண்மைக்கால வரவாகிய அறிவு சார்ந்த தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளி விவரங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் வெளிப்படையான பாரபட்சத்தை முழுமையாகப் புலப்படுத்தும்.
-அடுத்த இதழிலும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com